தண்ணீர்த் தொட்டி - கொத்தடிமைகள் ஆக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய சிறுகதை!

வேலை செய்து வேலை செய்து காய்ந்துபோன அந்த பிஞ்சு கரங்களையும் கொதிக்கும் எண்ணெய் பட்டு கொப்பளமாகி, ரணமாகிப்போன காயங்களையும், ஓனர், மேஸ்திரி ஆகியோர் அடித்து காயப்படுத்திய புண்களையும் காட்டின சிறுவனை பார்
தண்ணீர்த் தொட்டி - கொத்தடிமைகள் ஆக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய சிறுகதை!

முழு நிலவு மேகக்கூட்டத்தினூடே ஊடுருவும் நிசப்தமான நடுநிசி பொழுது. தூரத்தில் தெரியும் சைக்கிளில் அருகாமையிலுள்ள மணியாச்சி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் இரவு ஷிஃப்ட் முடித்துவிட்டு வழக்கம்போல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். ஏழு சிறு வாய்க்கால் பாலங்களை கடந்து தான் அவர் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும். இரவு கடந்து நேரம் அதிகாலை ஒரு மணியை தொட்டுக் கொண்டிருக்கிறது. நாயின் ஊளைச்சத்தம், சுவர்ப் பூச்சிகளின் ரீங்காரச் சத்தங்களுக்கிடையே அவர் மூன்றாவது பாலத்தைக் கடக்கும் போது அந்த பாலத்தினூடே கேட்ட முனகலோசை... ஒரு நொடி அவரைத் திடுக்கிட்டு நிலைகுலைய வைத்தது. 23 ஆண்டுகளாக இதே பாதையில், இதே நேரத்தில் வைரவன் பயணிக்கிறார். இது என்ன விசித்திரமான ஓசை?! ஒருவேளை காத்து, கருப்பாக இருக்குமோ?! எதுவாக இருந்தால் தான் என்ன? எதற்கும் ஒருமுறை கீழிறங்கிப் பார்த்துவிடலாம் என சைக்கிளை நிறுத்தினார்.

அந்தோ பரிதாபம்! பாலத்தின் இடுக்கில் ஒரு சிறுவன் உடலெல்லாம் ரத்த காயத்துடன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அழுக்கான உடல், உபயோகமில்லாத உடைகள், மெலிந்த தேகம் தலை முதல் கால் வரை சிராய்ப்புகளும், ஆறியும் ஆறாத பழைய, புதிய காயங்களுமாக மிகப் பரிதாபகரமான தோற்றத்தில் அவனிருந்தான். பார்ப்பதற்கு தமிழ் பையனைப் போலத் தெரியவில்லை. சுமாராக 13 வயதிருக்கும். முகம் சைனா சைசில் இருக்கிறது. இந்த அருகில் மருத்துவமனை உள்ளது. சரி எப்படியும் இருக்கவே இருக்கிறது 108. அவர் செல்போனில் 108 டயல் செய்தார். சில மணி நேரத்தில் உணர்வற்ற அந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு நர்சிடம் ‘கவனிச்சுக்கம்மா எனக்கு காலைல டியூட்டி இருக்கு. எதுக்கும் என் செல் நம்பரை நோட் பண்ணிக்கோ காலைல பார்க்கலாம். யார் பெத்த பிள்ளையோ பாவம்’ என கூறிவிட்டு கிளம்பினார். மருத்துவமனையில் சிகிச்சையை ஆரம்பித்தார்கள். மேலோட்டமான காயங்கள் தான், ஆனால் ரணமான காயங்கள். யார் இந்த குழந்தை? எப்படி கிராமத்திற்கு வந்தது? ஏதாவது பிரச்சினையாகி விடுமோ? எதற்கும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிடலாம் என்றார் டாக்டர். 

காலை 6 மணி கதிரவன் வானத்தை எட்டி பார்க்கும் நேரம். ஊரே அதிர்வது போன்ற அலறல் சத்தம். ஆம் அந்த குழந்தைக்கு உணர்வு திரும்பியது. ஆனால் அதன் கண்களுக்குள் ஒரு வித அச்ச உணர்வு அந்த அச்சத்தினால் எழும் அலறல். யார் யாரோ போய் பேசி பார்த்தார்கள், முடியவில்லை. ஆட்களை பார்த்தால் பயந்து அழுதுகொண்டே மூலை முடுக்குகளில் போய் ஒளிந்து கொள்கிறது. இது விபரீதமான விவகாரமாக அனைவருக்கும்பட்டது. ஜீப் சத்தம் கேட்டது இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் சட்டையில் சாரதா என அவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மிக பாசமாக பேசிப்பார்த்தார். சிறுவனின் அலறல் மட்டும் நிற்கவே இல்லை. ரத்தத்தை உறைய வைக்கும் அச்சத்தின் பிடியிலிருந்தான் அந்த சிறுவன். இதுவரை மனிதர்களை பார்த்ததே இல்லை என்பதைப்போல யாரை பார்த்தாலும் பயந்து அழுதான். காயங்களுடன் கோரமாகத் தெரிந்தான். 

அவன் ஒரிசாவை சார்ந்த சிறுவன் என அவன் முகபாவம் சொல்கிறது என்றார் இன்ஸ்பெக்டர்;  என்ன செய்வது? அச்சத்தின் பிடியிலிருந்த அந்த சிறுவனின் அருகே சென்று அவன் தலையை தடவிக்கொடுத்தார். தொடர்புகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. ‘என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். நெடுநாட்கள் அவர் ஒரிசாவில் பணியாற்றினார். அவருக்கு மொழி தெரியும்’ என ஒரு நர்சம்மா சொன்னது... இன்ஸ்பெக்டரின் காதுகளில் தேனாக ஒலித்தது. அந்த மாஜி ராணுவ வீரரும் வரவழைக்கப்பட்டார்.

இந்த சிறுவனையும் அவனது உடலமைப்பையும் பார்த்த மாத்திரத்தில் அந்த பெரியவர் சொன்னார். ‘இன்ஸ்பெக்டர் மேடம், 27 ஆண்டுகள் நான் ஒரிசாவின் சில கிராமங்களில் இருந்தேன். அங்கு சில சமூக விரோதிகள் ஏழைப் பெற்றோரிடம் மூளைச் சலவை செய்து முன்பணமாக ரூ.5000 முதல் ரூ.10,000 வரை கொடுத்துவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு போய் இங்கு சில கம்பெனிகளில் ரகசியமாக வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்குவார்கள். சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி அதை முன்பணத்தில் கழிப்பதாக சொல்லுவார்கள். உயிர் வாழும் அளவிற்கு உணவு கொடுப்பார்கள். ஓய்வில்லாமல் 20 மணி நேரம் வரை வேலை கொடுப்பார்கள். ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. வெளியே எங்கும் போக முடியாது. அப்படி போனால் தேடி கண்டுபிடித்து அடித்து உதைத்து விடுவார்கள். காலப்போக்கில் இதுவே பழக்கமாகி இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை அந்த குழந்தைகள் ஏற்றுக்கொண்டு மனதளவில் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். இதனால் சில முதலாளிகளும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். யாரோடும் பேசக்கூடாது, எங்கும் போகக்கூடாது. உனது அப்பா 5000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அதற்காக தான் நீ இங்கு வேலை செய்கிறாய். வெளியே போனால் அந்த 5000 ரூபாய்க்காக உன்னை போலீசில் பிடித்து கொடுத்து விடுவோம். என வாழ்நாள் பூராவும் அந்த கடனின் பெயரைச் சொல்லி இந்த குழந்தைகளின் வாழ்வை சீர்குலைக்கும் சூழல் இங்கு இருக்கிறது. நான் உண்மையாக நம்புகிறேன். இந்த ஒரிசா குழந்தை கூட அப்படி பாதிக்கப்பட்ட குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்றார். அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இதை சொன்னதும் அங்கு கேட்டுக் கொண்டிருந்த யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. 

பதறிப்போன இன்ஸ்பெக்டர் போனில் டிஎஸ்பியிடம் பேசினார். அவரது அறிவுரைக்கேற்ப ஆர்.டி.ஓ. வை உடனடியாகத் தொடர்பு கொண்டார். நேர்மையான அந்த ஆர்.டி.ஓ அடுத்த 20 நிமிடத்தில் தனது குழுவோடு மருத்துவமனைக்கு வந்தார். ஒரியா தெரிந்த அந்த ராணுவ வீரரின் உதவியோடு அந்த குழந்தையை விசாரித்தார். ஆர்.டி.ஓ.-விடம் சிறுவன் சொன்னான். ‘அப்பா சிறு வயதில் இறந்து போனார். அம்மாவும் 4 குழந்தைகளும் உண்டு. இதில் நான் தான் மூத்தவன். 3 இளைய தங்கைகள்... மூத்த தங்கைக்கு திருமணம் (குழந்தை திருமணம்) செய்யும் போது ரூபாய் 5000  செலவானது. அதற்காக நாங்கள் 5000 ரூபாய் அட்வான்ஸ் வாங்கினோம். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு இந்த முறுக்கு கம்பெனியில் வேலை செய்கிறோம். என்னோடு 30 சிறுவர்கள் இந்த நரகத்தில் வேலை செய்கிறார்கள். எங்கள் ஊர், பெயர்,  எதுவும் தெரியவில்லை. எனது பெயர் ஜெயந்தன். ஒரே ஒரு வேளை கஞ்சி கொடுப்பார்கள். காலை 3 மணிக்கு எழுந்து முறுக்குச் சுட வேண்டும். அப்போது தான் 10 மணிக்கெல்லாம் பிரஷ் ஆக முறுக்கு பேக்கிங் செய்து லோடு ஏத்த முடியும். இரவு 11 மணி வரை மாவு பிசைந்து வைக்க வேண்டும். அப்போதுதான் காலை 3 மணிக்கு முறுக்குச் சுட முடியும். வேலை செய்து வேலை செய்து காய்ந்துபோன அந்த பிஞ்சு கரங்களையும் கொதிக்கும் எண்ணெய் பட்டு கொப்பளமாகி, ரணமாகிப்போன காயங்களையும், ஓனர், மேஸ்திரி ஆகியோர் அடித்து காயப்படுத்திய புண்களையும் காட்டின சிறுவனை பார்த்து ஆர்.டி.ஓ. கண்ணீர் விட ஆரம்பித்தார். பக்கத்திலே பல கி.மீ. வீடுகள் இல்லாத ஒரு அவாந்திரமான இடத்தில் தான் அந்த கம்பெனி இருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் அடித்து நொறுக்கி விடுவார்கள். வழிப்போக்கர் யாரிடமாவது பேசினால் அவ்வளவுதான் கொன்றுவிடுவார்கள். எனக்கு என் அம்மாவை பார்க்க வேண்டும். அவர்களை கட்டி அணைக்க வேண்டும். அவர்களின் மடியில் படுத்து உறங்க வேண்டும். ஆகவே தான் வெளியே ஓடி வந்தேன். துரத்தினார்கள்... கூட்டமாகத் துரத்தினார்கள் அவ்வளவுதான் தெரியும் ஐயோ....’ என்று கதறினான் அச்சிறுவன். 

இனி நேரம் கடத்தத் தேவையில்லை. 30 சிறுவர்களையும் மீட்க வேண்டும். ஆர்.டி.ஓ. அவசரப்பட்டார். போலீஸாரும் இணைந்தனர். ஜீப்பில் புறப்பட்டனர். யாருக்கும் அந்த சுற்றுவட்டாரத்தில அப்படி ஒரு முறுக்கு கம்பெனி இருப்பதே தெரியவில்லை. அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடினார்கள். பல மைல் சுற்றளவில் தேடினார்கள். அந்த சிறுவனால் கூட அந்த கம்பெனியை கண்டுபிடிக்க முடியில்லை. அடைபட்டு கிடந்த சிறுவன் எப்போதும் வெளியே வந்ததே இல்லையே ஆகவே அவனுக்கும் வழி தெரியவில்லை. நெடுநேரம் தேடியாகிவிட்டது. எல்லோரும் சோர்வுற்றனர். மாலை நெருங்கிவிட்டது. இனி நேரத்தை வீணடிக்கவேண்டாம். காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஆர்.டி.ஓ. அலுவலகம் திரும்ப ஜீப்பைத் திருப்பினார்... இரண்டு நிமிடத்தில்... சிறுவன் மகிழ்ச்சியில்  ‘நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்’ என்றான். தூரத்தில் தெரிந்த அரசாங்கத்தின் உயரமான தண்ணீர் தொட்டியை கைநீட்டி சுட்டிக்காட்டினான் அந்த சிறுவன். ஆம், அதுதான் அவனின் கலங்கரை விளக்கு. அடைபட்டு கிடக்கும் 30 சிறுவர்களின் மீட்பிற்கான நம்பிக்கை நட்சத்திரம் அந்த தண்ணீர் தொட்டி, கம்பெனியில் கடுமையான வேலைகளுக்கு மத்தியில் தன் தாயின் முகத்தை எண்ணி விம்மி விம்மி இந்த சிறுவன் அழும்போதெல்லாம் ஜன்னலின் வழியாக என் தாய் வரமாட்டார்களா? என அவன் வெளியே பார்க்கும்போது அவனுக்கு ஆறுதலாக தெரிந்த இந்த தண்ணீர் தொட்டி.

இதன் பக்கத்தில்தான்... அந்த கம்பெனி சிறுவன் குதூகலித்தான். தண்ணீர் தொட்டியினூடே ஆர்.டி.ஓ. பயணித்தார். 30 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். சொந்த ஊர் தெரியாத அவர்கள் அரசு பதுகாப்பில், முழு கவனிப்பில் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். 30 பேர்களும் கொத்தடிமைத் தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் அடிப்படையில் விடுதலை சான்றிதழ் வழங்கினார் ஆர்.டி.ஓ. அரசு நிர்ணயித்த நிவாரண தொகையான 20,000 ரூபாய் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்பட்டது. பள்ளியில் படிப்பற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். சீக்கிரமாக குழந்தைகளின் சொந்த ஊரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினருடன் இணைத்து மறுவாழ்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ‘கொத்தடிமைகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இப்போதும் அந்த முறை நமது கிராமங்களில் இருக்கிறது என்பதை இன்று தான் உணருகிறேன்’ என்றார் இன்ஸ்பெக்டர். இதை அறிந்தது முதல் வைரவனின் சைக்கிள் எப்போதெல்லாம் அந்த பகுதியைக் கடக்குமோ அப்போதெல்லாம் இந்த தண்ணீர் தொட்டியை மட்டும் பார்க்கத் தவறுவதேயில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com