சிறப்புக் கட்டுரைகள்

என் மகனிடம் இதையெல்லாம் நான் பேசக் கூடாதா? யார் சொன்னது?

உமா பார்வதி

என் 13 வயது மகனிடம் சில நாட்களாகவே ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி அவனுக்குப் புரியும்படியாக கதைகள் சொல்லி அவ்வப்போது அவனது மனத்துக்குள் பதிந்து வைத்திருந்தபடியால் அவன் பெண்களை தன் சக ஜீவியாக உணர்கிறான் என்பது எனக்குத் தெரியும். இருபாலினரும் படிக்கும அவன் பள்ளியில் எல்லா தேர்வுகளிலும் முதல் இடத்தில் இருப்பது பெண்களே. அவனுக்கு அவர்களிடத்தே போட்டி மனப்பான்மை உள்ளதும் எனக்குத் தெரியும். வகுப்பில் நடக்கும் முக்கியமான விஷயங்களையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் பகிர்ந்து கொள்வான். பெரும்பாலும் பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு நான்தான் செல்வேன். எல்லா குழந்தைகளும் ஆசிரியர் என்ன திட்டுவார்களோ என்று பயப்படும் சமயத்தில், 'அம்மா தயவு செய்து டீச்சரைப் பத்தியோ ஸ்கூலைப் பத்தியோ உன்னோட கருத்தையெல்லாம் சொல்லிவிடாதே’ என்பான்.  

தற்போது பதின்வயதை நெருங்கும் அவனுடைய குரல் லேசாக மாறிக் கொண்டிருக்கிறது. என் கால் முட்டிக்கும் குறைவான உயரத்தில் துப்பட்டாவை இழுத்து விளையாடிக் கொண்டிருந்தவனை நான் அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி பிள்ளைகள் இத்தனை விரைவில், இவ்வளவு உயரமாக வளர்ந்துவிடுகிறார்கள்! நம் கண்களுக்கு முன்னாலே கண்ணுக்குத் தெரியாமல் வளரும் மாயஜாலம் பிள்ளைகளால் மட்டும்தான் ஏற்படும் போலும். இந்நிலையில்தான் சில விஷயங்களை அவனுக்குச் சொல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன். அவன் அப்பா, அல்லது தாத்தா அல்லது நண்பர்கள் சொல்வதை விட ஒரு பெண்ணாக ஒரு தாயாக ஒரு சக உயிராக நான் அவனுக்கு சொல்வதுதான் அவனது பாதுகாப்புக்கு சிறந்தது என்று நினைத்து கடைசியில் அவனிடம் பேசிவிட்டேன். 

'நீ பாத்ரூம்ல அதிக நேரம் டைம் எடுத்துக்கறே ஏன்?' என்று என்றேன். என்னிடமிருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காததால் சற்று தயங்கினான். அவன் கையில் இருந்த செல்ஃபோனை அவசரமாக பாக்கெட்டில் வைத்தான். சிலர் டாய்லெட்டுக்கு புத்தகம் எடுத்துச் சென்று படிப்பார்கள்.  அந்த வழித்தோன்றலின் நவீன மயம் செல்ஃபோன் போலும். தோழமையோடு அவனை அணுகி அவன் தயக்கத்தைக் களைத்தேன். 'எதுக்குடா கண்ணா ஃபோனை எடுத்துட்டுப் போனே?’ என்று குரல் உயர்த்தாமல் கேட்டேன். கேம்ஸ் பாத்திட்டு இருந்தேன் என்றான். அவனது போனை வாங்கி  (பாஸ்வேர்ட் எனக்குத் தெரியும்) இணையத்தில் ஹிஸ்டரியைப் பார்த்தேன். அவனுக்கு லேசான கோபமும் அவமான உணர்வும் ஏற்பட்டது, ஆனால் எதுவும் சொல்லாமல் என்னையே பார்த்தான். எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இந்த வயதில் மனத்தில் தோன்றும் சில விஷயங்களுக்கு உடனடியாக பரபரப்பாக வேண்டியதில்லை. வாழ்க்கை மிக நீண்டது. மெதுவாக அழகாக ரசித்து போகிற போக்கில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றேன். வாட்ஸப்பில் உன் நண்பர்கள் விடியோ எதாவது அனுப்புகிறார்களா என்றதற்கு அப்படியெல்லாம் இல்லைம்மா என்றான். நான் என்ன விடியோவைப் பற்றிக் கேட்கிறேன் என்று திரும்பக் கேட்காமல், நான் என்ன கேட்டிருப்பேன் என்பதை புரிந்து கொண்டு பதில் அளித்தான். இதிலிருந்து அவனுக்கு சில விஷயங்கள் தெரிகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருந்து விடுவார்களா என்ன? தகவல் தொழில்நுட்பம் நம்மை விட அதிவிரைவாக நம் பிள்ளைகளை வந்தடையும் என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பதன் பிரச்னை இது.

ஏன் ஃபோன் வாங்கித் தருகிறீர்கள் என்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள். இவர்களிடமிருந்து எதை மறைத்து வைத்தாலும், ஃபோனை மறைத்து வைக்கவே முடியாது என்று அவர்களுக்குத் தெரியாது. ப்ராஜெக்ட் செய்யணும் என்று ஐஃபேட் வாங்கித் தரச் சொன்னபோது, தயக்கத்துடன்தான் வாங்கித் தந்தேன். என்னுடைய முழு கண்காணிப்பில் அது இருந்தாலும், கண்கொத்திப் பாம்பு போல சதா சர்வ காலம் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் தற்போது அவன் இருக்கும் வயதில், அவனுக்கு சில புரிதல்கள் தேவை என்றபடியால் அவனுக்கு சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையிடையே சில விஷயங்களில் தெளிவு பெற சில கேள்விகளை கேட்டு வைப்பேன். அதற்கு அவனது உடல்மொழியையும், கண் அசைவையும் பொருத்து அவனது பதிலை நான் உள்வாங்கிக் கொள்வேன்.

கொடூரமாக மாறிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது குறித்தும் அவனிடம் கடந்த வருடம் பேசியிருக்கிறேன். குட் டச் பேட் டச் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அப்போது அவன் சற்று பயந்தாலும் பள்ளியில் அல்லது வேனில் யாரும் அவனை தொட அனுமதிப்பதில்லை. எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இயல்பாகவே ஆக்கிக் கொண்டான். பள்ளியில் சில சமயம் பாத்ரூமில் பெரிய பையன்கள் சிலர் முறைத்துப் பார்க்கிறார்கள் என்று கூறுவான். அதற்கெல்லாம் பயப்படக் கூடாது தப்பாக ஒரு செய்கை இருந்தால் கூட நீ பயப்படாமல் யாராக இருந்தாலும் அவனைப் பற்றி புகார் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ஆண், பெண் என இருபாலருக்கும் இது குறித்த விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும். தங்களைத் தேவையில்லாமல் சீண்டும் யவரையும் அவர்கள் விலக்கி வைக்க வேண்டும். அவர்களைப் பற்றி பெற்றோர்களிடம் பயப்படாமல் சொல்ல நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும்.

பெண்கள் பெரியவளாகிறார்கள். சடங்கு செய்கிறோம். விழா எடுக்கிறோம். ஆனால் சத்தமே இல்லாமல், நாம் பெற்ற பிள்ளைகள், நம் கைக்குள் விளையாடிய குழந்தைகள் திடீரென ஒரு நாள் தாடி மீசையுடன் நம்முன் வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். முந்தைய இரவில் தூங்கி மறுநாள் காலை விழிக்கும் போது அவர்களுக்கு இந்த மாற்றம் நிகழ்வதில்லை. ஆனாலும் அவர்களின் இந்த மறைமுக வளர்ச்சி பற்றிய தெளிவு தாய்க்கு இருப்பதில்லை. தன் மகன் பருவ வயதை எய்திவிட்டான் என குத்துமதிப்பாகத் தான் தாய் தெரிந்து கொள்ள முடியும். மகனுக்குக் கூட தனக்கு என்ன மாறுதல் ஏற்படுகிறது என்பது பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. ஹார்மோன்கள் வளர்ச்சி எதனால் என்பதை அலசி ஆராய அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இது குறித்த உருப்படியான வழிகாட்டலும் இன்றளவும் வளர் இளம் ஆணுக்கு இருப்பதில்லை. வீட்டினர் முதல் ஊடகம் வரை பெண்களை மையப்படுத்தியே எல்லா அறிவுரைகளும் இருப்பதால், ஒரு சிறிய இளைஞனின் மன ஊசலாட்டங்கள் யாருக்கும் தெரியாமல் போகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலும், அரவணைப்பும் தேவைப்படும். அவன் திசைமாறிப் போய்விடாமல், நல்வழிப்படுத்ததல் நம் கையில்தான் இருக்கிறது.

