உயரத்திலிருந்து குதித்து உடல் சிதறி இறக்கத் துணியும் மனநிலையை ‘எக்ஸ்டஸி’ என்பார்களா!

தற்கொலை செய்து கொள்ளும் முறைகளில் ஒன்றான... இந்த அதிக உயரத்தில் இருந்து குதித்து இறப்பது என்பது ஆரோக்யமான மனநிலையில் இருப்பவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விஷயம். 
உயரத்திலிருந்து குதித்து உடல் சிதறி இறக்கத் துணியும் மனநிலையை ‘எக்ஸ்டஸி’ என்பார்களா!

மும்பையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 32 வயது இளைஞர் ஒருவர் தான் வசித்து வந்த அபார்ட்மெண்ட் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது செய்தி. தற்கொலைக்கான காரணமாக மன அழுத்தம் இருக்கலாம் என முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இளைஞர் இந்திப் படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிக் கொண்டிருந்தார் எனத் தகவல்.

இந்த இளைஞர் மட்டுமல்ல, கடந்த மாதம் அதே மும்பையில் 14 வயது பள்ளி மாணவி ஒருவரும் கூட இதே விதமாகத்தான் தான் வசித்து வந்த அபார்ட்மெண்ட்டின் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி படிப்பில் படு சுட்டி என்கிறார்கள். வீட்டிலும் அவருக்குப் பிரச்னைகள் இருந்ததாகத் தெரியவில்லை. பள்ளியிலிருந்து திரும்பிய மாணவி, நேராக வீட்டுக்கு வந்து உடை மாற்றிய வேகத்தில் மொட்டைமாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்திருக்கிறார். படுகாயங்களுடன் கீழே விழுந்த மாணவி உயிருக்குப் போராடிய நிலையில் அவருடைய தாயாரிடம் பேசியதாகவும் தகவல். என்ன காரணத்தாலோ மாணவி தற்கொலை விவகாரம் குறித்து மேலதிக விவரங்கள் எதுவும் பத்திரிகைகளில் செய்தியாக்கப்படவில்லை. அந்த மாணவியை மாடியில் இருந்து குதித்து இறக்கத் தூண்டியது எது? என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

தற்கொலை செய்து கொள்ளும் முறைகளில் ஒன்றான... இந்த அதிக உயரத்தில் இருந்து குதித்து இறப்பது என்பது ஆரோக்யமான மனநிலையில் இருப்பவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விஷயம். 

யோசித்துப் பாருங்கள், அதிக உயரமுள்ள மலை, கட்டிடம், அணை, பாலம், வீட்டு மொட்டைமாடி உள்ளிட்ட இடங்களிலிருந்து குதித்து மரணத்தைத் தழுவுதல் என்பது எத்தனை மோசமாக நம் உடல் எலும்புகளை நொறுங்கச் செய்யும் என. இப்படித் தற்கொலை செய்து கொள்ள முயல்பவர்கள் அதைக் குறித்தெல்லாம் தற்கொலைக்கு இந்த உத்தியைத் தேர்ந்தெடுக்கும் முன் யோசிக்க மாட்டார்களா என்ன?! யோசிக்க முடிந்திருந்தால் முயற்சியில் இறங்கியிருக்கவே மாட்டார்களே! இந்த நிலையை அடைவதும் ஒருவகை மனப்பிறழ்வு தான்.

2006-ம் ஆண்டில் ஹாங்காங்கில் உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யும் முறையை 52.1% பேர் பின்பற்றி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல். தற்கொலை செய்து கொள்ள பல்வேறு முறைகள் இருந்தபோதிலும் ஒரு மனிதன் உயரமான இடங்களில் இருந்து குதித்து உடல் சிதறி இறக்கத் திட்டமிடுவது மனச்சிதறலின் அறிகுறி.

சிலர் தோல்விகளை எதிர்கொள்ளப் பயந்து, சிலர் அச்சத்தால், சிலர் மூட நம்பிக்கைகள் தரும் பயத்தால், சிலர் நோய் கடுமையின் காரணமாக, சிலர் நம்பிக்கை துரோகத்தின் காரணமாக, சிலர் சந்தேகத்தின் காரணமாகக்கூட தற்கொலை செய்து கொள்வார்கள். இந்த அத்தனை காரணங்களுக்கும் மூலம் மனம் மட்டுமே! மனம் பலவீனப்படும் போது தான் ஒருவர் தற்கொலை எண்ணத்தை நாடுகிறார். நாளாக, நாளாக அந்த எண்ணம் வலுப்பட்டு முற்றிய ஒரு கணத்தில் தற்கொலை நிகழ்ந்தே விடுகிறது.

சமீப காலங்களில் இந்தியாவில் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த வாரத்தில் மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புராரி கூட்டுத்தற்கொலை விவகாரம் தற்கொலை உத்திக்கான, காரணங்களுக்கான அபத்தங்களின் உச்சம். 

ஆனால், இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் குற்றமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றமல்ல என்ற சட்டம் 2017 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி பார்லிமெண்ட்டில் நிறைவேற்றப்பட்டது. இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் அச்சட்டம் குறித்த ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிப்பது ஐபிசி விதிகளின் கீழ் கொண்டு வர முடியாது என மத்திய சுகாதார அமைச்சர் JP நட்டா கடந்த வருடம் மக்களவையில் தெரிவித்தார். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மன அழுத்தம் காரணமாக செய்யும் தவறுகளை குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறும் அவரது அறிக்கையின் தொடர்ச்சியாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், வயதானவர்களுக்கு மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

மனநோயால் பாதிக்கப்படவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இந்த அமைப்பில் ஈடுபடும் தன்னார்வலர்கள் உரிய மருத்துவர்களின் ஆலோசனைப்படி தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் 6-7 % பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1-2 % பேருக்கு நோயின் தீவிரம் அதிகமாக உள்ளதாகவும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு குறித்து சிந்திக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ள இச்சட்டம் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அரசின் இச்சட்டத்தின் நோக்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுதலே மனச்சிதறலால் தான் எனும் போது அதை மேலும் அதிகரிக்கும் விதமாக தற்கொலை முயற்சியில் இருந்து மீட்கப்பட்டவர்களை தண்டனைக்கு உட்படுத்தக் கூடாது என்பதாகவே இருக்க முடியும். எனினும் மேலோட்டமாக இந்தச் சட்டத்தை அணுகும் போது இது தற்கொலையை ஊக்குவிக்கும் விதமான சட்டமாகத்தான் தெரிகிறது.

சிலர் வெறுமே மிரட்டலுக்காகக் கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். அவர்களது நோக்கம் தற்கொலை மரணம் இல்லை. தான் நினைத்ததை நடத்திக் காட்டும் பிடிவாதத்தின் காரணமாக பிறரையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ மிரட்டுவதற்காகக் கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள். அத்தகையோரும் இந்தச் சட்டத்தின் காரணமாக மனப்பிறழ்வால் தான் தற்கொலை முயற்சியில் இறங்கினோம் என்று நிரூபிக்க முயன்று தண்டனையில் இருந்து விடுபட முடியும் எனும்போது இச்சட்டத்தின் பிரதான நோக்கமே கெட்டு விடுகிறது.

அது மட்டுமல்ல, சிலருக்குத் தற்கொலை செய்து கொள்ள தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பது என்பது உலகையே ஜெயித்த உணர்வைத் தரக்கூடும். நம்புங்கள்... சர்வதேச அளவில் வினோதமான தற்கொலை எண்ணங்களைப் பற்றிய கட்டுரையொன்றை வாசிக்கையில் தற்கொலைக்கு இப்படியொரு காரணமும் இருப்பது தெரியவந்தது. அந்த உணர்வைச் சரியான வகையில் விளக்குவதென்றால் ‘எக்ஸ்டஸி’ என்று குறிப்பிடலாம். அதாவது பேரின்பநிலை. சித்ரவதைப் பட்டு இறக்க முயற்சிப்பதில் என்ன விதமான பேரின்பத்தைக் காண முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இப்படியொரு குழு உலகில் இயங்கிக் கொண்டிருப்பதே பலருக்குத் தெரிய சாத்தியமில்லை. 

சர்வதேச அளவில் தற்கொலை ஆர்வம் கொண்டவர்களுக்கென ஒரு குழுவே இணையத்தில் இயங்கி வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தக் குழுவினர்... தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டுள்ள தற்கொலைக் குறிப்புகள் பற்றியதொரு முக்கியமான தகவல்...

‘உலகில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியைத் தேடிக் கண்டுபிடியுங்கள். தயவுசெய்து நெருப்பில் விழுந்து இறப்பது, உயரமான மலையில் அல்லது மாடியில் இருந்து குதிப்பது போன்ற விபரீதமான யோசனைகளைக் கைவிடுங்கள். அது நரகம்’ இறந்து விட்டால் தேவலாம். தற்கொலை முயற்சியில் நீங்கள் காப்பாற்றப்பட்டால் அதன் பின்னான வாழ்க்கை உங்களுக்கு நரகம்’. என்பதே அது.

தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் கவனத்துக்கு இந்தத் தகவல் எல்லாம் போய்ச் சேர்ந்தால் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com