கமல் ‘முதல்வர்’ ஆனால் போடும் முதல் கையெழுத்து இதற்காகத் தான் இருக்கும் என்கிறார்!

கமல் ‘முதல்வர்’ ஆனால் போடும் முதல் கையெழுத்து இதற்காகத் தான் இருக்கும் என்கிறார்!

இந்த லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாக்களைப் பற்றிய ஞானம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?

சமீபத்திய விழாவொன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை, அதே விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் சில கேள்விகள் கேட்டார். அதிலொன்று, நீங்கள் தமிழக முதல்வர் ஆனால், போடவிருக்கும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும்? என்றொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு கமல் அளித்த பதில்...

நான் முதல்வர் ஆனால்... போடவிருக்கும் முதல் கையெழுத்து லோக்பால் மசோதாவுக்காகத் தானிருக்கும். அது தான் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைப் படுத்தப் பட்டு விட்டதே. பிறகெதற்கு அதைப் பற்றி மீண்டும் பேச வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இப்போது உள்ள லோக்பால் மசோதா வெறும் கண் துடைப்பு. அது திருத்தி எழுதப்பட வேண்டும். யார் முதல்வராக ஆகிறார்களோ, அவர்களை  அதில் கையெழுத்துப் போட வைப்பேன். நான் முதல்வராக வந்தால் போடுவேன். என்றார். 

கமல் சொன்ன பதிலில் பார்த்திபன் சமாதானமாகியிருக்கலாம். ஆனால், அவர் சொன்னதைக் கேட்ட பிறகு தான் தோன்றியது. இந்த லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாக்களைப் பற்றிய ஞானம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? என்று; அப்படிப் பார்த்தால், இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு அஞ்ஞான இருள் மூழ்கி இருப்பது எங்கு தெரியுமா? இந்திய அரசிலமைப்புச் சாசனம் மற்றும் குடிமையியல் விதிகள் மற்றும் உரிமைகளைப் பற்றிய விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமற்ற நம் மக்களின் மூளையில் தான் எனலாம். உண்மை அறிய வேண்டுமென்றால், நீங்களே உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் சிலரிடம் கேஷுவலாகக் கேட்டுப் பாருங்களேன், லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா மசோதா என்றால் என்ன? அவை ஏன் கொண்டு வரப்பட்டன? அவற்றின் நோக்கமும், வெற்றியும் என்ன? என்று; 

எத்தனை பேர் சரியாகப் பதில் சொல்கிறார்கள் என்று பாருங்கள். நிச்சயம் கணிசமாக ஏமாற்றம் தான் மிஞ்சும்.

லோக்பால் மசோதா என்றால் என்ன?

‘லோக்பால் மசோதா 2011’ அல்லது ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011’ என்பது இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட மசோதா ஆகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் உள்ளிட்ட தவறுகளை இழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாகத் தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் இம்மசோதா முன்மொழியப்பட்டது.

இம்மசோதா டிசம்பர் 22, 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, பின்பு 27 டிசம்பர் 2011 ல் ‘லோக்பால்’ மற்றும் ‘லோக் ஆயுக்தா மசோதா 2011’ நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா டிசம்பர் 29, 2011 ல் நிராகரிக்கப்பட்டது. பின்பு 21 மே 2012 ல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங்களவையில் இம்மசோதா 17 டிசம்பர் 2013 ல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18 டிசம்பர் 2013 ல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது.

லோக்பால் பின்னணி...

'லோக்பால்' என்னும் சொல், லஷ்மி மால் சிங்வி எனும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. 'லோக்' என்றால் மக்கள் என்றும் 'பால்' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமஸ்கிருதத்தில் அர்த்தமாகிறது. மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் 1986 ல் தன் 'Problems of Redressal of Citizen's Grievances' எனும் அறிக்கையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் சிறப்பு அதிகாரமிக்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கதாகிறது.

லோக்பால் மசோதா, மக்களவையில் 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையின் 4 வது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது. 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2011,2011 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. 28 Oct 2011...  43 வருடம் கழித்து மீண்டும் 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 2013 டிசம்பர் 17,18 ல் இரு அவைகளிலும் நிறைவேறியது.

தனியார் நிறுவனங்கள் குறித்த திருத்தங்கள்...

நாடாளுமன்ற மாநிலங்களவையில் லோக்பால் சட்ட முன்வடிவு இறுதியாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்பால் புலனாய்வின் வரையறைக்குள், தனியார் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக பொது- தனியார்- ஒத்துழைப்பு என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுச் சொத்துக்களை அல்லது அரசு மற்றும் பொதுத் துறை நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிபெறும் ஏற்பாடுகளைக் கொண்டுவரக்கூடிய விதத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அந்தத் திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் அவையில் இருந்தபோதிலும், இதற்கு 19 வாக்குகள் கிடைத்தன. இதன் பொருள் இடதுசாரி அல்லாத வேறுசில மாநிலங்களவை உறுப்பினர்களும் இதனை வரவேற்றிருக்கிறார்கள் என்பதாகும். ஆயினும் இந்தத் திருத்தம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தனியார் கம்பெனிகள் மீதான சோதனைகள் எதையும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ விரும்பவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டியது.

லோக்பால் மசோதாவின் முக்கிய கூறுகள்...

டிசம்பர் 18, 2013 அன்று நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுகள் கீழே வருமாறு...

  • மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு;
  • தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.
  • லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.
  • பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.
  • லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.
  • விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
  • ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.
  • நேர்மை, நாணயம் மிக்க ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு.
  • லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
  • சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகாரக் குழு பரிந்துரைக்கும்.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு.
  • லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
  • ஊழல் வழியில் சேர்த்த சொத்துக்களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறைகள் உள்ளடங்கும்.
  • ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
  • லோக்பால் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயம்.

அவ்வளவு தாங்க லோக்பால். ஆனால், இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அறிந்து கொள்ள ஆர்வமே காட்டாமல் பெருவாரியான மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களது மனம் மாற்றமடையாமல், ஊழலை ஒழிப்பதைப் பற்றியதான தெளிவானதொரு நிலைப்பாட்டை நம் மக்களால் எடுத்து விட முடியாது. பிறகெப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்கிறீர்களா? அதற்காகத்தான் இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார் கமல். அவர் முதல்வர் ஆகிறாரோ இல்லையோ அவரது நோக்கம் நிறைவேறினால் நல்லது தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com