திசை மாறும் தேர்தல் களம்!

மக்களாட்சிதான் மிக மோசமான ஆட்சி முறை. என்றாலும், அதை விட்டால் நமக்கு  வேறு வழி இல்லை:  ஏனெனில் பிற ஆட்சி முறைகள்

மக்களாட்சிதான் மிக மோசமான ஆட்சி முறை. என்றாலும், அதை விட்டால் நமக்கு  வேறு வழி இல்லை:  ஏனெனில் பிற ஆட்சி முறைகள் - மன்னராட்சி,  ராணுவ  ஆட்சி,  தனி மனித  சர்வாதிகார ஆட்சி  ஆகிய  அனைத்தும் மிக மிக மோசமானவை என்று ஜனநாயகத்தை ஆதரித்து விளக்கம் தந்தார் பிரிட்டனின் போர்க்காலப் பிரதமர், பேச்சாற்றல் மிக்க சர் வின்ஸ்டன் சர்ச்சில்.
மனிதர்  ஒவ்வொருவரும்  அடிப்படையில்  நல்லவரே. சந்தர்ப்பவசத்தால் அவர்களது சிந்தையில், செயலில் தவறு நிகழலாம்.  ஆனால், அவர்களைத் திருத்த முடியும்:  சரியான  பாதைக்குத் திருப்ப  முடியும்.  மனிதர்களை உள்ளடக்கிய சமுதாயத்தின் முடிவு எப்போதும் சரியாகவே இருக்கும் என்று மனிதனின் மீதும், மனித சமுதாயத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார் மகாத்மா காந்தி. சேவை செய்வதற்கும், தியாகம் புரிவதற்கும் தயாராக இருப்பவர்களே பொது வாழ்க்கைக்கு வர வேண்டும்' என்றார் பண்டித ஜவாஹலால் நேரு.
பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகள் நீண்ட நெடுங்காலமாகவே மக்களாட்சி முறையை ஏற்று ஆட்சி நடத்தி வருகின்றன.    கடந்த  72  ஆண்டுகளாக   ஜனநாயகத்தைக்  காத்துக் கடைப்பிடித்து வருகிறது இந்தியா.
மக்களாட்சி என்ற கட்டமைப்பு இந்தியாவில் மாறவில்லை;  ஆனால், அதில் களங்கமும், கரும்புள்ளியும் விழுந்து வருகின்றன.  உலக அரங்கில் அதன் மாண்பு குறையவில்லை; ஆனால் அதில் மாசு கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து வருகிறது. அதன் உயரம் அப்படியே உள்ளது.  ஆனால், அது வெளிப்படுத்தும் ஒளி மங்கி வருகிறது.
இந்தியாவில் 1952-இல் படிக்காதவர் எண்ணிக்கை 85 சதவீதம். இன்று கல்வி கற்றவர் எண்ணிக்கை 85 சதவீதம்.  படிப்பறிவில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  ஆனால், நாடாளுமன்ற நெறிமுறைகளைப் பேணிக் காப்பதில் அது பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை' என்றே பதில் வரும்.
முதலாவதாக தியாகம், தேசபக்தி, ஊருக்கு உழைக்கும் உயரிய பண்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவைதான் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான காரணிகளாக அன்று அமைந்தன.  ஆனால், இன்றோ ஆள்பலமும், அதிக பண பலமும், ஜாதி பலமும் அல்லவா வெற்றிக்கு வழிகோலுகின்றன.
இரண்டாவதாக அறிவாற்றலும், பேச்சாற்றலும் அரசியல் தளத்தில் அன்று பளிச்சிட்டன.  அவையே அடிப்படைத் தகுதிகளாக அமைந்தன.  பண்டித ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், ராஜாஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், ஜோதி பாசு, ஹிரேன் முகர்ஜி, ஏ.கே.கோபாலன், ஷியாமா  பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர் போன்றோர் தங்களது அறிவார்ந்த பேச்சாற்றலால்தான் பிரகாசித்தார்கள்.
தமிழகத்தில் தீரர் சத்தியமூர்த்தி, திரு.வி.க., வழக்குரைஞர் செங்கல்வராயன், தோழர் ஜீவா, பி. ராமமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,  முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் முதலிய  பலர்  தங்கள்  நாவன்மையாலும் நல்ல  பண்புகளாலும்  நாட்டு மக்களைக் கவர்ந்தனர்.
பேச்சாற்றலுக்கு  இடமில்லாத  தளமாக  அல்லவா  மாறிவிட்டது இன்றைய அரசியல்?  மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்கான இடம்தானே சட்டப்பேரவையும், நாடாளுமன்றமும்.  கூச்சல் போடுவதற்கும், குழப்பம் விளைவிப்பதற்கும் உரிய இடங்கள் அவை அல்லவே.
மூன்றாவதாக செயல் திறத்தால் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர் காமராஜர்.  தமிழகம் முழுவதும் சுற்றியதால் அல்லது ஒரு காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்டதால் தன் தொகுதிக்கே போகாமல் வெற்றி பெற்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.  கோமதி சங்கர தீட்சிதர் என்ற தியாகி, தேசபக்தர், எளிய சமூக சேவகர்; அவர் இருக்கும் வரை அம்பாசமுத்திரம் தொகுதி அவரிடம்தானே இருந்தது.  
எல்லோருக்கும் நல்லவர் எனப் பெயர் எடுத்த எஸ்.ஆர்.நாயுடு, எந்தக் கட்சியில் எந்த சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெற்றாரே...திமுக தலைவராக இருந்த கருணாநிதியும், முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரும் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றார்களே...இத்தகைய தலைவர்கள் இன்று எங்கே போனார்கள்?  வருங்காலத்திலாவது இத்தகைய தலைவர்கள் உருவாகி வர வேண்டும்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி 1915-இல் இந்தியா திரும்பினார்.  தாயக மண்ணை மிதித்தவுடன் தனி அரசியல் இயக்கம்  தொடங்கவில்லை.  அவர் ஆரம்பித்ததோ ஓர் ஆசிரமம்.  ஆமதாபாதுக்கு அருகில் சபர்மதி' நதிக் கரையில் அமைந்தது அது.  எளிய குடிசைகள் எழுந்தன.  ஆரம்பத்தில்  ஆசிரமவாசிகள் மொத்தம்  25 பேர்  மட்டுமே இருந்தனர்;  அவர்களில் 13 பேர் தமிழர்கள்.  25 நபர்களைக் கொண்டு இவர் என்ன செய்ய முடியும் என்று ஆரம்பத்தில் அனைவருமே  சந்தேகப்பட்டனர்; ஆனால், ஆரம்பத்தில் 25  பேரைக்  கொண்டுதான்  இந்தியா  பயணிக்கும்  திசையையே மாற்றத் திட்டமிட்டார் அந்தத் தியாகத் திருமகன்.
உழைப்பும், உண்மையுமே அவரது மூலதனம். அவரது வாழ்நாளில் சராசரியாக தினமும் சுமார் 18 கி.மீ. நடந்திருக்கிறார்.  1913 முதல் 1948 வரை 35 ஆண்டுகளில் அவர் நடந்தது சுமார் 79,000 கி.மீ எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இது உலகத்தை இரு முறை சுற்றி வந்ததற்குச் சமம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  உண்மையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர்கள் இன்றைய பொது வாழ்வில் அருகி வருகிறார்கள்.
1952 பொதுத் தேர்தலின்போது சாலை வழியாகவும், ரயில் மூலமாகவும் விமானத்திலும் நாடு முழுவதும் பண்டித நேரு சுற்றினார்.  ஒன்பதே நாள்களில் ஓர் மூலையிலிருந்து மறு மூலைக்குப் பயணித்தார். மொத்தத்தில் அவர் பயணம் செய்தது 40,233 கி.மீ.; அதில் விமானம் மூலம் 28,968 கி.மீ.; ரயில் மூலம் 2,575 கி.மீ.; கார் மூலம்  8,369 கி.மீ.;  படகில் பயணித்ததோ 145 கி.மீ.  அவர் தன் சுற்றுப் பயணத்தில் தூங்கிய நேரத்தைவிட பயணம் செய்த நேரம் அதிகம்.  பயணம் செய்த நேரத்தைவிட பேசிய நேரம் அதிகம்.  பேசிய பொதுக் கூட்டங்களோ 300-க்கும் அதிகமாம். பேச்சைக் கேட்டவர்களோ இரண்டு கோடிக்கும் அதிகம்.  தரிசிக்க' வந்தவர்களோ 5 கோடிக்கு மேல் இருக்குமாம்.
அத்தகைய நேரடி மக்கள் தரிசனம்' எங்கே போயிற்று இன்று?  ஊடகங்களின் ஊடுருவலால் உலகமே சுருங்கி விட்டது. ஆனால், நேரடி மக்கள் சந்திப்பு காணாமல் போனதே.  வாழும் மக்களின் நிலமும் தெரியாது,  நிலையும் தெரியாது. 
அப்படியே கூட்டங்கள் போட்டாலும், கூட்டி வந்த கூட்டமாயிற்றே. வாங்கும்  கூலிக்காக  அல்லவா  வருகிறார்கள் அவர்கள்?  உணர்வுப்பூர்வமான பேச்சுகள் ஒழிந்தல்லவா போயிற்று.  வாக்காளருக்கும் வேட்பாளருக்கும் இடையில் ஒட்டும் இல்லை, உறவும் இல்லாமல் போய்விட்டதே.  வாங்கும் பணத்துக்காக வாக்களிப்பது என்பது ஏற்றுக்  கொள்ளப்பட்ட  நெறிமுறை ஆகிவிடுமோ?
1957 பொதுத் தேர்தலின்போது,  அண்ணாவை பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு நிகராக இணையாக ஒப்பிட்டு ஒரு கழகப் பேச்சாளர் புகழ்ந்து பேசிவிட்டார்.  எப்படி ஒப்பிடலாம் எனக் கண்டனக் குரல்கள் எழும்பின.  அது கேட்டு அண்ணா சொன்னார்: நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்; நேரு பெருமகனோ கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்;  என்னை பண்டித நேருவுக்கு நிகராக ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்?' என்றார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஓர் இளம் காங்கிரஸ் பேச்சாளர், தியாக சீலர் பசும்பொன் தேவரை மறைமுகமாக பித்தளைக்குப் பெயர் பசும்பொன்னா' எனக் கேட்டு விட்டார். அதற்கு காமராஜர் கண்டனம் தெரிவித்ததோடு, ஐயா தேவர் பசும்பொன் மட்டுமல்ல:  அவர்  பத்தரை மாற்றுத் தங்கம்; என் வழிகாட்டியும் ஆவார்' எனப் புகழ்ந்தார்.
கோவில்பட்டி வ.உ.சி. மைதானத்தில் தேசிய இளைஞன் ஒருவர் ராமமூர்த்தியை கால் ஊனமானவர் என்றேனா; ஜீவாவை காது கேளாதவர் என்றேனா' என்று கூறி விட்டார்.  இத்தகைய தரக்குறைவான பேச்சுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் அன்றைய கட்சித் தலைவர்.
அன்று அவ்வாறு மேடை நாகரிகம்  மிளிர்ந்தது.  கண்ணியம் கடைப்பிடிக்கப்பட்டது. தலைமையிடம்  கண்டிப்பு காணப்பட்டது. ஆனால், இன்று தேசிய அளவிலும், மாநில அளவிலும் தொகுதி அளவிலும் தரக்குறைவான பேச்சுகள், தனி நபர் விமர்சனங்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.  இவை எல்லாம் வளர்ச்சியின் அடையாளங்களா? நாகரிக ஜனநாயகத்தின் நல்ல குறியீடுகளா? தேர்தல் களம் திசைமாறிச் செல்கிறதே; மக்களாட்சியின் விழுமியங்கள் மங்கி வருகின்றனவே.
17-ஆவது பொதுத் தேர்தலைப் பார்த்து உலகமே நம்மை வியந்து பாராட்டுகிறது. உண்மைதான். ஆனால், மக்களாட்சியின் உயரிய விழுமியங்களை நாம் காத்திருக்கிறோமா?  இல்லை  என்பதே பதில், அதற்காக நம்பிக்கை இழக்க வேண்டாம் நாம்.
இந்திய மண்ணுக்கென்று தனிப் பண்பும், பண்பாடும், கலாசாரமும், நாகரிகமும் என்றும் இயற்கையாகவே உண்டு.  புதைந்து கிடக்கும் அதனை மீண்டும் தோண்டி எடுப்போம். புத்துயிர் ஊட்டுவோம். அதனைத் தானே அண்ணல் காந்தி செய்தார்.  
அவர் வழியில் நடப்போம்.  திசை மாறும் தேர்தல் களத்தைத் திருத்துவோம். மக்களாட்சியின் மாண்பு  குறையாமல்  காப்போம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com