காலனும் அஞ்சக் கலக்கிய மராட்டன் - வீர சாவர்க்கர்

இந்திய விடுதலைப் போராட்ட போராளிகளிலேயே 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒரே போராளி வீர சாவர்க்கர்.


இந்திய விடுதலைப் போராட்ட போராளிகளிலேயே 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒரே போராளி வீர சாவர்க்கர். 28.05.1883 அன்று மராட்டிய மாநிலத்திலுள்ள நாசிக் நகருக்கு அடுத்திருந்த பாகூர்க் கிராமத்தில் தாமோதர பந்தனுக்கு மகனாகப் பிறந்தார். சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேசபந்தன். இளைய சகோதரர் பலவந்த நாராயணன். மூவருமே பூலோக நரகம் எனச் சொல்லப்படுகின்ற அந்தமான் சிறையில் தள்ளப்பட்டவர்கள்.
சாவர்க்கர் பள்ளி மாணவனாக இருந்த காலத்தே மித்திர மேளா (நண்பர்கள் சங்கம்) என்னும் ரகசிய அமைப்பை உருவாக்கி, பள்ளி மாணவர்களிடத்தே விடுதலை வேட்கையை ஊட்டினார். பின்னர் புணேயில் பெர்குசன் கல்லூரியில் படித்த காலத்தே, அபிநவ பாரத் என்னும் பாசறையை உருவாக்கி, மாணவர்களை நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராட வைத்தார்.
லண்டனில் இந்தியா ஹவுஸில் தங்கிய சாவர்க்கர், அங்கு இந்தியச் சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி, புரட்சியாளர்களுக்கு மாஜினி வரலாற்றையும் கரிபால்டி வரலாற்றையும் மொழிபெயர்த்துக் கொடுத்தார். ஆயுத பலத்தால்தான் ஆங்கிலேயரை அகற்ற முடியும் எனத் தீர்மானித்த சாவர்க்கர், வெடிகுண்டு தயாரிக்கும் முறையையும், கொரில்லா போர்முறைகளையும் போராளிகளுக்குப் போதித்தார்.
1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரை ஆங்கிலேயர்கள் சிப்பாய்க் கலகம் என வர்ணித்து, அதனைச் சரித்திரத்திலும் ஏற்றினர். ஆனால், சாவர்க்கர் அதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எனச் சான்றுகளோடு ஓர் அருமையான வரலாற்று ஆவணத்தைக் கொணர்ந்தார். அதனுடைய ஏட்டுச் சுவடிகள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டாலும், வ.வே.சு. அய்யரும், மேடம் காமா அம்மையாரும் ஐரோப்பிய நாடுகளில் அதனை அச்சிட்டு வெளிக் கொணர்ந்தனர். அந்த நூலை பகத் சிங் மூன்றாவது பதிப்பாக வெளியிட்டார்.
இதற்கிடையில் சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கர், புரட்சிகரமான பாடல்களை எழுதி, மிண்டோ - மார்லி தீர்மானங்களை எதிர்த்து மறியலில் ஈடுபட்டார். அதனால், ஆத்திரம் அடைந்த நாசிக் கலெக்டர் ஜாக்சன், கணேஷ் சாவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அவரை அந்தமான் சிறைக்கு அனுப்பினார். லண்டனின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த கர்சான் வில்லியே அதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்த விநாயக் தாமோதர சாவர்க்கர், லண்டனிலேயே கர்சான் வில்லியின் கணக்கை முடிக்கத் திட்டம் தீட்டினார். வீர சாவர்க்கரின் ராணுவச் சிந்தனை தீர்மானித்தபடி, மதன்லால் திங்க்ரா 01.07.1909 அன்று இரவு கர்சான் வில்லியின் கதையை முடித்தான். 
திங்க்ராவுக்குத் துப்பாக்கி கொடுத்தது சாவர்க்கர் என ஆங்கிலேய அதிகாரிகள் நம்பியதால், இந்தியா ஹவுஸை விட்டு அவரை வெளியேற்றினர். அதற்கடுத்து அவர் எந்த விடுதியிலும் தங்க முடியாதவாறு ஆதிக்க வர்க்கம் அவரைத் துரத்தித் துரத்தி அடித்தது. உணவின்மையும் உறக்கமின்மையும் அவரைக் கடுமையான நோய்க்கு உள்ளாக்கின. வெல்ஸ் எனும் இந்திய மருத்துவரின் பராமரிப்பில் படுத்த படுக்கையானார். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அவருடைய நண்பர்கள், அவரைப் பாரிசுக்கு அனுப்பி வைத்தனர். 
சாவர்க்கரின் அர்ப்பணிப்பால் அவருடைய குடும்பம் அல்லோகல்லோலப்பட்டது. வீர சாவர்க்கரின் இளைய தம்பி நாராயண சாவர்க்கர் வைசிராய் மிண்டோவைக் குண்டுவீசி கொல்ல முயன்றதாக கலெக்டர் ஜாக்சன் பொய்க் குற்றஞ்சாட்டி, அந்தப் பதினேழு வயது சிறுவனை நாசிக் சிறையில் அடைத்தான். ஜாவர் சமஸ்தானத்தில் கார்வாரி வேலை பார்த்த வீர சாவர்க்கரின் மாமனார் சிபலங்கர் பணியிலிருந்து துரத்தப்பட்டார். இந்த அநியாயங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஆனந்தலட்சுமணகன்ஹேரே என்ற இளைஞன் கலெக்டர் ஜாக்சனை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்றான்.
இதற்கெல்லாம் மூல காரணம் வீரசாவர்க்கரே என முடிவு கட்டிய ஆங்கில அதிகாரிகள், அவரைப் பாரிசில் கைது செய்து இலண்டன் கொண்டு வந்தனர். லண்டனில் சாவர்க்கர் இருப்பது தங்களுக்கு ஆபத்து என எண்ணிய அதிகார வர்க்கம், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, அந்தமானில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்து கப்பலேற்றினர். 
அந்தக் கப்பல் மார்செலைஸ் துறைமுகத்தில் நின்றபோது, தொலைநோக்குக் குழாய் வழியாக வெளியேறிக் கடலில் குதித்தார்; பனிக்கடலில் நீந்தினார்; கரைக்கு வந்து 12 மைல் தொலைவுக்கு ஓடினார். சாவர்க்கருக்கு தகவல் சொல்லி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் சொன்ன மேடம் காமா அம்மையார், வ.வே.சு. அய்யர் போன்ற போராளிகள் தாமதமாக அந்த இடத்திற்கு வந்ததால், அங்குக் காத்திருந்த ஆங்கிலேய காவலர்கள் சாவர்க்கரை சிறை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். இந்தியாவில் எதிர்த்தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து, அந்தமான் செல்லுலர் சிறையில் தள்ளினர். 
வீர சாவர்க்கரை அணுஅணுவாகச் சித்ரவதை செய்வதற்கென்றே டேவிட் பார்ரி என்ற ஜெயில் வார்டனை ஆங்கில அரசு ஏற்பாடு செய்தது. மற்ற சிறைக் கைதிகளுக்குக் கைகளிலும் கால்களிலும்தான் விலங்கு. ஆனால், சாவர்க்கருக்குக் கழுத்தைச் சுற்றி ஒரு சங்கிலி புறப்பட்டு (ஸ்டெதாஸ்கோப்பைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல்) இரண்டு கால்களிலும் பூட்டப்பட்டிருக்கும். 
செல்லுலர் சிறை சைக்கிள் சக்கரத்திலுள்ள கம்பிகள் போல் கட்டப்பட்டிருந்தது. ஓர் அறையில் இருக்கும் கைதி, இன்னொரு கைதியைப் பார்க்க முடியாது. சாவர்க்கருக்கு மூன்றாவது மாடியில் அறை எண் 7 ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் இருக்கும் கைதிதான் நாளும் தூக்கில் போடப்படும் கைதிகளை நேரடியாகப் பார்க்க முடியும். தூக்குப் போடப்படும் அறையில் மூன்று தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டேயிருக்கும். 
தினமும் தூக்கில் போடப்படும் கைதிகளைப் பார்த்துப் பார்த்தே, சாவர்க்கர் மனநோயாளியாக வேண்டும் என்பது டேவிட் பார்ரியின் இலக்கு. 
ஆனால், ஒரு கைதி தூக்கிலிடப்படும்போது அந்தக் கோரக் காட்சியைக் காணும் சாவர்க்கர், பாரத மாதா கி ஜே, இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிடுவார். சாவர்க்கரின் குரல் ஒலித்தால், ஒரு போராளி தூக்கிலிடப்பட்டார் என மற்ற போராளிகள் உணர்ந்து கொள்வர். அந்தக் குரலைக் கேட்டவுடன் சிறையின் 698 அறைகளிலிருந்தும் அதே கர்ஜனை கம்பீரமாக ஒலிக்கும். உடனே, டேவிட் பார்ரி, சாவர்க்கரின் அறைக்கு வந்து கையாலும், காலாலும் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டிவிட்டுப் போவான்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு நாளில் 2 முறைகள்தாம் இயற்கைக் கடன்களைக் கழிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அறையிலும் இரண்டு பானைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்று, குடிதண்ணீருக்காக. மற்றொன்று, இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காக. 
கொடுக்கப்பட்ட பணிகளிலேயே கடுமையான, கொடுமையான பணி செக்கிழுத்து எண்ணெய் ஆட்டுதல். கனமான செக்கு என்பதால், மார்பைச் சுற்றி ஒரு பக்கக் கயிறும் செக்கின் சக்கரத்தைச் சுற்றி மறு பக்கக் கயிறும் இருக்குமாறு அமைத்துக் கொண்டு செக்கைச் சுழற்ற வேண்டும். அதில் ஒரு நாளைக்குள் 30 பவுண்டு எண்ணெய் ஆட்டாவிட்டால், அந்தப் போராளிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர். 
இத்தனை அராஜகங்களையும் தாங்கிக்கொண்டு வீர சாவர்க்கர் தம் அண்ணிக்கு மரணசாசனம் என்னும் தலைப்பில் எழுதிய கடிதம் இமயமலையில் செதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அக்கடிதம் வருமாறு: நான் இறந்து, எனது சவம் எரிக்கப்பட்டு அந்தச் சாம்பல் அந்தமானின் துக்க ஓடையில், துயரமாகிற கண்ணீரால் அடித்துக்கொண்டு போகிறபோது பயங்கர நாவுகொண்டு பேசினாலும் சரி அல்லது கங்கையின் புனிதப் பளிங்கு நீரோடையில் நடுநிசியில் நட்சத்திர கணங்கள் செய்கிற நர்த்தனங்களோடு கொஞ்சிக் குலவினாலும் சரி, எனக்கு இரண்டும் ஒன்றுதான். மராத்தியில் எழுதப்பட்ட இந்த மடலைத் தமிழில் மொழிபெயர்த்து பாலபாரதி இதழில் பிரசுரித்தவர் வ.வே.சு. அய்யர். காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டன் எனப் பாரதி பாடியது, சாவர்க்கரை எண்ணித்தானோ!
இத்தனை அராஜகங்களையும் செய்த டேவிட் பார்ரியின் கதி என்ன தெரியுமா? பணியில் இருக்கும்போதே முழங்காலுக்குக் கீழே இரண்டு கணுக்கால்களும் செயலிழந்தன. எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் போகவே, கடைசியாக அவனை அயர்லாந்துக்கே அழைத்துக் கொண்டு போவதாக முடிவெடுத்தனர். கப்பலில் பயணிக்கும்போதே நோய் முற்றி, இயற்கை எய்தினான் டேவிட் பார்ரி. இறந்த நாளிலிருந்து அயர்லாந்து செல்வதற்குப் பல நாள்கள் ஆகும் என்பதால், அவனுடைய பிணத்தைச் சாக்குமூட்டையில் கற்களுக்கு இடையே கிடத்திக் கடலில் வீசி எறிந்தனர். 
பதினான்கு ஆண்டுகளை அந்தமான் சிறையிலே கழித்த சாவர்க்கர், கடைசியாக வைசிராய்க்கு ஒரு கருணை மனு அளிக்கிறார். அந்தக் கருணை மனுவிலும் அவருடைய மரபார்ந்த வீரம் கொப்பளிக்கும். அரசு எங்களை விடுதலை செய்து ஒரு வாய்ப்பைத் தரட்டும்.
இங்கிலாந்து இந்தியாவின் அடிமை விலங்கை ஒடிக்க ஆர்வம் காட்டுவதால், நாங்கள் இந்திய இராணுவத்தில் சேர்ந்து, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடத் தயாராய் இருக்கிறோம். எனவே, எங்களை விடுதலை செய்யுங்கள் என்பதுதான் அந்தக் கருணை மனு. 
அந்தக் கருணை மனுவை ஊடுருவிப் பார்த்த ஒரு நிபுணர், இது ஒளரங்கசீப்புக்கு வீர சிவாஜி எழுதிய மடலைப் போன்றதாகும் என விமர்சித்தார். அரசும் 06.01.1924 அன்று விடுதலை செய்தது. 
அந்தமான் சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசமும் இரத்தினகிரியில் 14 ஆண்டுகள் அஞ்ஞாதவாசமும் செய்த சாவர்க்கர், 1963- ஆம் ஆண்டு மும்பையில் நோய்ப்படுக்கையில் விழுந்தார். மருத்துவர்கள் கொடுத்த மருந்தை அருந்த மறுத்தார்; உணவும் உட்கொள்ள மறுத்தார். நான் வந்த வேலை முடிந்துவிட்டது. இனி இந்த உலகில் இருப்பது நியாயமில்லை எனக் கூறி, 22 நாள்கள் உண்ணாநோன்பிருந்து 26.02.1966 அன்று இறையடி எய்தினார்.
ரோஜாவுக்கு முட்கள் இருக்கின்றன என்பதால், அதனை யாரும் சுவாசிக்கத் தவறுவதில்லை; நீருக்கு நுரையுண்டு என்பதால், அதனை யாரும் நேசிக்கத் தவறுவதில்லை.
ஆனால், வாழ்நாள் முழுமையும் நாட்டு விடுதலைக்காகத் தியாகத் தழும்புகளை ஏந்திய மாவீரன் சாவர்க்கர், கடைசிக் காலத்தில் இந்த மண்ணின் மதத்தைத் தீவிரமாக ஆதரித்ததாலும், மகாத்மா காந்தியடிகளின் கொலையோடு சம்பந்தப்படுத்தி வழக்குப் பதிவு செய்யப்பட்டமையாலும், அவருடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை தழும்பேறிக் கிடக்கின்ற வீர வரலாற்றைப் படிக்க மறுக்கின்றனர்; பரிசீலிக்கத் தவறுகின்றனர். நீதிமன்றத்தாலும், கபூர் கமிஷனாலும் நிரபராதி என அறிவிக்கப்பட்ட பின்னரும், நேசிக்க மறுக்கின்றனர்.
தேசபக்தி என்பது மகாவிரதம். தாயகத்திற்காகச் சுதந்திர வேள்வித் தீயில் நாம் அனைவரும் வெந்து சாம்பலாக உறுதி ஏற்போம் என அந்தமான் சிறைச்சாலையில் முழங்கிய அந்த மாவீரனின் வரலாறு, இன்று சிலரின் செவிப்பறைகளைத் தட்டுவதே இல்லை! 

கட்டுரையாளர்:
பேராசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com