இதோ ஒரு சாதனை இளைஞர்! பறக்கும் ரோபாவை உருவாக்கவிருக்கும் பொறியியல் மாணவர்! (விடியோ)

ஒவ்வொருவரின் கனவு ஒவ்வொரு மாதிரி. கனவுகளை இதயத்தில் சுமந்து கொண்டு, அதனை நடைமுறைப்படுத்தும் வரை சோர்வு கொள்ளாமல் சதா சர்வ காலமும்
இதோ ஒரு சாதனை இளைஞர்! பறக்கும் ரோபாவை உருவாக்கவிருக்கும் பொறியியல் மாணவர்! (விடியோ)

ஒவ்வொருவரின் கனவு ஒவ்வொரு மாதிரி. கனவுகளை இதயத்தில் சுமந்து கொண்டு, அதனை நடைமுறைப்படுத்தும் வரை சோர்வு கொள்ளாமல் சதா சர்வ காலமும் அதே நினைப்பில் இருப்பவர்கள் தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அப்படி ஒரு வெற்றியாளர் தான் ஹேமானந்த்! சிறு வயது முதல் அவன் மனத்தில் ஒரு துடிப்பு! இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த ஏதேனும் ஒன்றை செய்து சாதிக்க வேண்டும் என்பதே அது. முதலில் மருத்துவராக ஆகிவிடலாம் என்று தான் கனவு கண்டான் அந்த பதின் வயது சிறுவன். ப்ளஸ் டூ முடித்ததும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் வேறு வழியின்றி பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்தான்.

தற்காலத்தில் பொறியியல் படிப்பு படித்த பலரும் வேலையின்றி கஷ்டப்படுவதைப் பார்த்திருந்த சுற்றத்தாரும் உறவினர்களும் அவனை கேலி செய்யத் தொடங்கினர். ஆனால் ஹேமானந்த் அதற்கெல்லாம் சளைத்தவனல்ல. கிண்டல் செய்தவர்களை புறம் தள்ளிவிட்டு அவர்களின் வார்த்தைகளையே தனக்கு ஊக்கமாகக் கொண்டு உழைக்கத் தொடங்கினான். அதன் விளைவே அவன் உருவாக்கிய ‘கிளவுட் ரோபோ!’ பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்த ஒருவர், எல்லோரும் பழிக்கும் பொறியியல் துறையில் படித்துக் கொண்டிருக்கும் போதே, 'கிளவுட் ரோபோ' ஒன்றை உருவாக்கி, அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஹேமானந்த் தனது திறமை மீதும் தன் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதற்காக அவருக்கு அவ்வப்போது அங்கீகாரமும் விருதும் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால் இவையெல்லாம் ஆரம்பம் தான். இனி வரும் காலங்களில் மிகப் பெரிய கண்டுபிடிப்பினைச் செய்து இலக்கினை அடைவேன். என் கனவு மிகவும் பெரிது என்கிறார் ஹேமானந்த்.

ஹேமானந்த் தனது சாதனையைப் பற்றிக் கூறுகையில், ‘இன்ஜினியரிங்கில் நான் எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் பிரிவு எடுத்தேன். இதற்கும் ரோபோடிக்சுக்கும் சம்பந்தம் இருப்பதை அறிந்து, பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் போதே ஆய்வு செய்யத் தொடங்கினேன். அப்போதுதான் 'ப்ளுடூத் ரோபோ' ஒன்றை உருவாக்கக் கற்றுக் கொண்டேன். 

எல்வின் என்பவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர், அவருடைய உதவியுடன் ஒரு மாதம் ரோபோடிக் கற்றேன். அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி இரண்டாம் தலைமுறை கிளவுட் ரோபோவை கண்டுபிடித்தேன். நான் கண்டுபிடித்த இந்த ரோபோவை, செல்போன் மூலம் இயக்கலாம். இன்னொரு செல்போன் மூலம், ரோபோ செல்லும் திசைகளில் சிகழும் சம்பவங்களைக் காண முடியும். இந்த ரோபோ மூலம், வேதியியல் நிறுவனங்களில், வாயு வெளியாவதை கண்டறிய இயலும், மேலும் தட்பவெப்ப சூழல்களையும் கண்டறிய முடியும்.

