சிறப்புக் கட்டுரைகள்

சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு... எளியவர்களின் ஓலம் அம்பலம் ஏற என்ன செய்ய வேண்டும்? 

RKV

சேலம் ராஜலட்சுமி கொலை வழக்கு.... இதுவும் மீடூ தான். ஆனால், இதை மீடூவாக மட்டுமே கருத முடியாது. ஏனெனில், இது பச்சைக்கொலை. இதை அரியலூர் நந்தினி, போரூர் மதனந்தபுரத்துச் சிறுமி ஹாசினி கொலை வழக்கு உள்ளிட்டவற்றோடு தொடர்பு படுத்தித் தான் அணுக வேண்டும். அரியலூர் நந்தினி கொலை வழக்கில் கொலையுண்ட சிறுமியின் மரணத்துக்கு காரணம் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி முறை தவறி நடந்து கொண்டு அவள் கர்ப்பிணியானதும் ஜாதியைக் காரணம் காட்டி கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. போரூர் மதனந்தபுரத்து ஹாசினி வழக்கில் 7 வயதுச் சிறுமி ஹாசினியை பாலியல் வன்முறை செய்ய முயன்றதில் சிறுமி மரணத்தைத் தழுவ, குற்றத்தை மறைக்க மேலும் கிரிமினல் தனமாக யோசித்து சிறுமியின் சடலத்தை அப்புறப்படுத்தும் நோக்கில் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறான் தஷ்வந்த் என்கிற இரக்கமற்ற பாவி. இந்த இரண்டு கொலைகளும் கூட மீடூவோடு தொடர்புடையவை தான். ஆனால், சட்டத்தால் இவை வெவ்வேறு விதமாக அணுகப்படுகின்றன. காரணம் கொலைக்கான காரணம் மற்றும் அது  நிகழ்த்தப்பட்ட விதம். அதே விதமான அணுகல் தான் சிறுமி ராஜலட்சுமி கொலை விஷயத்திலும் பின்பற்றப்பட வேண்டும்.

ஒரு 13 வயதுச் சிறுமி... ஜாதியின் பெயரால் பெற்ற தாயாரின் முன்னிலையில் துடி துடிக்க உள்ளம் பதை பதைக்க வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறாள். அழுது, அழுது அந்தப் பெற்றவளின் கண்களில் கண்ணீர் வற்றிப் போனாலும் கூட அக்கொடூரத்தை நினைக்கும் தோறும் ஆற்றாமையால் நெஞ்சம் ஒரு கணம் நின்று துடிக்கும். பணக்காரனோ, ஏழையோ யாராக இருந்தாலும் அவரவர் பிள்ளைகள் அவரவருக்கு பொன் குஞ்சுகளே! அப்படி மனதுக்குள் சீராட்டி வளர்த்த குழந்தையை ஆட்டை அறுப்பது போல ஒருவன் அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டான். அவனை எதிர்க்கும் துணிவு உடல் வலு ரீதியாகவும் சரி, பொருளாதார வலு ரீதியாகவும் சரி, ஜாதி ரீதியாகவும் சரி தனக்கு இல்லை... அப்படி இருக்கும் போது தன் மகளது கொலையைத் தன்னால் தடுக்க இயலாமல் ஆகி விட்டது. பெற்ற குழந்தையை கண்ணெதிரே பலி கொடுத்த சோகம் இனி ஜென்மம் முழுக்க தொடரலாம். அந்த துக்கத்தின் அழுத்தம் சற்றே குறைய வேண்டுமென்றால் அப்படியான கொடூரத்தை அரங்கேற்றியவன் தூக்கிலேற்றப்பட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவன் செய்த செயல் மன்னிக்கப்பட்டு விடக்கூடாது. அதற்கு ஆதிக்க சக்திகளோ, மனித உரிமை அமைப்புகளோ, அரசியல்வாதிகளோ ஜாதியின் பெயரால் துணை போய் விடக்கூடாது. இது தான் இப்போது சிறுமி ராஜலட்சுமியின் தாயாரின் கதறலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

13 வயதுச் சிறுமி ராஜலட்சுமியின் கொலைக்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும். இது மனிதாபிமானம் உள்ள, இந்திய நீதி அமைப்பின் மீது நம்பிக்கையுள்ள அனைவரது ஆதங்கமாகவும் இருக்கிறது.
ஆனால் திரைத்துறையைச் சார்ந்த சிலர் இதை வைத்துக் கொண்டு மீடூவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய நடிகைகள் சிலரை வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல் வம்புக்கிழுத்து பொது மேடைகளில் வீராவேசமாகப் பேசுவது அவர்களது அறியாமையையும் மீடூ குறித்த அவர்களது பயத்தையும் தான் வெளிக்காட்டுகிறது. மீடூவை சிறுமி ராஜலட்சுமி கொலையோடு பிணைத்துப் பேசி அதன் நோக்கத்தை வலுவிழக்கச் செய்வது தேவையற்ற வேலை. நம் நாட்டுக்கு இப்போது மீடூவும் தேவை. சிறுமி ராஜலட்சுமி கொலைக்கான நியாயமும் அவசியம். அப்படி இருக்கையில் இவற்றைத் தனித்தனியே அணுகுவதில் என்ன பிரச்னை இருந்து விடப் போகிறது.

உண்மையில் சிறுமி ராஜலட்சுமி கொலை விவகாரத்திற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை, பெண்ணியவாதிகள் மற்றும் மீடூ ஆதரவு நிலை கொண்ட பெண்கள், ஆண்கள், பிரபலங்களின் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல. ஊடகங்கள் தொடர்ந்து அவ்வழக்கு தொடர்பான தகவல்களை வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மீடூவுக்குப் போராடியவர்கள் சிறுமி ராஜலட்சுமிக்காகவும் சமூக வலைத்தளங்களிலும், பொது போராட்ட களங்களிலும் தங்களது கண்டனத்தை தெரிவிப்பது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மேடை கிடைத்தால் போதும் ஜாதிப் பிரச்னை பற்றி முழங்கியே தீருவோம் நடு நடுவே தங்களுக்குப் பிடிக்காத பெண் முற்போக்குவாதிகளையும் சந்திக்கு இழுத்து அவமானப்படுத்துவோம் என்கிற மனநிலை ஆரோக்யமானதல்ல.

சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கைப் பொருத்தவரை... சிறுமியின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சுட்டிக்காட்டியபடி, அந்த வழக்கை எடுத்துக் கையாளவிருக்கும் வழக்கறிஞர் மனிதாபிமானம் கொண்டவராக பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்பாடு பட்டேனும் நீதியைப் பெற்றுத் தந்தே தீருமளவுக்கு தாம் கற்ற சட்டக்கல்வியின் பால் பெறும் பொறுப்புணர்வு கொண்டவராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் சிறுமி கொலைக்கான நீதி கிடைத்தே தீரும்.

ஒரு அப்பாவிச் சிறுமியை பாலியல் அச்சுறுத்தல் செய்ய முயன்றதோடு, அவள் அதைத் தனது பெற்றோரிடம் சொன்ன காரணத்துக்காக கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி... ஜாதி வெறியை தான் சார்ந்த ஜாதி தனக்களித்த உரிமை, அதிகாரம் எனக்கருதி வெகு திமிராக சிறுமியின் வீடேறிச் சென்று அவளை வெட்டிக் கொன்றவன் நிச்சயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிறுமி ராஜலட்சுமிக்காக குரல் கொடுப்பவர்களின் நோக்கம் அந்த தண்டனையைப் பெற்றுத் தருவதில் தான் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, சிறுமி கொலைக்காக இன்னின்னாரெல்லாம் இன்னும் குரல் கொடுக்கவில்லை. இவர்களெல்லாம் ஜாதி வெறி கொண்ட மீடூ போராளிகள் என்று கணக்கெடுப்பதில் இருக்கக்கூடாது. நமது போராட்டமும், எதிர்க்குரலும் குற்றவாளியை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, யாரெல்லாம் போராட வரவில்லை... அவர்களை சந்திக்கு இழுப்போம் சாக்கடையை வாரி இறைப்போம் என்பதில் இருக்கக் கூடாது. அப்போது தான் எளியவர்களின் ஓலம் அம்பலம் ஏற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT