சரியும் உணவு தானிய உற்பத்தி! 

நடப்பாண்டு (2019-20) வேளாண் பருவத்தில் (ஜூன், ஜூலை) உணவு தானியங்கள் உற்பத்தி 28.34 கோடி டன்னாகக் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.


நடப்பாண்டு (2019-20) வேளாண் பருவத்தில் (ஜூன், ஜூலை) உணவு தானியங்கள் உற்பத்தி 28.34 கோடி டன்னாகக் குறையும் என மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம், அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு (2018-19) வேளாண் பருவத்தில் நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் உற்பத்தி 28.48 கோடி டன்னை எட்டி இருந்தது. இதன்படி அந்தப் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி புதிய சாதனை அளவை எட்டியது. இதற்கு முன் 2013-14-ஆம் ஆண்டு பருவத்தில் தானியங்கள் உற்பத்தி அதிகபட்சமாக 26.50 கோடி டன்னாக இருந்தது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டு வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தியை, கடந்த ஆண்டு பருவத்தின் அளவுடன் (28.48 கோடி டன்) ஒப்பிடும்போது 0.14 கோடி டன் குறைவாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் தனது மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
வேளாண் அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள மதிப்பீடுகள் வருமாறு: நடப்பாண்டு (2019-20) பருவத்தில் அரிசி உற்பத்தி 11.56 கோடி டன்னை எட்டும்; கடந்த ஆண்டு பருவத்தில் அது 11.29 கோடி டன்னாக இருந்தது. கோதுமை விளைச்சல் 9.97 கோடி டன்னில் இருந்து 10 கோடி டன்னாக அதிகரிக்கும்; எனினும் சிறு தானியங்கள் மகசூல் 8 சதவீதம் குறைந்து 4.70 கோடி டன்னில் இருந்து 4.33 கோடி டன்னாக சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகிலேயே பருப்பு உற்பத்தி இறக்குமதி, நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. மழையை நம்பி இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.
நடப்பு பருவத்தில் பருப்பு வகைகள் உற்பத்தி 2.54 கோடி டன்னிலிருந்து 2.32 கோடி டன்னாகக் குறையும். எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் 3.14 கோடி டன்னாக இருக்கும். கடந்த ஆண்டு பருவத்தில் அது 3.15 கோடி டன்னாக இருந்தது. பருத்தி உற்பத்தி 3.28 கோடி பொதிகளிலிருந்து (ஒரு பொதி என்பது 170 கிலோ பருத்தி கொண்டதாகும்) 2.76 கோடி பொதிகளாகக் குறையும். அதே சமயம் கரும்பு மகசூல் 37.99 கோடி டன்னிலிருந்து 40 கோடி டன்னாக உயரும்.
வரும் 2020-21-ஆம் ஆண்டு பருவத்தில் 10.5 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தி இலக்கு 11.60 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.63 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்ய மத்திய வேளாண் அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது; நடப்பு பருவ விளைச்சலைவிட இது சுமார் 2.41 கோடி டன் அதிகமாகும். சிறு தானியங்கள் மகசூல் இலக்கு 4.67 கோடி டன்னில் இருந்து 4.83 கோடி டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடக மாநிலத்தில் நெல் விளைச்சல் சரிந்ததால் அரிசி மூட்டைக்கு (100 கிலோ) ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது என்று மொத்த வியாபரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளைத் தவிர ஆரணி, செய்யாறு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் நெல் உற்பத்தியாகும் வயல்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தின் அரிசித் தேவையை கர்நாடகம் 60 சதவீதமும் தமிழகத்தின் பிற பகுதிகள் 40 சதவீதமும் பூர்த்தி செய்கின்றன.
கடந்த ஆண்டு போதுமான அளவு பருவமழை இல்லாததால் தமிழகம், கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது. இதன் காரணமாக சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரவேண்டிய அரிசி வரத்தில் 20 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே அரிசியின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. விலை உயர்வு காரணமாக அரிசி விற்பனையும் குறைந்துள்ளது என மொத்த வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கர்நாடகம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் மார்க்கெட்டுக்கு தினமும் 300 முதல் 400 டன் அளவில் அரிசி வரும்;  பருவ மழை போதுமான அளவுக்கு இல்லாததால் தமிழகத்தில் 40 சதவீத அளவுக்கு நெல் விளைச்சல் இருந்தது. இதே போன்று கர்நாடகத்திலும் 70 சதவீத அளவுக்கே நெல் விளைச்சல் இருந்தது என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 டன் அரிசி வருகிறது; கர்நாடகத்திலிருந்து 150 முதல் 200 டன் அரிசி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு அரிசி வரத்து 30 சதவீதம் குறைந்துள்ளது. அரிசியின் வரத்துக் குறைவால் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரியில் மொத்த விலையில் ரூ.5,200-க்கு விற்ற 100 கிலோ வெள்ளை பொன்னி ரூ.5,600 எனவும், ரூ.3600-க்கு விற்ற பிபிடி ரகம் ரூ.4,000 எனவும் ரூ.3400-க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி ரூ.3,800 எனவும் ரூ.2,600-க்கு விற்ற 045 ரக அரிசி ரூ.3,000 எனவும் ரூ.2,800-க்கு விற்ற இட்லி அரிசி  குண்டுகார் ரூ.3,400 எனவும் விலை அதிகரித்துள்ளது. இதற்கு  கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி, புயல், வெள்ளம் மற்றும் காவிரி நீர் பிரச்னை ஆகியவையே காரணம்.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. கடலோரப் பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் குடிநீரில் உப்பு கலந்து வருவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஏரிகள், குளங்கள், ஆறுகள் கால்வாய்கள் என எல்லாம் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலை நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி குறைவது என்பது தொடர்கதையாய் மாறிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com