பிரித்தலும் பேணிக் கொளலும்!

உலகம் முழுவதும் பல கட்சிகள் பிரிந்துள்ளன. தலைவர்களும் பிரிந்துள்ளனர். கட்சிகளின் பிரிவுகளுக்கும், தலைவர்களின் பிரிவுக்கும் காரணங்கள்

உலகம் முழுவதும் பல கட்சிகள் பிரிந்துள்ளன. தலைவர்களும் பிரிந்துள்ளனர். கட்சிகளின் பிரிவுகளுக்கும், தலைவர்களின் பிரிவுக்கும் காரணங்கள் இரண்டு. ஒன்று கொள்கை ரீதியான, சித்தாந்த ரீதியான, லட்சிய நோக்கத்துக்கான பிரிவு. மற்றொன்று தன் முனைப்பினால் ஏற்படும் பிரிவு. 
தலைமைப் பொறுப்பில் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர், அடுத்தகட்டத் தலைவருக்கு வழிவிடாவிட்டாலோ அல்லது இன்னாரால் தம் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் எனும் அச்சம் தலைமைப் பொறுப்பில் உள்ளவருக்கு ஏற்படுவதினாலோ பிளவும் பிரிவும் ஏற்படுகிறது.
காந்திஜியின் மீது கொண்ட மாறாப் பற்றினால், காங்கிரஸில் தம் பொது வாழ்வுப் பயணத்தைத் தொடங்கினார் ஜீவா. காரைக்குடி அருகில் உள்ள சிராவயல் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் காந்திஜியின் பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார் ஜீவா. தம் தொண்டன் ஜீவாவைக் காண சிராவயல் குக்கிராமத்திற்கே வந்தார் அண்ணல் காந்தியடிகள்.
ஜீவாவின் இளமைத் தோற்றத்தையும், ஆசிரமத்தின் பணிகளையும் கண்டு வியந்த அண்ணல் காந்தி, உங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்று கேட்டார்.  எனக்கென்று சொத்து ஏதும் இல்லை. இந்தியா தான் என் சொத்து என்றார் ஜீவா. 
இல்லை, இல்லை... நீங்கள்தான் இந்தியாவின் சொத்து என்று அகமகிழ்ந்து ஜீவாவைப் பாராட்டினார் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியிடம் இப்படிப் பாராட்டு பெற்ற ஜீவா, அவரை விட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்தபோது பிரிந்தார். 
காந்திஜியின் காலத்திலேயே காங்கிரஸிலிருந்து, காங்கிரஸ் சோஷலிச கட்சியை உருவாக்கினார் ஜெயபிரகாஷ் நாராயண். தேச விடுதலைக்குப் பின்னர், பிரஜா சோஷலிச கட்சியை உருவாக்கினார். அதிலிருந்து விலகி சர்வோதய இயக்கத்தில் இணைந்தார். 1970-களில் ஊழலுக்கு எதிரான மாணவர் புரட்சியை முழுமையாக  நிகழ்த்திக் காட்டினார் ஜெயபிரகாஷ் நாராயண்.
இந்திரா காந்தி மீது பெரும் பாசம் பொழிந்தவர். இந்திராவைத் தம் மகளாகவே கருதியவர்.  ஆனால், நெருக்கடி நிலையை இந்திரா அறிவித்தபோது இந்திராவைக் கடுமையாகக் கண்டித்துப் போராடியவர் ஜெயபிரகாஷ் நாராயண். 
இந்திராவின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க, பிரஜா  சோஷலிச கட்சி, லோக்தளம், பழைய காங்கிரஸ், சுதந்திரா, பாரதிய ஜன சங்கம் ஆகியவற்றை இணைத்து ஜனதா கட்சியை உருவாக்கி இந்திராவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்த்தினார் ஜெ.பி.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரானார் மொரார்ஜி தேசாய். இந்திராவைப் பிரதமராக உருவாக்கிய காமராஜர், இந்திராவின் செயல்பாடுகளைக் கண்டு மனம் வெதும்பி காங்கிரஸிலிருந்து பிரிந்து ஸ்தாபன காங்கிரஸை உருவாக்கினார். இந்திராவின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நின்றார். கடைசி வரை இன்றைய இந்திய தேசிய காங்கிரஸில் காமராஜர் இணையவில்லை.
ராஜீவ் காந்தியின் அரசில் நடந்த ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி காங்கிரஸிலிருந்து பிரிந்து ஜனமோர்ச்சா எனும் அமைப்பை வி.பி.சிங் உருவாக்கினார். பின்னர், சந்திரசேகர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஜனதா உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஜனதா தளத்தை உருவாக்கி, தேசிய முன்னணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். 
இந்திராவின் எதேச்சதிகார சிந்தனையை ஜனதா கட்சி தகர்த்தது என்றால், ராஜீவ் காந்தியின் அசுரபலப் பெரும்பான்மையை ஜனதா தளம் உடைத்தெறிந்தது. 
பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணாவிற்கு உற்ற துணையாகத் திகழ்ந்த பெரியாரின் பெயரன் ஈ.வெ.கி.சம்பத், தி.மு.க.விலிருந்து பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சியைத் தோற்றுவித்தார். ஈ.வெ.கி.சம்பத்துடன் தமிழ்த் தேசியக் கட்சியில் பணியாற்றி, காங்கிரசில் இணைந்து, இந்திராவால் தம் மகன் என்றும், காமராஜரால் மாவீரன் என்றும் போற்றப்பட்ட பழ.
நெடுமாறன், பின்னாளில் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழர் தேசிய இயக்கத்தைத் தோற்றுவித்து, தமிழர்களின் நலனுக்காகப் பணியாற்றி வருகிறார். 
அறிவில் சிறந்த இரா.செழியன் தி.மு.க.விலிருந்து விலகி ஜனதாவிலும் ஜனதா தளத்திலும் இணைந்து தம் மதிநுட்பத்தை நாட்டுக்கு உணர்த்தினார். இவையெல்லாம் காலத்தின் தேவையான பிரிவுகள்.  இந்தப் பிரிவுகள் சுயநலமற்றவை. இந்தப் பிரிவுகள் கொள்கை முரண்களால் ஏற்பட்டவை. இந்தப் பிரிவுகள் தத்துவ ரீதியானவை. லட்சிய நோக்குடையது. புதிய மாற்றத்துக்கானவை.
கொள்கை முரண்பாடுகளினால் ஜனதா தளத்திலிருந்து சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஸ்வானின் லோக் தளம் ஆகியவை உதித்தன. காங்கிரசிஸிலிருந்து  தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை உருவாக என்ன கொள்கை முரண் ஏற்பட்டது? தி.மு.கவிலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் உதயமாவதற்கும், அ.தி.மு.க.விலிருந்து அ.ம.மு.க. உருவாவதற்கும் என்ன நோக்கம்? 
தலைமைப் பதவியில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்து முரண்களால் உருவான கட்சிகள்தான் மேற்கண்டவைகளே தவிர... தத்துவ மோதல்களினாலோ, கொள்கை முரண்களினாலோ உதயமானவை அல்ல.
தமிழகத்தில், கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும்  கொள்கை மோதல் ஏற்பட்டது. தமது மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கக்கூடும் எனும் அச்சத்தின் காரணமாக, வைகோ மீது பழி சுமத்தி அவரை வெளியேற்றினார் கருணாநிதி. ஒன்பது மாவட்டச் செயலாளர்கள், பெரும்பாலான நிர்வாகிகளுடன் வெளியேறிய வைகோ ம.தி.மு.க.வை உருவாக்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நீடிக்கச் செய்திருந்தால், தர்மயுத்தத்திற்கு வாய்ப்பேது? சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனைத் தவிர்த்து ஓ.பன்னீர் செல்வத்தோடு இணையாமல் இருந்திருந்தால் அ.ம.மு.க. என்ற கட்சி ஏது?
கொள்கை முரண்களால் பிரிவு ஏற்பட்டு, முன்னிருந்த கொள்கைக்கு இன்னும் அழுத்தம் தரக்கூடிய பிளவுகளாலும் பிரிவுகளாலும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மைகள் ஏற்படாவிடினும் தீமைக்கு வாய்ப்புக் குறைவு. தலைமைப் பதவிக்காகவும், தன்னலத்திற்காகவும் ஏற்படும் பிரிவுகளால், பிளவுகளால் நன்மைக்கு வாய்ப்பேது?
அதே போல், கொள்கை சார்ந்த பிளவுகளும் பிரிவுகளும் ஜனநாயக அரசியலுக்குத் தேவை. அப்போதுதான் ஒரு கருத்தோடு மற்றொரு கருத்து மோதி, புதிய கருத்துகளும், புதிய சிந்தனைளும், புதிய பாதைகளும் பிறக்கும். தன்னலத்திற்காகவும், பதவி வேட்கைக்காகவும் பிரிவது ஆபத்தானது. அப்படிப் பிரிந்தவர்கள் மீண்டும் கூடுவது அதனினும் ஆபத்தானது.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com