நடுப்பக்கக் கட்டுரைகள்

வேலை தேடும் இளைஞர்களே...

எஸ். ராமன்

நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3.41 சதவீதத்திலிருந்து, 2018 வரையிலான கடந்த நான்கு ஆண்டுகளில் 6.1 சதவீத அளவில் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் அண்மையில் கசிந்ததும், அதிகார வர்க்கத்தால் அதன் நம்பகத்தன்மை மறுக்கப்பட்டது. அந்தப் புள்ளிவிவரங்களில் பல முக்கியத் தகவல்கள் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போயிருப்பது, மறுப்புக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
 ஒரு புள்ளிவிவரத்தைப் பற்றிய ஆவேசமான மறுப்பு அறிக்கை என்பது, அந்தப் புள்ளிவிவரத்தில் பொதிந்திருக்கும் தகவல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகக் கருதலாம்.
 மறுப்பு அறிக்கை ஒருபுறம் இருக்க, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மேற்கண்ட புள்ளிவிவரத்தைக் காட்டிலும், அதிக அளவில் மோசமடைந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். திறனும், ஆர்வமும் உள்ளவர்கள், அடிப்படை வசதிகளுக்குத் தேவையான பொருள் ஈட்டும்படியான பணி கிடைக்காமல் தவிப்பதுதான் "வேலைவாய்ப்பின்மை' என்று அழைக்கப்படுகிறது.
 அரசு புள்ளிவிவர தயாரிப்பின்படி ஒருவர் பணியில் 30 நாள் தொடர்ந்து இருந்தாலே அவர் வேலையில்லாதவர் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதால், வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னையின் முழுத் தாக்கம், இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் வெளிப்படுவதில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
 இந்திய தொழில் கூட்டமைப்பினர் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை 7.1. சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட 8 கோடி வேலைவாய்ப்புகளுக்குப் பதிலாக, வெறும் 3 லட்சம் அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டும்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு, தொழில் துறை முதலீடுகளும் அதைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சியும் இல்லாமல் இருப்பதே வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முக்கியக் காரணம். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும்படியாக, கணிசமான அளவில் முதலீடுகள் நிகழவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.
 முதலீடுகள் அதிக அளவில் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நஷ்டமின்றி தொழிலை நடத்துவதற்கான திறன் பயன்பாடுகளை தொழில் நிறுவனங்கள் எட்ட முடியாததாகும்.
 தொழில் துறையில் குறைந்தபட்சம் 80 சதவீதத் திறன் பயன்பாட்டை எட்ட முடிந்தால்தான், அந்தத் தொழிலை விரிவாக்கம் செய்து நிலைத்து நிற்க முடியும்; இல்லையென்றால் முதலீட்டுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல், பல பொருளாதாரச் சிக்கல்களுக்கு அந்தத் தொழில் நிறுவனம் பலியாக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த மாதிரி சூழ்நிலைகள்தான், வங்கி வாராக் கடன்களின் பிறப்பிடமாகும்.
 மூலப் பொருள்களுக்கான தட்டுப்பாடு, உற்பத்திப் பொருள்களை பயனாளிகளுக்கு விரைவில் கொண்டு சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், தொழிற்சங்க பிரச்னைகள், சர்வதேச பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அந்நியச் செலாவணி மதிப்பில் எதிர்பாராத ஏற்ற இறக்கங்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் ஏற்படும் போட்டி, அடிக்கடி மாற்றப்படும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த அதிகார வழிமுறைகள் ஆகிய நிகழ்வுகள், திட்டமிட்டபடி கைவசம் இருக்கும் முழுத் திறனையும் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்த முடியாததற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
 மேலே குறிப்பிடப்பட்ட இடர்ப்பாடுகளில் சில இடர்ப்பாடுகளைக் களைவது அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவை ஆகும். உதாரணமாக, போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அந்நியப் பொருள்களின் இறக்குமதியை வரிகள் மூலம் கட்டுப்படுத்துதல் ஆகியவை அரசாங்கச் செயல்பாட்டுக்குள் அடங்கும். தொழில் துறையினர் சந்திக்கும் இந்த மாதிரி இடர்ப்பாடுகளை அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் களைய முற்பட்டால், அதுவே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான உந்துதலாக அமையும்.
 2016-இல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எண்ணற்ற சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பெருமளவில் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகின. 40 சதவீத அளவில் வேலைவாய்ப்புகளை அளித்து வந்த இந்த நிறுவனங்கள் நலிவுற்றது, அண்மைக்காலத்தில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை பெருகுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