தான் யார், திடீரென்று ஏன் உடலில் முடி முளைக்கிறது, என்பன போன்ற பாலுறவு சார்ந்த கேள்விகளும் மனக் குழப்பங்களும் அவனுக்குள் ஏற்படும். அப்போது அதற்கு தெளிவான பதில்களை சொல்பவர்கள் அருகில் இருப்பதில்லை. அல்லது அவனது கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. அதைத் தேடிக் கண்டடைய தற்காலிக நிவாரணி இணையம். அது ஆபத்து என்று அவனுக்குத் தெரியவில்லை. ஒன்றைக் கேட்டால் இலவச இணைப்பாக தேவையற்றதை எல்லாம் கொட்டித் தரும் இணையம் என்பதைப் புரிந்து கொள்ளும் வயது அவனுக்கில்லை. செக்ஸ் கல்வி என்றால் அய்யோ, நமது கலாசாரத்துக்கு இது தேவையில்லை என்று பயப்படும் சமூகம் நம்முடையது. ஆனால் உண்மையில் இது போன்ற அடிப்படை கேள்விகளுக்கான பதில்களை அசூயை இல்லாமல் கற்றுக் கொள்வது நல்லதுதானே? பிள்ளைகளின் தந்தைகளுக்கு அவர்களிடம் பேசப் பொறுமை இருப்பதில்லை. இதைப் போய் பையன்கிட்ட பேசலாமா இதெல்லாம் அசிங்கம் ச்சீ என்றெல்லாம் நினைக்காமல் நம் குழந்தையிடம் நல்லது கெட்டதைப் பற்றி பெற்றோரில் ஒருவரேனும் பேசத் தயக்கம் காட்டக் கூடாது. என் மகன் என்னிடம் வந்து பயாலஜி பாடத்தில் டீச்சர் சில பகுதிகளை வேகமாக கடந்துவிட்டார்கள் என்று போன வருடம் சொன்னபோது, அதை வாங்கிப் பார்த்தேன். உடலியல் சார்ந்த விஷயங்கள், பெண்களின் மாதவிடாய் மற்றும் கரு உருவாகக் கூடிய சில அடிப்படை தகவல்களை பாடமாகத் தந்திருந்தார்கள்.

பாடத் திட்டத்தில் உடலியல் சார்ந்த தகவல்கள் இருந்தாலும் ஆசிரியர் உட்பட பல பள்ளிகளில் தெளிவாக அவ்விஷயங்களை ஏற்படுத்தும்படியான பாடத்தை நடத்துவதில்லை. அந்தப் பாடத்தை மிகவும் நிதானமாக விளக்கினேன். இப்போது அவனுக்கு பீரியட்ஸ் என்றால் என்னவென்றுத் தெரியும். ஒரு பேப்பரில் சானிடரி நாப்கினின் பெயரை எழுதி மருந்துக் கடையில் வாங்கி வா என்று சொன்ன போது, பேப்பரைக் கிழித்துவிட்டு, அவனே கேட்டு வாங்கி வந்தான். இது முந்தைய காலங்களில், அவன் தந்தை கூட முதலில் செய்யத் தயங்கிய விஷயம். இதெல்லாம் ரொம்ப ஓவர் அவனைப் போய் எதுக்கு வாங்கி வரச் சொன்னே என்று வீட்டினர் கேட்டாலும், இந்த வயதில் அவனுக்கு ஒரு பெண்ணின் வலி புரியவில்லை என்றால், எந்த வயதிலும் புரியாது. வலி என்பதைவிட அது இயற்கை அதுவே பிறப்பின் இயல்பு என்ற தெளிவு ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் தெரிந்தால்தான், தன் தாயின், தன் சகோதரியின் உடல்நிலை குறித்த அக்கறை பெண்களின் மீதான மரியாதையாக மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை.

தற்காலத்தில் லவ் என்ற வார்த்தை தான் பள்ளியில் அதிகம் கூறப்படும் சொல் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிவார்கள். என்னிடமே தன் வகுப்பில் நான்கைந்து பேர் டீப் லவ்வில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறான். நீ எப்படிடா என்று விளையாட்டாகக் கேட்டால், என் க்ளாஸ் கேர்ள்ஸ் எல்லாம் ரொம்ப பொல்லாதவங்க, அதோட எனக்கு பெண்களையே பிடிக்கலை என்றான். ஏன் இத்தனை வெறுப்பு என்று கேட்டு அது வெறுப்பு இல்லை பயம் தயக்கம் என்பதைப் புரிந்து கொண்டு, அவனிடம், நீ ஸ்கூலுக்கு எதுக்கு போறே படிக்கறதுக்கு, அதை மட்டும் கவனமா செய் என்றேன். தவிர லவ் பண்றாங்கன்னு சொன்னே இல்லை அவங்க அதுக்கான அர்த்தத்தைக் கூட தெரிஞ்சுக்காதவங்க. அதனால அதை நீ கவனத்துல வைச்சுக்க வேண்டாம். காதல் அதன் உண்மையான அர்த்தத்தில் உனக்கு என்னிக்காவது புரியும். அப்போ நீ அதை பத்தி யோசி என்றேன். அவனுக்கு தலை சுற்றிய மாதிரி இருந்ததால் டாபிக்கை மாற்றி பேசத் தொடங்கினான். தற்போதெல்லாம் கல்லூரி காதல்கள் மாறி, பள்ளியில், தெருக்களில், ரயில் நிலையங்களில் என காதல் இளம் வயதினரைப் படுத்தும் பாடு சொல்லில் அடங்காது. அந்தக் காதலுக்காக அந்த இளம் வயதினர் கொலை, தற்கொலை என தவறான முடிவை நோக்கித் திரும்புகிறார்கள் என்பது பெரும் சோகம்.

