சிறப்புக் கட்டுரைகள்

ராமன் தீக்குளித்த ராமாயணம் படைத்த ‘கன்னட மகாகவி குவெம்புவுக்கு’ டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்தது கூகுள்!

கார்த்திகா வாசுதேவன்

ராமன் தீக்குளித்த ராமாயணம் அறிவீரா? தில்லாக அப்படியோர் காவியம் படைத்தவர் கன்னட மகாகவி ‘குவெம்பு’

நமக்கு எப்படி சுப்பிரமண்ய பாரதியார் மகாகவியோ... அப்படி கன்னடர்களுக்கு மகாகவி குவெம்பு அலைஸ் குப்பலி வெங்கடப்ப புட்டப்பா!

இவர், 1904 ஆம் வருடம், அதாவது இந்திய சுதந்திரத்துக்கு முன்பு கர்நாடக மாநிலம், சிமோகாவில் உள்ள குப்பலி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது செல்லப் பெயர் குவெம்பு. அந்நாட்களில் அவர் மிகச்சிறந்த நாவலாசிரியராகவும், கவிஞராகவும், விமர்சகராகவும், உரைநடை ஆசிரியராகவும் புகழ்பெற்றவராக இருந்து வந்தார். இங்கே தமிழ்நாட்டில் மகாகவி பாரதியார் எப்படியோ அப்படி கர்நாடகத்தின் தேசிய கவியாக (ராஷ்டிர கவி) வைத்துப் போற்றப்பட்டவர்  குவெம்பு, அவருக்கு அப்படியொரு பட்டத்தை கர்நாடக அரசு 1958 ஆம் ஆண்டு அளித்து கெளரவித்தது. அது மட்டுமல்ல, அவர் இறப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்பு  ‘கர்நாடக ரத்னா’ என்ற விருதையும் கன்னட அரசு அவருக்கு அளித்துப் பெருமை கொண்டது.

நவீன இந்திய இலக்கிய வளர்ச்சியில்  பிராந்திய மொழியான கன்னடத்தைப் பொருத்தவரை இவரது பங்கு மகத்தானது. மகா காவியமான ராமாயணத்தை இன்றைய தலைமுறையினரும் விரும்பி வாசிக்கும் வண்ணம் இவர் படைத்த ஸ்ரீராம தரிசனமாகட்டும், ( இவரது ராமாயணத்தின் தனிச்சிறப்பே அதில், சீதாபிராட்டியோடு ஸ்ரீராமனும் சேர்ந்து அக்னிப்பிரவேஷம் செய்வதாகப் படைத்துக் காட்டிய புரட்சிகரமான சித்தாந்தமே!) அவரது பிற படைப்புகளாகட்டும் அனைத்துமே என்றைக்கும் நம்மோடு இணைந்திருக்க விதிக்கப்பட்ட சாதி, மத, இன வேற்றுமைகளை எள்ளி நகையாடுவதாகவே அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இவரது ஸ்ரீராம தரிசனத்துக்கு முதன்முறையாக கன்னட இலக்கியப் படைப்புகள் சார்பாக மத்திய அரசின் ஞானபீட விருது வழங்கப்பட்டது.

ஒக்கலிக கெளடா சமூகத்தில் பிறந்தவரான குவெம்புவுக்கு அக்கால வழக்கப்படி ஆரம்பக் கல்வி வீட்டிலேயே ஆசிரியை வரவழைத்து கற்றுத்தரப்பட்டது. பின்னர் நடுநிலைக் கல்வி பெற குவெம்பு, தீர்த்தஹள்ளியில் இருந்த ஆங்கில வெர்னாகுலர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அச்சமயத்தில் குவெம்புவுக்கு 12 வயதாயிருக்கையில் அவரது தகப்பனார் வெங்கடப்ப கெளடா மறைந்து விடுகிறார். பின்னர் குவெம்புவை வளர்த்தது அவரது தாயாரான சீதம்மா. நடுநிலைப்பள்ளிப் படிப்பை தீர்த்தஹள்ளியில் முடித்து விட்டு உயர்நிலைக் கல்வி பெற வெஸ்லேயன் பள்ளிக்கு இடம்பெயர்கிறார் குவெம்பு. பின்னர் கன்னடத்தில் இளநிலைக் கல்வி பெற மைசூர் மகாராஜா கல்லூரியில் சென்று சேர்கிறார்.

