மகாத்மாவின் கனவு நனவாகுமா?

தெய்வ பக்திக்கு அடுத்தபடியானது தூய்மை. நாட்டில் தூய்மையைப் பேணுவதற்காகவும், பல்வேறு நோய்களுக்குக் காரணியாகத் திகழும் திறந்தவெளியில் மலம் கழிக்கும்

தெய்வ பக்திக்கு அடுத்தபடியானது தூய்மை. நாட்டில் தூய்மையைப் பேணுவதற்காகவும், பல்வேறு நோய்களுக்குக் காரணியாகத் திகழும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையை ஒழிப்பதற்காகவும் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு காந்தி ஜயந்தியன்று (அக்.2) அறிமுகப்படுத்தியதுதான் தூய்மை பாரத திட்டம்.
நாடு முழுவதும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிக்குள், அதாவது காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் விழாவுக்குள் அவரது கனவான தூய்மை பாரதம் என்ற இலக்கை நனவாக்கும் வகையில், ரூ.1.96 லட்சம் கோடி மதிப்பீட்டில், 9 கோடி கழிவறைகளைக் கட்டும் உன்னத நோக்கில், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரையில் 8 கோடியே 60 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கையை 55 கோடியில் இருந்து, 15 கோடிக்கும் கீழாகக் குறைத்துவிட்டதாகவும் அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தைப் பொருத்தவரை, இந்தத் திட்டம் சாதகமான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 52 லட்சத்துக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டு, 32 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையிலிருந்து விடுபட்டிருக்கின்றன. நிகழாண்டு காலவரையறைக்குள் 100 சதவீத இலக்கை தமிழகம் எட்டும் என்று எதிர்பார்க்கலாம். 
அதேவேளையில், தூய்மை பாரத திட்டத்தின்கீழ், 100 சதவீத இலக்கை எட்டிவிட்டதாகக் கூறப்படும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில், இன்னமும் கிராமப்புறங்களில் இந்தத் திட்டம் போதியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை பொருளாதார ஆய்வு நிறுவனம் (ரைஸ்) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. 
அதாவது, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் இந்தத் திட்டத்தின்கீழ் 98.97 சதவீத இலக்கை எட்டியுள்ள பிகார் போன்ற வடமாநிலங்களில் ஊரகப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கழிவறைகள் கட்டப்பட்ட போதிலும், 44 சதவீதத்துக்கும் மேலானோர் இன்னமும் திறந்தவெளியிலேயே இயற்கை அழைப்புகளுக்கு பதிலளிப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கழிவறைகள் கட்டுமானத்தில் நாம் இலக்கை நோக்கி முன்னேறினாலும், பொதுமக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது தெரிகிறது.
மத்தியப் பிரதேசத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான கிராமங்களில், தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் வெறும் செங்கற்களின் பிணைப்பாகத்தான் காட்சியளிக்கின்றனவே தவிர, அதன் பயன்பாட்டை நிறைவு செய்யவில்லை.
ஒருசில கிராமங்களில் தூய்மை பாரத கழிவறைகள் பொருள்களைத் தேக்கி வைக்கும் பண்டகசாலைகளாகவும், கால்நடைகள், நாய்களின் புகலிடமாகவும் காணப்படுகின்றன. கழிவறைகள் தவிர்க்கப்படுவதற்குத் தண்ணீர் பிரச்னையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் அண்மையில் எதிரொலித்தது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, சுகாதாரம் என்பது மாநிலம் சார்ந்த விவகாரம். திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசிடமே உள்ளதால், அதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், நிதியுதவியையும் மத்திய அரசு நல்கும் எனத் தெரிவித்தது. 
ஆகையால், வளமான சுற்றுச்சூழலை நிறுவுவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது திண்ணம்.
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு பிரசாரத்துக்காக மட்டுமே இதுவரை ரூ.1,300 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2015-16-ஆம் ஆண்டில் ரூ.147 கோடி வரை செலவிடப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.527 கோடி வரை விழிப்புணர்வு பிரசாரத்துக்காக செலவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசு எவ்வளவுதான் திட்டங்களை வகுத்து, கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கீடு செய்து, அரசியல் தலைவர்களையும், திரையுலகப் பிரமுகர்களையும், விளையாட்டு வீரர்களையும் விளம்பரத் தூதர்களாக நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அடிமட்ட அளவில் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படாத வரையில், சுகாதாரமான இந்தியா என்ற இலக்கு எட்டாக்கனியாகவே நீடிக்கும். 
மேலும், தூய்மை பாரத விழிப்புணர்வு என்ற பெயரில், ஊடக வெளிச்சத்துக்காக நகர்ப்புறங்களில் மட்டுமே பள்ளி மாணவர்கள், தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு கைகளில் துடைப்பங்களை ஏந்தி, விழிப்புணர்வு பேரணி நடத்துவதால் எந்தவிதப் பயனும் ஏற்பட போவதில்லை.
திட்டத்தின் பிரதான இலக்கான ஊரகப் பகுதிகளில் அதன் நோக்கத்தை அடைய வேண்டுமாயின், பெண்களிடம் குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தத்தம் குடும்ப உறுப்பினர்களிடம் அதன் நோக்கத்தைக் கொண்டு சென்றால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.
இதன் மூலம் சுதந்திரமான இந்தியா என்பதைக் காட்டிலும், சுகாதாரமான இந்தியா என்ற காந்தியடிகளின் கனவை நாம் அனைவரும் எளிதில் நனவாக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com