ஏன் வாக்களிக்க வேண்டும்?

வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமையும்கூட. இந்த நாடு நமக்கு அளித்த இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நமது


வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமையும்கூட. இந்த நாடு நமக்கு அளித்த இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமையாகும். ஓர் அந்நியனுக்கு அடிமையாக இருப்பதைவிட, நாம் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காகப் பெற்றதே சுதந்திரம்.
அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உரிமையை நாம் பயன்படுத்தாமல் போனால் தவறாகாதா? இந்திய ஜனநாயகம் தனது அங்கீகாரத்தைப் பெற்று, செழுமைமிக்க தனது பயணத்தைத் தொடங்கி 72 ஆண்டுகளைக் கடந்த போதிலும், அதன் நிறைவான பாதையில் பயணிப்பதற்கு தனது வாக்கு சதவீதத்தை இன்னும் முழுமையாக்கவில்லை. நம்மை ஐந்து ஆண்டுகள் யார் ஆளப் போகிறார்கள் என்பதைத் தீர்மானித்து  வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதுடன், இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய வலிமை உள்ள 
எஜமானர்கள், வாக்காளர்கள்தான்.
ஜனநாயகத்துக்கான சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதிலும், வாக்குகளின் சதவீதத்தை அதிகப்படுத்தி வலிமை பெறுவதிலும்தான், இந்திய ஜனநாயகத்தின் மாண்பு செறிவூட்டப்படுகிறது. திரையரங்குகளில், தொலைக்காட்சி தொடர்களில், இன்னும் பல்வேறு கேளிக்கைகளின் மூலம், நம் பொன்னான நேரத்தைச் செலவழிக்கிறோம். ஆனால், நம்மை யார் ஆளப் போகிறார்கள் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரத்தை விரல் நுனியில் எழுதப் போகும், இந்தத் தேசத்தின் தீர்ப்பை நாம் ஏன் எழுத மறுக்கிறோம். இந்த உரிமையை பணம், அதிகாரம், சாதியச் செல்வாக்கு, பயமுறுத்துதல் போன்ற பல்வேறு சூழல் காரணிகளால், தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. ஆனால், இவையே ஒரு தீர்வாக முழு வடிவத்தை எட்டிப் பிடிப்பதில்லை.  
நான் சுயமாக உழைக்கிறேன், சுயமாகச் சம்பாதிக்கிறேன், சுயமாக என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டேன், அப்படி இருக்கையில், அரசின் உதவி எனக்கு எப்போதும் தேவையில்லை. அவ்வாறிருக்க நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சிலரது மனமும், இன்னொரு சாராரோ குறிப்பாக இளம் தலைமுறையினர் மாற்றம் வேண்டும் என்று முறையிடும் அதே வேளையில்,  தங்களது மீம்ஸ்களின் மூலம் மட்டுமே திருப்தி அடைந்து கொள்வதும், ஒரு புதிய ஜனநாயகப் பாதையை அமைப்பதற்கும், அதைச் செப்பனிடுவதற்கும் தவறி விடுகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. 
ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் சட்டையில் இருந்து, சாப்ட்வேர் பொருள்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு ஓர் இன்றியமையாததாக இருக்கிறது. ஆகவே, அவற்றைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் நாமும் இருக்க வேண்டும் என்பதே, வாக்களிப்பதற்கான அவசியமாகிறது. வாக்களிக்கும்போது வாக்காளர் என்பது பெருமைக்குரிய ஒரு தருணமல்லவா? இந்த நாட்டின் ஒரு  பெருமைக்குரிய ஒரு குடிமகனல்லவா என்று பெருமிதம் பேசுவதில் நமக்கு ஏன் இழுக்கு?
 சங்ககாலம் முடியாட்சி; நிகழ்காலம் குடியாட்சி. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் குறிப்பிடுவது சங்ககாலத்தில் அது சாத்தியமாகுமா? நிகழ்காலத்தில் அது சாத்தியமாகிறது. ஆகவேதான், நமது உரிமையை மீட்டெடுப்பதற்கான ஒரு தருணமாகவே இதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் தாங்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, ஒரு புத்துருவாக்கத்திற்கு வித்திடுகிற களம்தான் தேர்தல் களம். ஏனென்றால், ஓட்டுரிமை என்பது நமது எதிர்காலத்தின் குரலாக நமக்கு நாமே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரு திறமையான அரசாங்கமும், அது சார்ந்த அமைப்புகள் அமைவதற்கு நாமும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தோம் என்பது சமகாலத்தில், நீண்ட ஜனநாயகத்தேரை இழுத்துச் செல்வதில், நமக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது என்பதை உணரச் செய்யும் வெளிப்பாடுதான் வாக்களிப்பது என்பதாகும். 
எனக்கு எதற்கு அரசியல்? இதில் எனக்கு விருப்பமில்லை. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்படியே ஒரு விருப்பம் இருந்தாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பல சந்தர்ப்பங்களில் குழப்பமடைந்து விடுகிறோம் என்ற கருத்தை செவி வழியாக நாம் கேட்பதுண்டு. 100 சதவீத வாக்குப் பதிவைப் பெறுகிறபோதுதான் முழுமையான ஜனநாயகம் நமக்கு வந்தடைகிறது என்று நாம் எப்போது உணரப் போகிறோம்? 
சில பேர் நாங்கள் தெளிவான முடிவை எடுக்கிறோம் என்று சொல்லி நோட்டாவை பயன்படுத்துகிறார்கள். அப்படியானால், உங்களையே நீங்கள் ஏமாற்றிக்  கொள்கிறீர்கள்  என்று பொருள். 
திறமையான ஒரு வேட்பாளரை, நீங்களே தேர்ந்தெடுங்களேன். அந்தத் திறமையை ஊக்குவிப்பதும் மக்கள் பணி செய்கிற சேவகரை அடையாளப்படுத்துவது, நமது பங்கு என்பதையும், நமது உரிமை என்பதையும்  ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், பல பேர் பல விதமாகக் கூறுவது உண்டு. வாக்கு வாங்கிட்டுப் போய் வெற்றி பெற்ற பிறகு,  நம்முடைய வீதிக்கே வருவதில்லையே என்று சில குரல்கள் கேட்பதுண்டு. அப்படி இருக்கையில், நாம் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதும், இல்லை அது தவறு, நமது கடமையை செய்துதானே ஆகவேண்டும் என்று சிலரும் கூறுவதுண்டு.
வாக்களிக்காமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், சாக்கடை சரியில்லை, சாலை சரியில்லை என்று புலம்பினால் சரியாகி விடுமா என்று கேட்பவர்களும் உண்டு. சரி, வாக்களித்தால் மட்டும் இவை எல்லாம் சரியாகி விடுமா? ஆமாம், நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள்தான், அரசின் திட்டங்களை தான் தேர்ந்தெடுத்த பகுதிகளுக்குக் கொண்டு வருவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். 
வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை என்பது இன்று தோன்றியது அல்ல. தமிழ்நாட்டின் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கி விட்டது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தேர்தல் களம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்ற நீண்ட வரலாறு நமக்கு உண்டு. அதே நேரத்தில் சில பேர் வாக்குரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதனை கட்டாயமாக்க முடியாது. ஏனெனில், வாக்களிப்பது எப்படி ஒருவரின் உரிமையோ, அதே போன்று வாக்களிக்காமல் இருப்பதும் அவரின் உரிமையே என்று சிலர்
முழக்கமிடுவதும் உண்டு. பெரும்பாலும் படித்தவர்கள் பக்கம் இருந்தே இந்தக் கருத்து மேலெழுகிறது. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பாமரர்களிடம் இருக்கும் அளவுக்கு, படித்தவர்களிடம் இல்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களைக் குறை கூறுவது எந்த வகையில் நியாயம்?
 ஏகாதிபத்திய சக்திகள் தத்தமது நாடுகளில் ஆரம்பகால கட்டங்களில் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட கருப்பினத்தவருக்கும் வாக்குரிமையை மறுத்த நிலையிலும், பின்னர் வழங்கிய நிலையிலும் இருக்கும் இரு வேறு பாகுபாடுகளை நாம் பார்க்கும்போது, நமது நாட்டுத் தலைவர்களின் ஜனநாயக மாண்பை சம உரிமை தந்திருக்கிற நிலைப்பாட்டை நாம் போற்றித்தான் ஆக வேண்டும். கருத்து வேறுபாடு என்பது இயற்கை. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. உன்னுடைய கருத்துகளை நான் ஏற்கவில்லை, அதே சமயம் நீ சொன்ன கருத்துக்காக, அதன் சுதந்திரத்துக்காக என் உயிரையும் தருவேன் என்று சொன்னார் வால்டேர்.
ஆமாம். இதுதான் கருத்தாக்கத்தின் உச்சம். இதனடிப்படையில்தான், ஜனநாயக மரபுகளின் மீது நமது தலைவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளின் மீது ஒரு போதும் பிழை காண முடியாது. அதைப் போலத்தான் மாற்றுக் கருத்தைச் சொல்வதற்கும், அந்தக் கருத்தை அரசியல் ரீதியாக எடுத்து இயம்புவதற்கும், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்கிற அடிப்படைப் புரிதல்தான் 72 ஆண்டுக்கால சுதந்திர ஜனநாயக நாட்டில் நிலவி வரும் உண்மைக் கூற்றுகளாகும். 
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என ஒட்டுமொத்த அரசியலையும் நாம் புறந்தள்ளி விட முடியாது. ஒன்றை நிராகரிக்கவும், ஒன்றை உருவாக்கவும் கூடிய பெரும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அதுவும் முதல் முறை வாக்களிக்க வரும் இளம் வாக்காளர்களிடம் அவை அதிகமாகவே இருக்கின்றன.
எண்ணிலடங்கா மொழிகளும், பண்பாடுகளும் கொண்ட நாட்டில், அடிப்படையான சித்தாந்தங்களையும், லட்சியங்களையும் சுமந்து திரியும் பல்வேறு அரசியல் கட்சிகளையும் நாட்டின் ஒருமுகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. எனவே சலிப்பையும், அவநம்பிக்கையையும் ஒதுக்கிவிட்டு, வாக்களிப்பதன் அவசியத்தையும் ஜனநாயக உரிமையையும் காக்க வேண்டும்.
அதாவது, எதிர்காலத்தைத் தீர்மானிப்பது நமது நிகழ்கால அரசியல். நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி கனவு காண்கிறோமோ, அக்கனவை நிகழ்காலத்து அரசியலோடு கூர்ந்து பொருத்திப் பார்ப்பது உங்கள் விரல் நுனியில் இருக்கும் மையில்தான் அடங்கியிருக்கிறது. 

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com