அங்கிருந்து 1929 ஆம் ஆண்டு கன்னடப் பட்டதாரியாக வெளிவருகிறார். பின்னர் அங்கேயே  கன்னட விரிவுரையாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றுகிறார். அதன் பின்னர் மைசூரு சென் ட்ரல் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியமர்ந்து சில காலம் அங்கே பணியாற்றிவிட்டு மீண்டும் மைசூரு மகாராஜா கல்லுரியிலேயே 1946 ஆம் ஆண்டில்  பேராசிரியராகப் பணியில் இணைந்து 1955 ஆம் ஆண்டு அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியில் உயர்கிறார். தன்னுடைய ஆசிரியப் பணியிலும் சரி, இலக்கியப் பங்களிப்பிலும் சரி குவெம்புவின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு உணர்வைக் கெளரவிக்கும் விதத்தில் கர்நாடக அரசு 1956 ஆம் வருடம் மைசூரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தது. 1960ம் ஆண்டில் அவரது பணி ஓய்வு வரை குவெம்பு அங்கே தான் பணிபுரிந்தார். மைசூரு பல்கலைக்கழக வரலாற்றில், அதில் பயின்ற மாணவர் ஒருவர், அதன் முதல்வராக உயர்ந்தது அது தான் முதல்முறை என்கிறார்கள்.

இல்லறத்தைப் பொறுத்தவரை குவெம்பு ஆரம்பத்தில் திருமணத்தில் ஆர்வமில்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் ராமகிருஷ்ணா மிஷினரியில் குவெம்புவுக்குக் கற்பித்த ஆசிரியர்களில் ஒருவரது தொடர்ந்த வற்புறுத்தலின் பின்னரே 1937 ஆம் ஆண்டு ஹேமாவதியைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என மொத்தம் 4 வாரிசுகள் உள்ளனர். குவெம்புவின் இரண்டாவது மகளான தாரிணியின் கணவரான சித்தானந்த கெளடா தான் தற்போது ’குவெம்பு  பல்கலைக் கழகத்தின்’ துணை வேந்தர். அதுமட்டுமல்ல குவெம்புவின் மகன் பூர்ணசந்திர தேஜஸ்வி ஒருபல்கலை வல்லுனராகத் திகழ்கிறார். கன்னட இலக்கியம், சித்திரமொழி, புகைப்படக்கலை, டிஜிட்டல் இமேஜிங், சமூகப் போராட்டங்கள், விவசாயம் என அவர் ஈடுபடாத துறை இல்லை என்கிறார்கள்.

இத்தனையிலும் குவெம்புவைப் பற்றிப் பிரதானமாகப் பெருமைப் பட்டுக் கொள்ளத் தக்க அம்சம் என்னவென்றால் அவரும் நமது மகாகவியைப் போலவே அத்தனை மொழிகளையும் அரவணைத்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமுடையவராக இருந்தபோதிலும் கன்னடர்கள் தங்களது அடிப்படைக் கல்வியை கன்னட பயிற்றுமொழியில் பெற வேண்டும் என்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதை வலியுறுத்துவதற்காக மைசூரு பல்கலைக்கழகத்தின் கீழ் அவர் நிறுவியது தான் ’கன்னட அத்யாயன சம்ஸ்தே’ எனும் கன்னட மொழி ஆய்வுக் கல்விப் பிரிவு. அதுவே இன்று அவரது மறைவுக்குப் பின் அவரது நினைவுகளைப் போற்றும் விதமாக குவெம்பு பல்கலைக்கழகம் என வழங்கப்ப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல கன்னட மொழிவாழ்த்து இயற்றிய பெருமைக்குரியவரும் குவெம்புவே தான். 

அவர் இயற்றிய கன்னட மொழிப்பண் இது தான். இதுவரை கேட்க வாய்ப்பில்லாதோர் அறிந்து கொள்ளலாம்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசம்... இங்கு மாநிலத்துக்கு மாநிலம் மொழியன்னை மாறுபடலாம். ஆனால் தேசம் ஒன்றே!

இன்று அவரது 113 ஆவது பிறந்தநாள். அவரது பிறப்பையும், கன்னட இலக்கியத்தில் அவராற்றிய மகத்தான பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT