சிறப்புக் கட்டுரைகள்

கஜாவால் புயலானது வாழ்க்கை.. கரையைக் கடக்காத அவலக் குரல்! இதுதான் இப்போதைய டெல்டா!!

தினமணி


கஜா புயல் தமிழகத்தைக் கடந்து சென்றுவிட்டாலும் அதனால் டெல்டா மக்களின் வாழ்க்கையே புயலாகிவிட்டது. அன்று எழுந்த அவலக் குரல் இன்னும் ஓயவில்லை... ஓய்வதற்கான வாய்ப்புகளும் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதே அவர்களது ஆதங்கம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகளும், மீட்புப் பணிகளும் செய்யப்பட்டு வந்தாலும், அரசாலும் நுழைய முடியாத பல கிராமங்கள் இன்னும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நேரில் பார்த்தவர்கள் சொல்லும் கூற்று.

நாட்டுக்கே உணவளித்த டெல்டா விவசாயிகளை ஒருவேளை உணவுக்காக ஏங்க விட்டிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணமான  கஜா புயலைக் கூட மன்னித்துவிட முடியும், நம்மை ஒருகாலும் மன்னிக்க முடியாது.

டெல்டா பகுதியில் அரசுக்கு உதவியாக தன்னார்வலர்கள் ஏராளமானோர் தங்களால் இயன்ற அளவுக்கு நிவாரணப் பொருட்களோடு ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர்தான் மன்னார்குடியைச் சேர்ந்த ராஜகோபாலன் ரகுபதி. கஜா ஓய்ந்தது முதல் ஓயாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதோடு, அங்கிருந்து கள நிலவரத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டி, கீழ பனையூர், வேதாரண்யம் அருகே உள்ள கரிய புலம் பன்னல் கிராமம், பேராவூரணி என தேவைப்படுவோரைத் தேடித் தேடி நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்த்துள்ளார்.

அவர் சொல்வதை அவர் வார்த்தைகளிலேயே இங்கே பதிவிட்டுள்ளோம். வாருங்கள் கடந்த ஒரு வாரமாக அவர் பயணித்த இடங்களுக்கு நாமும் அவர் வார்த்தைகளூடே பயணிப்போம். 

வானுயர்ந்து நின்ற தென்னை மரங்கள் நிலத்தை அளக்கவா மண்ணில் வீழ்ந்து கிடக்கின்றன என்று கேட்பது போல எங்கு பார்த்தாலும் கஜாவுடன் போராடி மாண்ட மரங்களின் குவியல்கள், ஆசையோடு வாழ்ந்து.. அழுது.. புரண்டுக் கிடந்த வீடுகள் மண் குவியல்களாக.. நடந்து திரிந்த சாலைகளே இன்று வாழ்விடமாக மாறிக் கிடக்கிறது.

பல கிராமங்களில் கஜா புயல் அடித்தப்பிறகு அதாவது நவம்பர் 16ம் தேதி துண்டிக்கப்பட்ட மின்சாரம் இதுவரை வரவில்லை. எங்கோ ஓரிடத்தில் ஜெனரேட்டர் மூலம் செல்போன்களை மட்டும் ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். 

நிவாரணப் பொருட்களை சேகரித்துக் கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்ற போது ஆங்காங்கே சாலை மறியல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது இந்தக் குழு.



முதல்நாளின் அனுபவமே எப்படி இருந்தது என்றால், திருத்துறைப்பூண்டி தாண்டி மக்களை சென்றடைவது மிகவும் கடினமாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதனால் நிவாரண பொருட்கள் பாதிப்படைந்த மக்களை சென்றடைய முடியாமல் இருந்ததும் உண்மையே என்கிறார்.

எங்கு சென்றாலும் அங்கிருக்கும் ஒரு இளைஞனாவது இந்தக் கேள்வியைக் கேட்க தவறுவதில்லை என்கிறார். இங்கே டெல்டா பகுதி விவசாயிகளின் சார்பில் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. அது ஏற்கனவே நம் காதில் பல முறை குண்டூசியாக நுழைந்த கேள்விதான்.. இருந்தாலும் மீண்டும் ஒரு முறை அந்த நிலத்தில் இருந்து எழுகிறது.. 

"ஊடகங்களை விட்டு விடுங்கள். இந்த சமூகவலைதளங்களில் சென்னை வெள்ளத்தின் போது கொதித்த பிரபலங்கள், மக்கள், இளைஞர்கள் என எவருமே இந்த கஜா புயல் ஏதோ ஜாலியாக வந்து சென்றதைப் போல் கண்டும் காணாமல் இருப்பது என்ன? டெல்டா என்பது தான் தமிழ்நாட்டின் இதயம் போன்றது. இதயம் காயப்பட்டு துடித்துக் கொண்டிருக்கையில் கண்டும் காணாமல் இருப்பதன் பலன் உங்களைத் தான் சேரும். உதவுங்கள் என யாரும் கேட்கவில்லை. ஆனால் எவ்வித சேதமும் ஆகாதது போல் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள் என்று தான் சொல்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார். இது ஆயிரம் சம்மட்டிகளைக் கொண்டு அடித்தது போன்ற காயத்தை உங்கள் இதயத்தில் ஏற்படுத்தாவிட்டால் தொடர்ந்து கட்டுரையைப் படிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் வேலையைப் பார்க்கலாம்.

தமிழக அரசின் முன்னேற்பாடுகளும், நிவாரண உதவிகளும் பாராட்டத்தகுந்தது தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோடடை வரை எதுவுமே நடக்காதது போல இருப்பதைத்தான் அந்த ஊர் மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிறார் அவர். 

இவர்களின் கோபத்தை தயவுகூர்ந்து யாரும் விமரிசிக்கக் கூடவே கூடாது.. அதை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்கிறார் ராஜகோபால்.. "தன் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து பின் தன் குழந்தை பசிக்காக அழும் போது தன் குழந்தையின் பசியாற்ற முடியாத போது ஏற்படும் கோபமோ இயலாமையோ உணர்வோ உணர்ச்சியோ எதுவாக இருப்பினும் அதை குறைவாக மதிப்பிட எனக்கு விருப்பமில்லை. இயற்கை கொடியது அதனால் வரும் இயலாமை அதனினும் கொடியது" என்கிறார்.

பகல்  நேரங்களில் பயணிக்கவே முடியவில்லை. ஆங்காங்கே ஆதங்கத்தில் இருக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தை முடக்கிப் போட்டுவிடுகிறார்கள். இதனால் பெரும்பாலும் நிவாரணப் பொருட்களுடன் இரவு நேரங்களிலேயே பயணிக்கிறோம். 

தலைஞாயிறுப் பகுதியில் உள்ள சமூக நலக் கூடத்துக்குச் செல்லும் போது நள்ளிரவு. சமைத்த உணவுகளை சுமந்து கொண்டு சென்ற வாகனத்தில் இருந்து உணவை இறக்கினோம். இந்த நள்ளிரவில் வந்திருக்கிறோமே என்று மனம் சங்கடப்பட்டது. அந்த சங்கடம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.. சமூக நலக் கூடத்தில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து உணவினை வாங்கிச் சென்று சாப்பிட்டனர். அதைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் கசிந்தது. எவ்வளவுப் பசியோடு இருந்திருக்கிறார்கள் என்று நினைத்த போது மனம் கனத்தது.

வழி நெடுகிலும் மரங்களும், கம்பங்களும் சாய்ந்தது சாய்ந்தபடியே கிடக்கின்றன. வேறொரு புயல் வந்து அதை நிமிர்த்தினால்தான் உண்டு போல. சாலையென்று எதுவும் இல்லாமல், போக முடிந்த வழிகளையெல்லாம் பயன்படுத்தியே பயணிக்கின்றன பல வாகனங்கள். 

அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்து விட முடியாது.. ஒட்டுமொத்த தமிழகமும் டெல்டா பகுதி மக்களுக்காக ஒன்று திரள வேண்டும். இது ஓரிரு நாட்கள் செய்வதோடு நின்று போவதல்ல... அவர்கள் எழுந்து நின்று நமக்கான நெல்லை விளை நிலத்தில் விதைக்கும் வரை உதவி நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இது டெல்டா பகுதி மக்களுக்கான கோரிக்கை.. மக்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் மக்கள் நிவாரணத்திற்கு வரும் எங்களைப் போன்ற தன் ஆர்வலர்களை அனுமதிக்க வேண்டும். அது அவர்களின் அடிப்படை தேவையை தீர்க்க ஏதுவாகும். இரவு நேரங்களில் பயணிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது என்பதே அவர் சொல்லி முடித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT