ராகுல் வராத கருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்பு: ஆரூடம் சொல்வது சரியா?

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
ராகுல் வராத கருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா பங்கேற்பு: ஆரூடம் சொல்வது சரியா?


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார் என்று திமுக உறுதி செய்துள்ளது.

திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கற்க மாட்டார் என்றும், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் பங்கேற்பார் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மறைந்த கருணாநிதிக்கு நினைவஞ்சலிக் கூட்டம் ஒவ்வொரு துறையினரையும் கொண்டு நடைபெற்று வருகிறது.

அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் நினைவஞ்சலிக் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அகில இந்திய தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஏற்று, நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. வரும் 30-ஆம் தேதி வாக்கில் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல உள்ளதால் அவர் பங்கேற்கவில்லை என்றும், அவருக்குப் பதில் குலாம் நபி ஆசாத் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பெற்றுள்ளது. ஆனால், கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்காமல், பாஜகவின் தலைவர் அமித்ஷா பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, உலக அளவில் அறியப்படும் தலைவர் என்பதால், அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தேசியத் தலைவர்கள் பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் எந்த அரசியல் கலப்பும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, தமிழகத்தில் பல காலமாக நடந்து வரும் திராவிட ஆட்சிகள் செய்த ஊழலே, மாநிலத்தை நாசமாக்கிவிட்டது என்றும், மாநிலத்தை முன்னேற்றும் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வர பாஜக மட்டுமே ஒரே வழி என்றும் கூறியிருந்தார்.

தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து பாடுபட்டு வரும் பாஜக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அஸ்தியைக் கூட நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நதிகளில் கரைத்து அதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயலும் நிலையில், கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியையும் அப்படியே பார்க்குமா? என்ற சந்தேகம் எழுகிறது.

அதே சமயம், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மாநிலக் கட்சிகளை தங்களுடன் கூட்டணி அமைத்து வரும் 2019 மக்களவைத் தேர்தலை மிகப் பலமான எதிர்க்கட்சியாக சந்திக்க திட்டமிட்டிருக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் தற்போதைய நிலைக்கு மிகப் பலமான கட்சியாக விளங்கும் திமுகவைக் கோட்டைவிட்டுவிடுமோ என்ற ஆச்சரியமும் எழுகிறது.

இவ்விரண்டு விஷயங்களுமே கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமித் ஷா வருவதும், ராகுல் காந்தி வராததற்கும் ஏதோ மர்ம முடிச்சுகள் இருப்பதைப் போல தோன்றினாலும், அப்படியெல்லாம் இல்லை என்றே நம்பலாம். ராகுல் காந்தி வெளிநாட்டில் இருக்கிறார். அதனால் அவர் வரவில்லை. அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக அரசியலில் மூத்தத் தலைவர் என்பதால் கருணாநிதியின் நினைவேந்தலில் கலந்து கொள்ள அமித் ஷா முடிவு செய்துள்ளார் என்று மட்டுமே நினைப்போம்.

நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com