பெற்றோர்கள் இது குறித்த விழிப்புணர்வை தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தவில்லை என்றால் பாதிப்பு அதிகமாகும். ஒரு ஸ்கேல் எடுத்து வகுப்பு நடத்தாமல் தோழமையுடன் பேசினால் போதும் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதையும் மீறி அவர்கள் ஹார்மோன்கள் சேட்டை செய்தால், உடனே ரியாக்ட் செய்யாமல் விட்டுப் பிடியுங்கள். இந்த வயதில் எதைவிடவும் படிப்பு ஒன்றே முக்கியம் என்பதை உங்கள் சொல்லில், செயலில் மிகுந்த அக்கறை மற்றும் பொறுமையுடன் சொல்லுங்கள். நிச்சயம் கேட்பார்கள். 

என்ன விஷயமாக இருந்தாலும் மகனிடம் பேசுங்கள். உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களிலிருந்து உருவானவர்கள்தான். யாரையும் விட அவர்களை நம்புங்கள். அவர்கள் நீங்கள் பெரிதும் மதிக்கும் யாரைப் பற்றியாவது குறை கூறினால், அதை காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது குரல் சன்னமாக ஒலித்தாலும் அதில் உண்மை இருக்கும். நம் குழந்தைகள் நம்மை மட்டும் நம்பிதான் இந்த உலகிற்கு வந்துள்ளார்கள். அவர்கள் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்படியாக வளரும் வரை, நூறு சதவிகிதம் நாம் தான் பொறுப்பு. நம்முடைய பொறுப்பு என்பது சமைப்பது, உடைகள் வாங்கித் தருவது, படிக்க வைப்பது உள்ளிட்ட விஷயங்களில் முடிந்து போவதில்லை. அவர்களின் உலகில் நடப்பவற்றை அவதானித்து, அவர்களுடன் அந்தச் சின்னஞ்சிறு உலகத்தில் நிகழும் பிரச்னைகள், வன்முறைகளை எதிர்த்துப் போராடி, அவர்களை ஜெயிக்க வைப்பதுதான் பெற்றோர்களாகிய நம் முக்கிய கடமை. மாறாக அவர்களை மிரட்டி, நீதான் தப்பு செய்திருப்பாய் என்று பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களையே குற்றம் சுமத்தும் பெற்றோர் இருப்பதால்தான் மனச் சிக்கல்களுடன் குழந்தைகள் வளர்கிறார்கள். 

நாளைய இளைய சமூகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இன்று குழந்தைகள் தம் மனத்தை திறந்து பேச வேண்டும். நாமும் அவர்களுடன் சாப்பிடு, படி, தூங்கு என்பது போன்ற ரொட்டீன் உரையாடல்களை எல்லாம் விடுத்து இன்னிக்கு நாள் எப்படி இருந்தது. புதுசா என்ன செஞ்சே, யார் மனசையாவது காயப்படுத்திட்டியா அல்லது ஏதாவது உனக்கு பிரச்னையா? ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாகப் பேசுங்கள். அந்தப் பேச்சுதான் உங்கள் பிள்ளைகளை சிந்திக்க வைக்கும், தைரியம் கொடுக்கும், நமக்கு அம்மா இருக்கிறாள் என்ற ஆழமான நம்பிக்கையை வேறூன்றச் செய்யும். நம் பிள்ளைகளின் பாதுகாப்பில்தான் நமது மகிழ்ச்சி உள்ளடங்கியிருக்கிறது. காலத்துக்கு ஏற்ப நவீன அம்மாக்களாக நாம் உருமாறுவதுதான் சரி. ஒப்புக் கொள்வீர்கள்தானே?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT