இரண்டு லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட மேலணை ? கட்டியது யார்??

காவிரியில் கரைபுரண்டு ஓடி வரும் தண்ணீரை முக்கொம்பு என்ற பகுதியில் கட்டப்பட்ட மேலணை தடுத்து, இரண்டு பகுதிகளுக்கு பிரித்து வழங்கி வந்தது.
இரண்டு லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட மேலணை ? கட்டியது யார்??

காவிரியில் கரைபுரண்டு ஓடி வரும் தண்ணீரை முக்கொம்பு என்ற பகுதியில் கட்டப்பட்ட மேலணை தடுத்து, இரண்டு பகுதிகளுக்கு பிரித்து வழங்கி வந்தது.

பராமரிப்பு இல்லாததால் தற்போது முக்கொம்பு அணையின் 9 மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

மேலணை (Upper Dam) என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும். இது திருச்சிக்கு அருகே உள்ளது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது.மேலணை 1836 மற்றும் 1838-இல் கட்டப்பட்டது. ஒரு கிளைக்கு கொள்ளிடம்(Cloleroon) என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.
 

கல்லணையில் அதிக நீர் தேங்கும்படி மாறுதல் செய்யப்பட்டதால், திருவரங்கத்தின் ஆரம்பத்தில் முக்கொம்பு என்ற இடத்தில் கொள்ளிடத்தில் தண்ணீர் பாய்ந்து சென்றது.  கொள்ளிடம் படுகை மேன்மேலும் ஆழமாகிக் கொண்டே இருந்தது.  அதனால், காவிரி கழிமுகத்தில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை.  தண்ணீர்ப் பற்றாக்குறை கடுமையான பிரச்னையாகிவிட்டது.  

பிரச்னையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும், அரைகுறைத் தீர்வாகவும், தற்காலிகமாகவும் இருந்தனவே அன்றி முழுத் தீர்வைத் தரவில்லை.

சர் ஆர்தர் காட்டன், முக்கொம்பில் ஓர் அணையைக் கட்டி பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று கூற, அந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1836-ல் அந்த இடத்தில் அணை ஒன்று கட்டப்பட்டது. கொள்ளிடத்தில் கட்டப்பட்ட அணை கல்லணையின் மேல் பகுதியில் இருந்ததால் மேலணை என்று அழைக்கப்பட்டது.  இது நீரொழுங்கி என்ற வகை அணைதான்.  காவிரியில் வெள்ளம் ஏற்படும்போது நீரைக் கொள்ளிடத்துக்குத் திருப்புவதுல் காவிரியில் தண்ணீர் குறையும்போது நீர் முழுவதையும் காவிரி ஆற்றிலேயே பாயுமாறு செய்வதுமே அந்த அணையைக் கட்டியதன் நோக்கம்.  அந்த அணையைக் கட்டியவர் சர் ஆர்தர் காட்டன்.

கட்டடக் கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு மேலணை அணையாகவும் ஆற்றைக் கடக்க உதவும் பாலமாகவும் இது பயன்படுகிறது.  இந்த அணையில் 40 அடி அகலமுள்ள 55 மதகுகள் உள்ளன.  மதகுகள் ஒவ்வொன்றிலும் மூடித் திறக்கிற 8 டன் எடைகொண்ட கதவு பொருத்தப்பட்டுள்ளது.  கதவு கனமாக இருந்தாலும் தனியாக ஒருவரே அதை ஏற்றி, இறக்கும் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது.  அணையின் மேலலே பாதசாரிகள் மட்டும் நடந்து செல்லக்கூடிய 6 அடி 9 அங்குல குறுகிய சாலை ஒன்றும், அமைக்கப்பட்டிருக்கிறது.  மதகுகள் அமைக்கும் நோக்கத்துடனேயே அந்தப் பாலம் கட்டப்பட்டது. அணைக்குத் தேவையான கற்கள் அருகிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. அணையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட மாகாண தலைமைப் பொறியாளர் கொல்.ஜேம்ஸ் டன்கன் சிம் (Col. James Duncan sim) வந்துசென்றுள்ளார்.

அணை கட்டப்பட்ட தகவல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பலகை அறிவிப்பின் தமிழாக்கம் வருமாறு:

இந்த அணைக்கட்டு தஞ்சாவூர் பாசனத்துக்காக மேஜர் ஏ.டி. காட்டனால் நிர்மாணிக்கப்பட்டு, மேஜர் எ.டி. காட்டனால் கி.பி. 1836-ல் கட்டப்பட்டது.  என். டபிள்யூ கிண்டர்ஸ்லே என்பவர் தஞ்சாவூர் முதன்மை கலெக்டராக இருந்தார்.  பின்னர் கி.பி.1846-ல் மதகுகளும் மேம்பாலமும் கேப்டன் எட்வர்ட் லாபோர்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டன.  சர் பி.சி.மாண்ட்கோமேரி போர்ட் என்பவர் கலெக்டராக இருந்தார்.  பணிக்கு ஆன மொத்த செலவு 2 லட்ச ரூபாய்.  இதனால் பெறும் பயனைக் கணக்கிட முடியாது. 

மேலணை கட்டி முடிக்கப்பட்டவும் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறியதைப்போல் தோன்றினாலும் நாளடைவில் அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருந்தது. அகண்ட காவிரியில் வெள்ளம் வரும்போது, தஞ்சை டெல்டா பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் மட்டும் காவிரியில் பாயுமாறு செய்து, மீதியை கொள்ளிடத்தில் பாயும்படி செய்ய மேலணை உதவியது.  காவிரிக்கு தண்ணீரை திருப்புவதற்கு மேலணை மட்டுமே போதும், காவிரியில் அணை தேவைப்படாது என்று எண்ணினார்.

பாசனக் காலங்களில் காவிரியில் நீர் வரத்து குறைவாக இருந்தால், மேலணை மதகுகள் மூடப்பட்டு, நீர் முழுவதும் காவிரி வழியாக கல்லணைக்குத் திருப்பி விடப்படும்.  ஆற்றின் நீர் வரத்து அதிகமாக இருந்தால் காவிரிக்கு தேவையான நீர் மட்டும் செல்லும் வகையில் அணையின் கதவுகள் அதற்கு ஏற்ற அளவில் உயர்த்தப்பட்டு மீதி கொள்ளிடத்தில் விடப்படும். வெள்ளம் வந்தால் மதகுகள் முழுவதுமாகத் திறக்கப்பட்டு தண்ணீர் கொள்ளிடத்தில் செலுத்தப்படும்.  இதனால் காவிரிக் கரை காக்கப்படும்.

மேலணை விளைவுகள்
காவிரி கொண்டு வரும் மணல் கொள்ளிடத்தில் படிந்து. அதன்படுகை நாளடைவில், மேடாகிக் கொண்டே வந்தது. எனவே, காவிரியில் நீர் அதிகமாகப் பாய்ந்ததால், காவிரிப் படுகை மட்டம் ஆழமாகிக்கொண்டே வந்தது.  காவிரிப் படுகை மட்டம் ஆழமாக ஆழமாக தண்ணீரும் அதிகமாகப் பாய்ந்தது.  அதனால், வெள்ள அபாயம், சேதம் எல்லாம் காவிரியில் ஏற்பட்டன.

எனவே காவிரியின் தலைப் பகுதியிலும், மேலணைக்கு எதிராக நீர் ஒழுங்கி அணை ஒன்று 1845-ல் கட்டப்பட்டது.  அணை 1950 அடி நீளம் உடையது மூன்று பிரிவுகளைக் கொண்டது.  மேடை போன்று அமைக்கப்பட்ட அணையின் நடு பாகம் ஆற்றுப் படுகை மட்டத்துக்குச் சமமாகவும், மற்ற இரு பக்கங்களிலும் காவிரிப் படுகை மட்டத்துக்கு  மேல் ஓர் அடி முதல் ஒன்றரை அடி உயரம் வரை இருக்கும்படி கட்டப்பட்டது.  இந்த அணை கர்னல் சிம் என்பவரின் ஆலோசனையின்  பேரில், கேப்டன் லாகோ ஃபோர்ட் என்பரவால் கட்டப்பட்டது.

வெள்ள காலத்தில், கொள்ளிடத்தில் உச்சபட்சமாக வினாடிக்கு 2.7 லட்ச கன அடி நீரும், காவிரியில் உச்சபட்சமாக வினாடிக்கு 1.8 லட்ச கன அடி நீருமாக, இரண்டிலும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 4.5 லட்ச கன அடி நீர் பாயும்.

இந்த சர் ஆர்தர் காட்டன், கல்லணையை 'தி கிராண்ட் அணைக்கட் THE GRAND ANUCUT)' என்று அழைத்தவர். இந்த சர் ஆர்தர் காட்டன் 1834-இல் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டுவதற்கான முதல் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com