இந்த ரோபோவைப் பயன்படுத்தி வேதியியல் சோதனைக் கூடத்தில் வெப்பம் அதிகரித்தால், அத்தகவல் செல்போனுக்கு எச்சரிக்கையாக வரும் வசதியும் அதில் உள்ளது. இதனால், வேதியியல் சோதனைக் கூடம் அல்லது நிறுவனம் என அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வரும் பிரச்னைகளை தவிர்த்துவிடலாம். இது தவிர ஒரு அலுவலகத்தின் ஒரு பகுதியில் இருந்தவாறே, மற்ற பகுதிகளில் நடப்பவற்றை இந்த ரோபோவில் உள்ள கேமரா மூலம் கண்காணிக்கலாம். சார்ஜை பொருத்தவரையில், வாரம் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதுமானது. இந்த ரோபோவை உருவாக்க எனக்கு 20,000 ரூபாய் செலவானது. 

இதை அடுத்து, மூன்றாம் தலைமுறைக்கான, பறக்கும் ரோபோ ஒன்றினைத் தயாரிக்க உள்ளேன். அந்த ரோபோவில், 'டெட்டனேட்டர்' எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளேன். இதன் மூலம், ராணுவத்திற்கு உதவும் விதமாக, எதிரி நாட்டில், வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று, கண்காணித்து வெடிக்க செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்து உள்ளேன். இந்த தொழில்நுட்பம் வந்தால், ராணுவத்தில் உயிரிழப்பு குறையும். இந்த ரோபாவை நான் உருவாக்க கிட்டத்தட்ட 80,000 ரூபாய் வரை செலவாகும். அந்தளவுக்கு தற்போது என்னிடம் பணம் இல்லாததால், ரோபோ தயாரிப்பு திட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன். 

எதிர்காலம் என்பது பலவிதமான தொழிற்நுட்பங்களைச் சார்ந்துதான் இயங்கி வரும். எனவே இது போன்ற ரோபோக்களின் தேவைகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும், சொந்த பயன்பாட்டிற்கும் கூட மக்கள் ரோபாக்களை பயன்படுத்தத் தொடங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ரொபோடிக்ஸ் படிப்பு எனக்கு அதன் நுட்பங்களை உணர்த்தியுள்ளது. நான் கற்றுக் கொண்ட இந்த தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தி நல்ல கருவிகளை உருவாக்க ஆசைப்படுகிறேன். போலவே நான் கற்ற இந்த ரோபோடிக்ஸ் படிப்பை வீணாக்காமல் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தர உள்ளேன். 

இந்திய - ஜெர்மன் ஒப்பந்தம் ஒன்றின்படி, ஆண்டுதோறும் 15 மாணவர்களை ஜெர்மனுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க வேண்டும். இதில், தமிழகத்தில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். ஆனால் ஜெர்மன் செல்ல, பயிற்சி கட்டணம், விமான கட்டணம் என எல்லாம் சேர்ந்து, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதற்கு பணம் இல்லாததால், என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், புதிய கருவிகளை உருவாக்கவும் பொருளாதாரம் மிகவும் முக்கியம். நான் படித்தது அரசுப் பள்ளியில், மிகுந்த சிரமத்துக்கு இடையே தான் எனது பெற்றோர்கள் என்னை பொறியியல் துறையில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் செயலற்றுப் போயிருக்கிறேன்.

நம் தமிழக அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இது குறித்து எனக்கு ஆலோசனைகளும், முடிந்தால் நிதி உதவியும் அளித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த எனது ஆராய்ச்சியில் முன்னேறிச் செல்வேன். நிச்சயம் இது நடக்கும், அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறினார் ஹேமானந்த். 

ஹேமானந்த் ஆராய்ச்சிக்கு, வழி காட்ட விரும்புவோர், அவரது ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் hemanand42@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com