நடுப்பக்கக் கட்டுரைகள்

சிறு குடும்பம், பெருகும் இன்பம்!

பொ. ஜெயசந்திரன்

இன்று (ஜூலை 11) உலக மக்கள்தொகை விழிப்புணர்வு தினம். மக்கள்தொகை வளர்ச்சியைப் பற்றி உயிரியல், சமூகவியல், பொருளியல், அரசியல் போன்ற கூறுகளோடு ஒப்பிட்டு ஆய்ந்து பல கருத்துகள் உலக அளவில் வெளியிடப்படுகின்றன. மக்கள் தொகையைப் பற்றிய பல கோட்பாடுகள் பல அறிஞர்களால் 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எடுத்துரைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 
 பானையில் உள்ள எலியைப் போன்று மக்கள்தொகையை மனிதன் பெருக்குகிறான்' என தொன்மை அரசியல் பொருளியல் அறிஞர் இராபர்ட் தாமசு மால்தசு குறிப்பிட்டு கருத்துப் போரினைத் தொடங்கினார். 
1830-ஆம் ஆண்டு மால்தசு முன்மொழிந்த மக்கள்தொகை கோட்பாட்டில், பெருக்கல் எண் முறையில் (2, 4, 16) மக்கள் பெருகுகிறார்கள். நமது நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்' (கி.பி.மூன்றாம் நூற்றாண்டு) அயினி அக்பரி' ( 16-ஆம் நூற்றாண்டு) ஆகிய நூல்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1867-ஆம் ஆண்டு முதல் 1872-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. 
அந்தக் கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று கூறப்பட்ட போதிலும்கூட அது காலத்துடன் இணைந்ததாக இல்லை. அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தங்களது காலனி ஆதிக்கத்தில் உள்ள மக்களின் அளவு, தன்மை ஆகியவற்றை அறிய வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கருதியதால் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டுமொத்த பகுதியிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும், அதன் பிறகு நவீன முறையிலான கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்' என்ற புதிய பதவி ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித வாழ்க்கையின் பெரும் பகுதியை இன்றைய காலகட்டத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மக்கள்தொகை உருவெடுத்திருக்கிறது. உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, கடந்த நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் மெதுவாக பிறப்பு, இறப்பு விகித மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1987-ஆம் ஆண்டு ஜீலை 11-ஆம் தேதியன்று, உலக அளவில் மக்கள்தொகை 500 கோடியைத் தாண்டியதைக் கருத்தில் கொண்டு அந்தத் தினத்தை உலக மக்கள்தொகை விழிப்புணர்வு தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இன்றைய தினத்தில் மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு, பள்ளி கல்லூரிகளில் பேரணி, கிராமங்களில் நாடகம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உலக நிலப்பரப்பில் 2.5 சதவீதத்தைப் பெற்றுள்ள இந்தியா, 16 சதவீத மக்கள்தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது.
உலக மக்கள்தொகையில் 6 பேரில் ஒருவர் இந்தியர் என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் இருக்க இடம், உண்ண உணவு, நல்ல குடிநீர் உள்ளிட்ட அனைத்துக்கும் பற்றாக்குறை மிக விரைவில் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 
இதற்கு முக்கியக் காரணம் குடும்பக் கட்டுப்பாட்டை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை. குடும்பக் கட்டுப்பாடு முறை என்பது தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பது ஏட்டளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் போதிலும், உண்மையில் அந்தத் திட்டம் மருத்துவக் கவனிப்பின் தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல்தான் செயல்படுத்தப்படுகிறது.
மக்கள்தொகை பெருக்கத்தின் வேகம்தான், இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது; எனினும், இலக்கு நிர்ணயித்துக் கொண்டும், நிதியுதவி வழங்கியும் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற பழங்கால கொள்கையையே இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம். குடும்பக் கட்டுப்பாட்டு முறையில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.
இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு கணக்கின்படி 20 முதல் 24 வயது வரையுள்ள பெண்களில் 47.4 சதவீதத்தினர் 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது அதிர்ச்சியான புள்ளிவிவரம். அது தற்போது ஓரளவு குறைந்துள்ளது; எனினும்,  இன்னும் குறைய வேண்டும். 
சுமாராக ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை  -- இப்படி சொல்லிக்கொண்டே போன ôல் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் மாதத்துக்கு  ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையும், அதுவே நகரமாக இருந்தால் மாதத்துக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையும் கட்டாயம் தேவைப்படும். ஒரு குழந்தை பெற்றாலே இந்த நிலைமையென்றால், இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வீட்டில் பெற்றோருக்கு குறைந்தது 5 வாரிசுகள் இருக்கும்; அப்படியிருந்தும் அன்று நலமுடன் வாழ்ந்தனர். 
இப்போது தலைகீழாக இருக்கிறது. ஆசைக்கு பெற்றுவிட்டு அவதிப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்; தயக்கம் ஏதும் இன்றி மகளிர் மருத்துவரின் அறிவுரையைப் பெறுங்கள். திட்டமிட்ட குடும்பம், இனிமையான குடும்பம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT