‘ம்’ எனும் முன் தற்கொலைக்கு முயலும் மாணவ, மாணவியருக்கு ஒரு வார்த்தை!

பிஞ்சு மனங்கள் மென்மையானவை ,அவர்களின் தேவைகள், திறமைகளை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களை அவர்களது விருப்பங்களின் திசையில் சுதந்திரமாக இயங்க விட்டால் பல சாதனையாளர்களை உருவாக்கலாம் .
‘ம்’ எனும் முன் தற்கொலைக்கு முயலும் மாணவ, மாணவியருக்கு ஒரு வார்த்தை!

மதிப்பெண்கள் குறைந்ததற்காக தங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாத பெற்றோர்கள் தங்கள் மாணவ மாணவிகளை கோபித்துக் கொள்ளாத ஆசிரியர்கள் எவரேனும் உண்டா ? முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்காக என்றிருந்த நிலை மாறி இப்போதெல்லாம்  இப்படி மதிப்பெண்களுக்காக குழந்தைகளை பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோபித்துக் கொள்ளும் பழக்கம்  எல்.கே.ஜி முதற்கொண்டே ஆரம்பமாகி விடுகிறது.

பலன் இப்படியான கோபங்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு இயல்பான கற்றல் தன்மை தடைபட்டு கடமைக்காக பாடங்களை கற்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். பெற்றோர்கள் மிக அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது. இப்படியான நிலைக்கு தங்கள் குழந்தைகளை தள்ளுவது ஆரோக்கியமான காரியம் இல்லை. தானாக விரும்பிச் செய்யும் காரியங்களில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் அனைவருக்கும் மன திருப்தியும் ஈடுபாடும் கிடைக்கும், மாறாக ஒரு காரியத்தை வற்புறுத்தல் மூலம் செய்யத் தொடங்கும் போது கவனச்சிதறலினால் சோர்வே மிஞ்சும். முதற்கட்டமாக இந்த மனச் சோர்வு தான் மற்ற எல்லா குறைபாடுகளுக்கும் ஆரம்பம் என்பதை பெற்றோர்கள்  ஏனோ அத்தனை சிரத்தை எடுத்து கவனிப்பதில்லை .

பள்ளி கல்லூரிப் படிப்பில் இருந்து இடையில் வெளியேற்றப்பட்ட பின்பும் சாதித்த உலகமகா சாதனையாளர்கள்...

சில ஆண்டுகளுக்கு முன்பாக யாகூ இணைய தளம் சர்வ தேச அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து "நீ படிக்க லாயக்கில்லை" என்று முத்திரை குத்தப் பட்டு வெளியேற்றப் பட்ட பின்பும் உலக அளவில் வெற்றி கண்ட 14 சாதனையாளர்களை பட்டியலிட்டிருந்தது, அவர்களில் நமது சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிலையன்ஸ் அதிபர் லேட் திருபாய் அம்பானியும் உண்டு. அந்தப் பதினான்கு பேரில் இந்தியர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பது  நமக்குப் பெருமைக்குரிய விஷயம் தான். சும்மா பெருமைப்பட்டுக் கொண்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் அப்படியே இந்த விஷயத்தை மறந்து போய் விடுவோம். அதில் சந்தேகமில்லை. இந்த அவசர யுகத்தில் மனைவி குழந்தைகள் தவிர்த்து நெருங்கிய பிற உறவினர்களின் முகங்களே கூட நாளடைவில் பலருக்கு மறந்து போய்ஞாபகப்படுத்தலின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இது எதோ இணையதளச் செய்தி, இதை எத்தனை பேர் பார்த்திருக்கப் போகிறார்கள், பார்த்தாலும் கவனத்தில் வைத்துக் கொள்ள அத்தனை கவர்ச்சியான  செய்தியா இது!

கவர்ச்சியான செய்தியாக இல்லாவிட்டாலும் கூட  பெற்றோர்களை மற்றும் ஆசிரியர்களை சிந்திக்க வைக்கும் செய்தியாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் .

இந்த பட்டியலில் குறிப்பிடப் பட்டிருக்கும் நபர்களைப் பாருங்கள். அனைவருமே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை இடையில் கை  விட்டவர்கள், அல்லது மதிப்பெண்கள் இவர்களைக் கைவிட்டன என்றும் சொல்லலாம். பள்ளிகளும் கல்லூரிகளும் வெற்றிக்கு என நிர்ணயித்து வைத்திருக்கும் மதிப்பெண்களை பெற முடியாது போனதால் அவர்களுக்கு வாழ்வு ஸ்தம்பித்து விட்டதா என்ன? இல்லை முன்னைக் காட்டிலும் அதிக உத்வேகத்துடன் அவரவர் விரும்பிய துறையில் உற்சாகத்தோடு விடாமுயற்சியோடு இயங்கி வெற்றி கண்டு சாதனையாளர்கள் என இந்த உலகத்தை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள் .

  • சச்சின் டெண்டுல்கர் கல்லூரியில் கால் வைத்ததில்லை.
  • ஆப்பிள் கம்பியூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில் சேர்ந்து அதிகமில்லை ஒரே ஒரு செமஸ்டரில் தன் கல்லூரிப் படிப்புக்கு  முழுக்குப் போட்டு விட்டு அங்கிருந்து வெளியேறியவர்,
  • தன் பெரிய குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை முன்னிட்டு 16 வயதிலேயே ஏடனுக்கு க்ளெர்க் வேலை செய்யப் போய் விட்டவர் இன்று உலகம் வியக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மறைந்த அதிபர் திருபாய் அம்பானி,
  • கை வசம் ஒரு டிகிரி கூட இல்லாமலே தான் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தாராம் பில் கேட்ஸ்,
  • தன் வளர்ப்புத் தாயின் மரணத்திற்காக யுனிவர்சிட்டி பரீட்சைகள் எழுத முடியாமல் கல்லூரி இரண்டாம்வருடத்தின் முடிவில் தன் படிப்புக்கு முழுக்குப் போட்டவர் தான் இன்று உலகம் நிமிர்ந்து பார்க்கும் ஆரக்கிள் கார்பரேசன் நிறுவனத்தின் இணை - நிறுவனர் லோரி எல்லிசன் .
  • விக்கிலீக்ஸ் நிறுவனர்  ஜூலியனின்  கதை  தெரியுமா ? கணிதமும், இயற்பியலும் படிக்கப் போனவர் கணிதத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களோடு தேர்வில் வெற்றி பெறுவதே பெரிய அதிர்ஷ்டம் என்ற வகையில் படிப்பை முடித்து விட்டு தனது சொந்த தொழிலை தொடங்கியவராம் இவர்.
  • தனது அறிமுகமான Face book  இன் அபார வெற்றிக்குப் பின் ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் இருந்து தனது கனவுகளை சிலிக்கான் வேலிக்கு திருப்பிக் கொண்டவர் தான் மார்க் ஜூகர்பெர்க்.
  • திரைப்படக்கல்லூரியில் நுழைவதற்கே தகுதி இல்லை என நிராகரிக்கப் பட்ட பின் தான் ஸ்டீபன்  ஸ்பீல்பெர்க்  உலகப்புகழ் பெற்ற "ஜுராசிக் பார்க் ' படத்தை இயக்கினார்.
  • 2007 ஆம் வருடம் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற டோரிஸ் லெசிங் தனது 31 வயதில் எழுத்தாளராக ஆவதற்கு முன்பு வரை டெலிபோன் ஆப்பரேட்டர், ஸ்டெனோ கிராபர், ஜர்னலிஸ்ட் என்று பல வேலைகளைச் செய்துள்ளார்.

-  இப்படியாக நீள்கிறது இந்தச் சாதனையாளர்களின் கல்விப்பட்டியல் .

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

பள்ளிப்படிப்புக்கும் சாதனைக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் தேவை இல்லை .

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப் படும் மதிப்பெண்கள் அங்கே கற்ற கல்வியின் அளவுகோல்களே தவிர பெற்றுக் கொண்ட மாணவனின் தன்னம்பிக்கையின் உரைகற்கள் அல்ல. தேர்வில் தோற்றுப் போன மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற பொதுவான ஏளன மனப்போக்கு தேவை அற்றது.

உலக அளவில் சாதித்தவர்களைத் தான் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை, நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூடத்தான் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை, அதற்காக அவரது நிர்வாகத் திறனை குறைவாக மதித்துவிட முடியாது.

ராஜாவும், ரஹ்மானும்  எந்தக் கல்லூரியில் வாங்கிய டிகிரியை வைத்துக் கொண்டு சிம்பொனி இசைத்தார்களாம்? ஆஸ்கர் வாங்கினார்களாம்!

காலத்துக்கும் தமிழகம் மறவாத படிக்காத மேதை காமராஜர், ஹிட்லரே வியந்த ஜி.டி.நாயுடு, இப்படிப் பலரும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள் தான்.

குழந்தைகளிடையே கம்பேரிஷன் மிகப் பெரிய வளர்ச்சி சிதைப்பான்...

பிறகு எதற்கு என் குழந்தை பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காட்டிலும் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று விட்டான் என்ற சுயபரிதாபம் பிடித்து ஆட்டுகிறது பெற்றோர்களை. காரணம் ஒப்பீடு தான் . தங்கள் குழந்தை சுற்றுவட்டாரத்தில் தாங்கள் பழகும் சமூகத்தில் மற்ற குழந்தைகளை விட ஒருபடி மேலே இருக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் கம்பேர் செய்து கொண்டே இருக்கிறார்கள் எல்லா நேரங்களிலும் எல்லா விசயங்களிலும் .

வினோத் கணிதத்தில் 100  வாங்கினால் சுஜியும் 100  வாங்கியே ஆக வேண்டும் என சுஜியின் அம்மாவோ அப்பாவோ பிடிவாதம் பிடித்தால் என்னாகும் அந்தக் குழந்தையின் மனநிலை?!. அதுவும் சூட்டிகையான குழந்தை எனில் தன் பெற்றோர்களை  சந்தோசப்படுத்த படித்து 100  மார்க் வாங்கி விடும், இந்த 100 மார்க்குகள் பிறகு ஒவ்வொரு பரீட்சையிலும் தொடர வேண்டும் .அதற்காக அந்தக்குழந்தை இயல்பான சில விளையாட்டுத் தனங்களை கூட தியாகம் செய்து விட்டு உழைக்க வேண்டும். இந்த தியாகத்தின் அடிப்படை தான் பெற்றோர்களின் ஆசையாக அந்த குழந்தையின் மனதில் பதிவதை விட அந்தக் குழந்தை தானே 100  மார்குகள் வாங்க ஆசைப் பட்டு அதற்காக கடுமையாக முயன்று படித்தால் அது வேறு வகை வெற்றி. ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக இந்த வெற்றி நிகழ்ந்தால் தான் எதையோ இழந்து விட்ட உணர்வு அந்தக் குழந்தையின் மனதில் காலம் முழுதும் தொடரும்.  பெற்றோர்களின் தவறு எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்பது புரிகிறதல்லவா?

ரஜினி ஸ்டைலில் ஒரு குட்டிக் கதை...

முன்பு எப்போதோ ஒருநாள், ரேடியோ மிர்ச்சியில் விப்ரோ அதிபர் அஸிம் பிரேம்ஜி சொன்னதாக ஒரு கதை கேட்டிருக்கிறேன். அதாவது ஒரு முயல் தம்பதி தங்கள் குழந்தையான முயல்குட்டியை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்பட்டதாம் .முயல் குட்டியும் பள்ளிக்குப் போய் படிக்க ஆரம்பித்ததாம், அங்கே அதற்கு பல பயிற்சிகள் அளிக்கப் பட்டனவாம், எல்லாப் பயிற்சிகளையும் விட தாவிக் குதிப்பதில் அந்த முயல் குட்டி வெகு திறமையாக இருந்ததாம் .ஆனால் அதற்கு நீச்சல் அத்தனை நன்றாக வரவில்லையாம், இதனால் கவலை கொண்ட அதன் பெற்றோர்கள் அந்த முயல்குட்டியை நீச்சல் பயிற்சிக்கு அனுப்பினார்களாம் .இப்போது அந்த முயல் குட்டி தாவிக் குதிப்பதைக்  காட்டிலும் நீச்சல்  முழு முனைப்போடு கற்றுக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொண்டதாம். அதன் விருப்பம் இன்றி அதன் பெற்றோர்களின் விருப்பத்திற்காக தனக்கு அத்தனை ஆரவமற்ற ஒரு பயிற்சியை அது வலுக்கட்டாயமாக மேற்கொண்டதால் அதற்கு நீச்சலும் சரியாக வரவில்லை முன்பு திறமையாக இருந்த தாவிக் குதிக்கும் பயிற்சியும் நாளடைவில் மறந்து போய் மந்தமாகி விட்டதாம்.

என்ன ஒரு அழகான அர்த்தமுள்ள கதை!

எந்த ஒரு விசயமும் குழந்தைகளிடத்தில் திணிக்கப்படல் கூடாது. அவர்களது விருப்பங்களை ,ஆர்வங்களை கண்டறிவதில் பெற்றோர்கள் ஆரம்பம் முதலே கவனமாக இருத்தல் வேண்டும், இல்லா விட்டால் மந்த முயல்குட்டி கதி  தான் இப்படியான எல்லாக் குழந்தைகளுக்கும்.

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் எல்.கே.ஜி முதல் அதிகாலை 7 .45  அல்லது 8  மணிக்குள் வீட்டை விட்டு வெளிக் கிளம்பியாக வேண்டியுள்ளது, பள்ளிப் பேருந்துகள் மற்றும் தனியார் வேன்களில் திணிக்கப் பட்டு குறைந்த பட்சம் அரைமணி நேரப்போக்குவரத்து நெரிசலைக்  கடந்து பள்ளியில் இறக்கி விடப் படுகிறார்கள். பிறகு காலைப் பிரேயர் என்ற பெயரில்  ஒன்பது மணி வெயிலில் இருபது நிமிடங்களுக்கும் மேலாக கசங்கி வாடி அதன்பின்  பள்ளி அறைகளுக்குள் செல்கிறார்கள். 8 மணிக்கு பள்ளி வேனுக்கு தயாராக வேண்டுமெனில் அந்தக் குழந்தை குறைந்தபட்சம் 6  மணிக்காவது தூக்கம் களைந்து எழுந்தே ஆக வேண்டும், குழந்தைகள் தானாக எழுந்து தானாக காலைக் கடன்களை முடித்து தானாக சாப்பிட்டு தானாக யூனிபார்ம் போட்டுக்கொண்டு தயாராகி  விடுவார்களா என்ன?

குழந்தைகளை எழுப்பி பாலோ, ஆரோக்ய பானங்களோ வழங்கி காலைக் கடன்களை முடிக்கச் சொல்லிக் கொடுத்து குளிக்க வைத்து சாப்பிடவும் வைப்பதற்குள் இன்றைய நகரத்து நாகரீக அம்மாக்கள் பெரிதும் சோர்ந்து போகிறார்கள். பள்ளி விட்டு வரும் குழந்தையை சாப்பிட வைத்து, வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து மறுபடியும் தூங்க வைப்பதற்குள் பெரிதும் கஷ்டப்பட்டுப் போகிறார்கள் இன்றைய அம்மாக்களும், அத்தைகளும், பாட்டிகளும். காரணம் சில குழந்தைகள் மகாசுட்டிகளாக இருப்பார்கள் அல்லது மகா மந்தமாக இருப்பார்கள் .

படித்திருந்தும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் எனில் எல்.கே.ஜி யில் இருந்தே டியூசன்  அனுப்புகிறார்கள். நான்கு மணிக்கு பள்ளி விட்டு வரும் குழந்தை ஐந்து மணிக்கு டியூசன் போய் விட்டு எட்டு மணிக்கு வீடு வந்தால் அதற்கு ஓடியாடி விளையாட எப்படி நேரம் நேரம் கிடைக்கும். வீட்டுக்குள் அடைந்து கொண்டு அம்மாவும் அப்பாவும் வரும் வரை டி.வி பெட்டியே கதி என்று சில கார்ட்டூன் தொடர்களுக்கு  அடிமையாகி  விடுகிறார்கள். இன்னும் சிலரோ ஸ்மார்ட் ஃபோனின் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிறார்கள். தொடர்ந்து இப்படி நிகழும் போது குழந்தைகளின் மூளை படிப்பில் பதியாமல் கார்ட்டூன்களிலும் .டி.வி தொடர்களிலும் ஒன்றிப் போய்  முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் ஆகி விடுகிறது, சென்னை மாநகராட்சி நகர் முழுதும் தெருவுக்கு ஒரு பார்க் திறந்துள்ளது, ஆனால் அங்கே விளையாட குழந்தைகளுக்கு தான் நேரமே கிடைப்பதில்லை, பெரும்பாலும் பார்க்  என்பது பெரியவர்கள் வாக்கிங் போகவும், இளைஞர்கள்  கிரிக்கெட்டோ, புட்பாலோ விளையாடவும் உருவாக்கப் பட்ட இடம் என்றாகி விட்டது.

பார்க் போன்ற திறந்த வெளி திடல்களில் பட்டாம் பூச்சிகளாய் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். புத்தக மூட்டை சுமந்தே அயர்சியாகி விடும் இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டைப் பற்றி யோசிக்க நேரமின்றி டியூசன், மியூசிக் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், பள்ளிகளில் எக்ஸ்ட்ராவாக அளிக்கப் படும் பிராஜக்டுகள், ஆக்டிவிட்டிகள், என்று செய்து முடிக்க அடுத்தடுத்து பல வேலைகள் காத்திருக்கின்றன. மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இப்படியான கல்வி முறையில் ரிலாக்ஸ் செய்து கொள்ள என்ன இருக்கிறது குழந்தைகளுக்கு?. திறமைகள் மலிந்த இந்த போட்டி உலகில்  அரசின் கல்வி முறையை நாம் குற்றம் சொல்ல முடியாது மாறாக இத்தனை வேலைப் பளுவையும் தாண்டி நம் குழந்தைகளின் மனதை சோர்வோ ,வெறுமையோ நெருங்காமல் எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்ல அவர்களை பழக்குவது வீட்டில் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்களின் தலையாய கடமை அல்லவா !

பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் குறைபாடுகள்...

இவை தவிரவும் குழந்தைகளுக்கு தாயின் வயிற்றில் கருவாக  இருக்கும் போதே ஏற்படும் பாதிப்புகளோடு வளரும் சூழ்நிலை சார்ந்தும் பல்வேறு குறைபாடுகள் வரலாம் அவை  முறையே;

  • பைன் மோட்டார் குறைபாடு -  இந்தக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கையெழுத்து கிறுக்கலாக இருக்குமாம்
  • கிராஸ் மோட்டார் குறைபாடு - இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விளையாடுவதில் குழப்பம் இருக்குமாம்.
  • இந்தக் குறைபாடுகளை ஆக்குபேசனல் தெரபி மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள்  கூறுகின்றனர். இவை தவிர ;

டிஸ்லெக்சியா என்றொரு குறைபாடு. இந்தக் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு நாட்கள் செல்லச் செல்ல படித்த விசயங்களை மனப்பாடம் செய்தல் என்பது வெகு கஷ்டமாக இருக்கும் இது போன்ற கவலைப் படத் தக்க குறைபாடுகள் இருந்தாலும் கூட உரிய கவனிப்பு மற்றும் தூண்டல் காரணமாக சமுதாயத்தில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். சினிமாவையும் பல்பையும்  கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்ப காலங்களில் ஒரு டிஸ்லெக்சியா குழந்தை தான். "விர்ஜின்" நிறுவன அதிபர் ரிச்சர்ட் ப்ராண்ட்சன் கூட குழந்தையாய் இருக்கும் போது டிஸ்லெக்சியாவால் பாதிக்கப் பட்டவர் தான். அவர்களது குறைபாடுகள்  அவர்களின் சாதனைக்கு ஒரு தடையாகவில்லை.

பள்ளி மற்றும் கல்லூரியில் பயில்வோரில் இளம் பெண்கள், இளைஞர்களிடையே தற்கொலை விகிதங்கள்...

சில மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இணைந்து வேலூரைச் சுற்றி இருக்கும் கிராமப்புறப் பகுதிகளில் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவில் 10 முதல் 19 வயது வரையிலான அடலசன்ட் பருவத்தினரிடையிலான தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 14 .5 சதவிகிதமாக இருக்கிறது எனத் தெரிய வந்தது, இந்த தற்கொலை விகிதம் தொழில்வளர்ச்சி மேம்பாடடைந்த நாடுகளை விட வளர்ச்சி குன்றிய நாடுகளில் அதிகமாக இருக்கிறது எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த தற்கொலை விகிதங்கள் இளம் வயது ஆண்களை விட இளம் வயது பெண்களிடையே மிக அதிகமாக இருக்கிறது.100000  லட்சம் ஆண்கள் மற்றும் 100000  பெண்களிடையே தனித்தனியே  நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு லட்சம் ஆண்களில் 58  இளைஞர்களும் ஒரு லட்சம் பெண்களில் 148  இளம் பெண்களும் சராசரியாக  தற்கொலை செய்து கொள்வதாக இவர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் அரசின் பதிவு செய்யப்பட்ட தற்கொலைஎண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவை. காவல் துறையில் பதிவு செய்யப்படாமல் மறைக்கப் படும் தற்கொலைகளையும் கணக்கிட்டால் தற்கொலை விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் இன்னும் அதிகமாக இருக்கலாம்.

10  முதல் 19  வயது அடலசன்ட் வயதினர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள்...

10  முதல் 19  வயதினரிடையே தற்கொலைக்கான காரணங்களாக பட்டியலிடப்பட்டிருப்பவை இவையே...

1. தேர்வில் தோல்வி:

வாழ்கையின் வெற்றி தோல்வி என்பது முழுக்க முழுக்க டென்த் மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளில் பெறப்போகும் மதிப்பெண்களை மட்டுமே சார்ந்தது என்ற நினைப்பு பல மாணவ மாணவிகளை அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது. தொடர்ந்து வீட்டில் பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் இம்மாணவர்களை 'இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்" என்று புலி வருது புலி வருது கதையாக ஒரு விதமான பதட்டத்தில் நீடிக்க வைத்து விடுவதால் பயத்தில் பலருக்கு சரியாக படிக்கவும் தேர்வெழுதவும் முடியாமல் போய்விடுகிறது. முதலில் பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி தேர்வு காலப் பதட்டங்களை மாணவர்களிடமிருந்து துடைத்து எடுத்து அவர்களை இயல்பாகத் தேர்வை எதிர்கொள்ளப் பழக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் டென்த் மற்றும் பிளஸ் டூ ரிசல்ட் வெளியாகும் போதும், அடுத்த ஒரு வாரதிற்கு பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆகிறவர்கள் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகளே. இவை மட்டுமல்ல தேர்வு காலங்கள் தவிரவும் தினசரி வாழ்விலும் ஆசிரியர் மாணவர் உறவு சரியாகப் பேணப் பாடல் வேண்டும். மாணவனுக்கு ஆசிரியரின் மீது பக்தி இருக்கலாம் பயம் இருக்க கூடாது .நேசம் இருக்கலாம் வெறுப்பு இருக்கக்கூடாது. இந்த பயமும் வெறுப்பும் எல்லை மீறும் போது சில ஆசிரியர்களின் சிடு சிடு கண்டிப்புகளால் பலகீனமான இதயம் கொண்டமாணவ  மாணவர்கள் தங்களது ஆசிரிய ஆசிரியர்களின் வசைகளையும் கண்டிப்புகளையும் தாங்கிக்கொள்ளும் மனோதைரியம் இல்லாது தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் தொல்லை தானே தவிர எவருக்கும் நன்மை கிடையாது .

2. பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களின் வன்முறை, கடுமையான வசைகள்...

ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஊஞ்சல் என் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அவளை எல்லா மாணவர்களின் முன்பாக அவளது ஆசிரியை ;
"நீ எல்லாம் ஏன் ஐந்தாம் வகுப்பில் உட்காருகிறாய்,போ மறுபடியும் ஒன்றாம் வகுப்புக்கு" என்று கடுமையாகத் திட்டி விடுகிறார், இதற்கு அந்த சிறுமி மனம் நொந்து போய் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு இறந்து போனாளாம், இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் ,ஆசிரியை மீது தவறு தான்.
அதற்கு நடவடிக்கை எடுக்க வசதி இருக்கிறது. ஆனால் அந்த சிறுமியின் மனநிலையை எண்ணிப் பாருங்கள் வெறுமே பள்ளியில் ஆசிரியை திட்டினால் அதற்குதன்னைக் கொளுத்திக் கொண்டு இறந்து போக வேண்டும் என அவளுக்கு எப்படித் தோன்றியது?!

குழந்தைகளை மனதளவில் எதையும் எதிர் கொள்ள திராணியற்றவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது வளர்ப்பு முறையில் அல்லவா இங்கே முதல் தவறு ஒளிந்திருக்கிறது. ஆசிரியை திட்டியதால் குழந்தை தற்கொலை செய்து கொண்டாள் என பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான செய்திகள் மிக்க மனவருத்தத்தை அளிக்கின்றன. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல.

மேலும் அந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கான பந்தம் வாழ்வின் சில காலமே. அப்போதும் தினமும் அந்த ஆசிரியர்கள் விரும்பத் தகாத வண்ணமே பேசிக் கொண்டு இருக்கப் போவதில்லை, எதோ ஒருநாள் திட்டலாம், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டு மொத்த வாழ்வை முடித்துக் கொள்வது முட்டாள் தனம் தவிர வேறென்ன? குழந்தைகளே ...மாணவர்களே உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் தயங்காமல் மரியாதை குறைவின்றி ஆசிரிய ஆசிரியர்களிடம் எதிர்வாதம்செய்யுங்கள்.உங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயலுங்கள். காரணமே இன்றி யாருக்கும் யார் மீதும் வெறுப்பு வர வாய்ப்பில்லை. பள்ளிகள் கல்வி கற்பதற்கு தான். அந்த வேலையில் குறை வைக்காமால் இருந்தால் என்ன தான் முசுட்டு ஆசிரியை என்றாலும் சம்பந்தப் பட்ட மாணவியின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும். அந்தப் பலனை கெட்டியாகப் பற்றிக்கொள்ள முயலுங்கள்.

பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது. கண்மூடித் தனமாக ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நாணயத்திற்கு இருபக்கங்கள். இன்றைக்கு வகுப்பறையில் எல்லோர் முன்னிலும் திட்டி கரித்துக் கொட்டும் ஆசிரியை நாளையே உங்களிடம் உங்கள் மகன் அல்லது மகளை ஏதாவது ஒரு திறமைக்காக வானளாவப் புகழும் நிலை வரும். அதற்கு நம் குழந்தைகள் உயிரோடு இருக்க
வேண்டும் .

அதற்கு முன் வெகு முக்கியமாய் உளவியல் ரீதியாக நேரக் கூடும் மனமுடைதல் குறித்து நம் குழந்தைகளின் ("இம்" மெனும் முன் தற்கொலை) பூஞ்சை மனதை வலுப்படுத்த உருப்படியாய் ஏதானும் முயற்சிக்கலாம். இந்த உலகில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது. அப்படித் தான் குழந்தைகள் நம்பவேண்டும்,

முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே! 

நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்., தற்கொலை அதற்கான தீர்வாக முடியாது.


3. பாலியல் அச்சுறுத்தல்கள்:

இது தனியாக விவாதிக்க வேண்டிய பொது நலப் பிரச்சினைகளில் ஒன்றாகி விட்டது இன்றைய அவசர யுகத்தில். பள்ளியோ கல்லூரியோ எங்கு பயிலும் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கலாகட்டும் மாலை வீடு திரும்பி பின் இரவு உணவை சேர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் ,நாளொன்றுக்கு அரை மணி நேரமாவது ஒதுக்கி குழந்தைகளின் அன்றன்றைய நடவடிக்கைகளைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதை தினசரி கடமையாக நினைத்துச் செய்ய வேண்டும் .குழந்தைகளின் அல்லது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் பெற்றோர்கள் இப்படிச் செய்யத் தவறுவதால் தங்கள் பிள்ளைகளின் மனச் சங்கடங்கள்,அகச் சிக்கல்கள் குறித்து அவர்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது. பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் தற்கொலைக்கான காரணங்களே அவர்களை இழந்த பிற்பாடே தெரிய வருவது அதிர்ச்சி கரமான விஷயம்.

4.காதல் தோல்விகள்:

அறியாத வயதில் ஏற்படக் கூடிய பக்குவப் படாத இனக் கவர்சியை காதல் என்று எண்ணி அதில் விழுந்து தங்களது எதிர்கால் அவாழ்வை பாழாக்கிக் கோவத்தோடு தற்கொலையால்  உயிரையும் இழக்கும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்விசயத்தின் தீவிரத்தை அறியாது மேம்போக்காக இதி அணுகி மேலும் மேலும் நஷ்டமடைவதை விட இதற்கென தனியாக நேரம் செலவிட்டு இந்த பொது நலப் பிரச்சினையையும் ஆராய்ந்து களைவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் கடமையே.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமைகள்...

மாணவர்கள் வெகு எளிதாக இந்த தற்கொலை எண்ணங்களை கடந்து வந்து விடலாம். அதற்கான மன பக்குவத்தையும் ,ஆற்றலையும் அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை.ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி வெறும் மதிப்பெண்களை மட்டுமே மனதில் லட்சியமாகக் கொண்டு தங்கள் குழந்தைகளை ஆட்டு மந்தைகளாகவோ வாத்துக் கூட்டங்கலாகவோ முடுக்கி விடக் கூடாது. பிஞ்சு மனங்கள் மென்மையானவை ,அவர்களின் தேவைகள் திறமைகளை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களை அவர்களது விருப்பங்களின் திசையில் சுதந்திரமாக இயங்க விட்டால் பல சாதனையாளர்களை உருவாக்கலாம் .

எல்லோரும் சச்சின் டெண்டுல்கராகவும், அம்பானியாகவும் ஆக வேண்டுமென்பதில்லை...

குழந்தைகள் தமது திறமைகளை கண்டுணர்ந்து அவற்றை பட்டை தீட்டிக் கொள்ள வெளியில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோகளும் உதவ வேண்டும். முயல் குட்டி கதை போல  அதை கற்று கொள் இதைக் கற்றுக் கொள் என்று இலக்கே இன்றி பலவற்றையும் திணித்து கடைசியில் ஒரு திறமையும் இன்றி மழுங்கிப்போய் நமது குழந்தைகள் சராசரிக்கும் கீழாக ஆவதை விட ஏதாவது ஒரு திறமையோடு சாதனை செய்தால் அது ஆரோக்கியமானது தானே!

எதிர்காலம் என்பது எஜுகேசன் சிஸ்டங்களை மட்டுமே நம்பித்தானா!

ஒரு வருடம் முழுக்க கற்ற கல்வியை தேர்வென்ற பெயரில் மூன்று மணி நேரங்களில் விடைத்தாட்களில் நிரூபிக்கத் தவறினால் அந்த மாணவனின் ஒட்டுமொத்த வாழ்வுமே கேள்விக் குறியாகி விட வேண்டுமா! ஒரு மாணவனின் முழுத் திறமை  என்பது கேட்கப் படும் கேள்விகளுக்கு அளிக்கப் படும் பதில்களுக்கான மதிப்பெண்களில் தான் ஒழித்து வைக்கப் பட்டிருக்கிறது. பிறகு இந்தியாவின் தாரக மந்திரமான ஆன்மசக்தியை பலப்படுத்தும் மனோதிடத்தின் அடிப்படையில் ஆன தன்னம்பிக்கை என்ற விஷயம் எங்கே போனது.

தொலைகாட்சி விளம்பரங்களும் சரி, திரைப்படங்களும் சரி, தொடர்களும் சரி... எப்போதும்  மனிதர்களைப் பிறருக்குத் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் ஆர்வமுடையவர்களாகவே காட்ட முனைகிறது. விளைவு எல்லோரும் விளம்பரப் பிரியர்களாகி விடுகிறோம். சுற்றி இருப்பவர்கள் தம்மை கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காகவே பல காரியங்களை அவற்றின் அவசியம் பற்றி ஆராயாமலே கூட செய்து கொண்டிருக்கிறோம், குழந்தைகளையும் அவ்வாறே செய்யப்பழக்கி வைத்திருக்கிறோம். குழந்தைகள் தங்களை உணர வேண்டும், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட குழந்தைகளும் சரி இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் சரி தங்களைத் தாங்களே அறிந்து கொண்டார்கள் எனில் பெற்றோர்களை அச்சுறுத்தும் எல்லா பொதுநலப் பிரச்சினைகளுக்கும் சிறிது சிறிதாக முடிவு கட்டலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com