 நிலைமையைச் சீராக்க, சில நிவாரண நடவடிக்கைகளை தற்போது அரசு மேற்கொண்டுள்ளது. இந்தப் பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த ரூ.25 கோடி வரையிலான இடர்ப்பாட்டு கடன்களை மறுசீரமைக்கும் பணியை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.
 மேலும், இத்தகைய நிறுவனங்கள் மீண்டும் துளிர்த்து வளர, ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. தகுதியான நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு வங்கிகள் தயங்காமல் கடன் வழங்க முற்பட்டால் குறுகிய காலத்தில் நிலைமை சீரடைந்து, அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 கடந்த சில ஆண்டுகளாக பொலிவிழந்து நிற்கும் கட்டுமானத் துறை, கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய துறையாகும்.
 கட்டுமானப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, வரித் துறையினரின் கூடுதல் கண்காணிப்பு போன்ற காரணங்களைத் தவிர, அந்தத் துறை வளர்ச்சியின் சரிவுக்கு முக்கியக் காரணம், நிர்வாகத்தினரின் பேராசையாகும். செயற்கையான விலை ஏற்றங்கள், ஊக வியாபாரங்கள் ஆகியவை இந்தத் துறையில் பெரும் மூலதனங்களின் முடக்கத்திற்கு வித்திட்டன. இந்தத் துறை சார்ந்த கடன்கள், பல வங்கிகளில் வாராக் கடன்களாக உருவெடுத்தன. அதனால், அந்தத் துறையினருக்கு கடன் வழங்குவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.
 கட்டுமானத் துறையில் நிலவிய பல குறைகளைக் களைந்து, அந்தத் துறையில் முதலீடுகளை அதிகரிக்க கட்டுமானத் துறை வரன்முறைச் சட்டம் இயற்றப்பட்டு, அந்தச் சட்டம் மே 1, 2017 முதல் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. மேற்கண்ட சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளைத் தவிர, கடந்த காலத் தவறுகள் மூலம் இந்தத் துறையினர் பாடம் கற்றுக் கொண்டால், அதுவே அந்தத் துறையின் வேகமான வளர்ச்சிக்கு உதவும். அந்த வளர்ச்சி மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றாலும், குடிமக்களின் அணுகுமுறைக்கும் இந்தப் பிரச்னையில் பங்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
 வேலைக்காக காத்திருக்கும் வயது 25-லிருந்து தற்போது 30-ஆக உயர்ந்திருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். இவர்களில் அரசுப் பணிக்காக நீண்ட காலம் தவம் இருப்பவர்கள் ஏராளம். ஆனால், காத்திருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை அரசுத் துறைகளால் அளிக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். வேலைக்காகக் காத்திருக்கும் படித்த இளைஞர்கள் இந்த நிலைமையை முழுவதும் உணர்ந்து செயல்படவேண்டும்.
 படித்து முடித்து, குறிப்பிட்ட கால அளவில் வேலை கிடைக்கவில்லையென்றால், மேலும் தாமதிக்காமல் சுய வேலைவாய்ப்புகள் குறித்துச் சிந்தித்து அதைச் செயல்படுத்த இளைஞர்கள் முற்பட வேண்டும். ஒருவருக்கு எந்தத் தொழிலில் நாட்டம் இருக்கிறது என்பதை அவரால் மட்டும்தான் உணரமுடியும்.
 எந்தவிதமான உபயோகப் பொருள்களுக்கு கூடுதல் மற்றும் புதிய தேவைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்கூட்டியே கணிக்கும் கற்பனைச் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு விருப்பமான தொழில் சார்ந்த ஆயத்தப் பயிற்சிகளை சில காலம் மேற்கொண்டு கால் பதித்தால் வெற்றி நிச்சயம்.
 பெற்றோரைப் பொருத்தவரை மகன் அல்லது மகளின் சுய தொழில் சிந்தனைகளை எதிர்த்து நசுக்காமல், அதற்கான ஊக்கத்தை அளித்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றால், அதுவே அவர்களுக்கு சிறந்த மூலதனமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களில் சுய தொழில் சார்ந்த பாடங்களும், பயிற்சிகளும் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டால், மாணவப் பருவத்திலேயே சுய தொழில் சார்ந்த சிந்தனைக் கிளைகளும் அதற்கான தன்னம்பிக்கை வேர்களும் அவர்களிடையே வளரும்.
 திறமையும், தகுதியும் படைத்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பயன்படுத்தப்படாமல் வீணாகும் அந்தத் திறன்களை சமூக விரோதக் குற்றங்களுக்கு சில அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தால், அதுவே நாட்டு நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் கொள்ள வேண்டும்.
 வேலையின்மையும், விரக்தியும் இரட்டை சகோதரர்கள். நாட்டில், பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலம்தான், இந்த இரட்டையர்களைப் பிரித்தாள முடியும். பிரச்னையின் வீரியத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயமாகும்.
 
 கட்டுரையாளர்:
 வங்கி அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT