யமிவைவஸ்வதி, ரோமசா, லோபலமுத்திரா, மமதா, வாக்அம்ருணி! இவர்கள் யார்?

உலகின் எந்தப் பிரதேசத்திலும் இல்லாத அளவுக்குப் பெண்மையைப் போற்றும் வழக்கம் நம் தேசத்தில் இருந்து வந்துள்ளது
யமிவைவஸ்வதி, ரோமசா, லோபலமுத்திரா, மமதா, வாக்அம்ருணி! இவர்கள் யார்?

உலகின் எந்தப் பிரதேசத்திலும் இல்லாத அளவுக்குப் பெண்மையைப் போற்றும் வழக்கம் நம் தேசத்தில் இருந்து வந்துள்ளது. பெண்தெய்வ வழிபாட்டில் தொடங்கி இயற்கையின் அத்தனை வடிவங்களையும் பெண்ணாகவே போற்றும் கலாச்சாரம் இந்த மண்ணில் தான் சாத்தியமாகியுள்ளது. ஆற்றலின் வடிவமாக பெண் காணப்படுகிறாள். பெண்ணே இந்த தேசத்தின் இயக்கும் சக்தியாக இருந்து வருகிறாள். வேதகாலம் தொடங்கி இன்று வரை பெண் இயக்கும் சக்தியாய் தன் அன்பினால் இவ்வையத்தைப் பேணி வளர்ப்பவளாக விளங்குகிறாள். பெண்ணின் அன்பினால் இவ்வையம் தழைப்பதைப் போலவே அவளது அறிவாற்றலும் கல்வியும் புலமையும் கூட இந்த தேசத்தை மேன்மை கொள்ளச் செய்துள்ளன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இந்தத் தன்மை தொடர்ந்தே வந்துள்ளது. புராணங்கள் முதல் தற்காலம் வரை காலந்தோறும் அறிவிற்சிறந்த பண்டிதைகள் இந்த தேசத்தில் தோன்றியிருக்கிறார்கள். 

வேதம் என்பது பெண்களுக்கானது அல்ல, பெண்கள் அதனைப் படித்தல் கூடாது என்ற வழக்கம் இருப்பதாய் சிலர் சொல்லிக்கொள்வதுண்டு அது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. வேதங்களைச் செய்தவர்களில் பெண்கள் உண்டு எனும் போது வேதம் எப்படி பெண்ணுக்கானதாக  இல்லாமல் இருக்க முடியும். வேத காலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பெண் பண்டிதர்கள் இருப்பதைக் காண்கிறோம். இவர்கள் தந்த படைப்புகளையும் உள்ளடக்கியதே ரிக்  வேதம் என்னும் உண்மையை மறந்து விட இயலாது. அதர்வண வேதத்திலும் கூடப் பெண்களின் பங்களிப்பு இருப்பதைக் காண்கிறோம்.  

'பிருஹத்தேவதா' என்னும் நூல் - அதிதாட்சாயணி, அபாலாஆத்ரேயி, கோதா, யமிவைவஸ்வதி, ரோமசா, லோபலமுத்திரா, மமதா, வாக்அம்ருணி எனத் தொடங்கி இருபத்தேழு பெண்கள் தங்கள் பங்களிப்பை வேதங்களில் செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதனால் ஓர் உண்மை தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. வேத காலத்தில் பெண்கள் கல்வியிற்சிறந்து விளங்கியுள்ளனர். கல்வி அவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்பதோடு தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பும் அவை அங்கீகரிக்கப்பட்ட தன்மையும் விளங்குகிறது. 

அது போல, புராண காலத்திலும் கார்க்கி, மைத்ரேயி, உபயபாரதி போன்ற பெண்களைக் காண்கிறோம். கார்க்கி  உபநிடதத்தில் தன் பங்களிப்பை செய்துள்ளதோடு பிரம்ம யக்ஞத்திலும் கலந்து கொண்டு விவாதங்களை நடத்திய தத்துவ ஞானியாக இராமாயணத்தில் காண்கிறோம். மைத்ரேயி இந்தியப் பெண்களின் அறிவாற்றலின் வடிவமாகவே இன்றளவும் போற்றப்படுகிறார். அத்வைத தத்துவத்தை உலகிற்குத் தந்த மகான் ஆதி சங்கரர், மண்டனமிஸ்ரருடனான தன் விவாதத்தின் வெற்றி தோல்வியை கணித்துக் கூறும் நடுவராக உபய பாரதியை அங்கீகரித்துள்ளார் என்பதில் அவரது ஞானம் புலப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ பெண்களைப் புராணங்களில் காண்கிறோம்.

நமது சங்ககாலப் பெண்கள் எப்படி இருந்தனர் என்று பார்த்தால் மகிழ்ச்சியே தோன்றுகிறது. ஒüவையார் போன்றவர்கள் இரு ராஜ்யங்களுக்கிடையிலான அரசியல், போர் இவற்றில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தம் கருத்தைச் சொல்லும் அளவுக்கு வல்லமை மிகுந்தவர்களாக இருந்துள்ளார். காக்கைப் பாடினியார், ஒக்கூர்மாசாத்தியார், வெள்ளிவீதியார் என ஒரு மிக நீண்ட பட்டியல் பெண் கவிஞர்களைப் பார்க்கிறோம். சங்கப் பாடல்கள் பல சமூக, வாழ்வியல் செய்திகளைத் தன்னுள் கொண்டவை.அதன் அத்தனை பரிமாணங்களிலும் மகளிரின் பங்களிப்பு இருப்பதைக் காண்கிறோம். அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என எல்லாவற்றிலும் இவர்களின் பங்களிப்பு உணர்த்துவது ஒன்று தான். அந்தப் பெண்களுக்குத் தங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, சிந்தனைகளைப் பதிவு செய்வதற்கான களம் இருந்துள்ளது.அத்தகைய பதிவுகள் சமூகத்தால் எந்தப் பாகுபாடும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கவனிக்கத் தக்க அம்சமாக இருப்பது, பெண்கள் அரசியல் பேசுகிறார்கள், அறம் பற்றிப் பேசுகிறார்கள். காதல் உணர்வுகளை மிகத் தெளிவாக அழகாய் எடுத்தியம்புகிறார்கள். அவை அங்கீகாரமும் பெற்றிருக்கின்றன.இந்தக் காலங்களில் சமூக நிலைப்பாடுகளில், செயல்பாடுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படி, கல்வி, புலமை மட்டுமல்ல தம் அறிவாற்றலால், திறமையால் நாடாண்ட பெண்களையும் வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு காலத்திலும் இந்த தேசத்தின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் இதற்கான சாட்சியங்கள் உண்டு. இங்கே பெண்கள் கல்வி மறுக்கப்பட்டு வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டனர் என்னும் வாதம் உடைபடும்படியான உதாரணங்களை இந்தியாவின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் எடுத்து வைக்க இயலும்.

சில காலங்களில், உலகின் எல்லா விஷயங்களிலும் ஏற்றத்தாழ்வு இருப்பது போலவே  இதிலும் ஏற்றத்தாழ்வு  இருந்திருக்கிறது. கல்வியும் வாய்ப்பும் கிடைக்கப் பெறாத காலங்கள் இருந்திருக்கின்றன. அதற்காக அதனை மறுக்கப்பட்டதாகக் கொண்டு வாதிடல் அர்த்தமற்றது. ஒவ்வொரு காலத்திலும் ஏற்படும் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலைகள் நாட்டில் பல அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்றே  பெண்களின் முன்னேற்றம், உரிமைகள், அங்கீகாரம் போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மை. என்றபோதிலும் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தமது ஆற்றலை வெளிப்படுத்திய பெண்கள் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத நிஜம்.

சூரியனைக் கைகளால் மறைத்துவிடல் இயலாதது போல ஆற்றலோடு கூடிய பெண்களின் எழுச்சியையும் மறைத்து விடல் இயலாது. அரசாண்ட பெண்கள் என எடுத்துக்கொண்டால் மஹாராஷ்ட்ரத்தின் அகல்யா தேவி கலை மற்றும் இலக்கியத்திற்குப் புத்துயிர் அளித்துப் போற்றிய ஆட்சியாளராய்த் திகழ்ந்தார். ராணி ரசியா சுல்தானா டெல்லியின் ஒரே பெண் ஆட்சியாளர். தனது அகமதுநகரைக் காக்க அக்பரையே எதிர்த்து நின்ற வீராங்கனை ராணி சந்த் பீபி, கொரில்லா தாக்குதல்களால் தன் எதிரிகளை நடுங்கச் செய்த ஆந்திரத்தின் நாகம்மா, ராணி ருத்ரமாதேவி,  கர்நாடகத்தின் கெல்லடி சென்னம்மா. ஒüரங்கசீப்பை எதிர்த்துப் போரிட்ட தாராபாய், தமிழகத்தின் வேலு நாச்சியார், ராணி  மங்கம்மா, ஜான்சியின் ராணி லட்சுமிபாய். இவர்கள் இந்த பரந்த பாரத தேசத்தின் சில ராணிமார்கள். இவர்களைப் போன்றே  இன்னும் எத்தனையோ ராணிமார்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களைக் காக்கும் பெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.  

இவர்கள் அனைவருமே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள்.  இவர்களின் காலத்திலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சாதிய, மதப் பாகுபாடுகள் இருந்தன. சதி போன்ற கொடிய வழக்கங்களும் சடங்குகளும் கூட  நடைமுறையில் இருந்தன. அவற்றையெல்லாம் தாண்டியே இந்தப் பெண்மணிகள் தங்களின் சுவடுகளை, அடையாளங்களை வரலாற்றில் பதிய வைத்துள்ளனர். மேலும் சில பெண்கள் வரலாற்றை உருவாக்குபவர்களாக இருந்துள்ளனர். வீர சிவாஜியை உருவாக்கிய ஜீஜாபாய் போன்று  எண்ணற்ற மகளிர் நம் முன்னோடிகளாக வாழ்ந்துள்ளனர். இவர்களைப் பற்றிக் கூறும் பொழுது சுவாமி விவேகானந்தர், "தாயின் அன்பு மகத்தானது அது அச்சமற்றது எல்லைகளற்றது அது தியாகத்தின், உண்மையின் உரு' என்கிறார். 

விருப்பம், லட்சியம் என்று தெளிந்த சிந்தையும் வைராக்கியமும் படைத்தவர்களாக பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் கூட நம் பாரதப் பெண்டிர் பெரும் ஆத்ம சாதனைகளை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இறைவனை தன் நட்பாக காதலனாகக் கண்ட தமிழகத்துக் காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ராஜஸ்தானத்து மீரா பாய், மராட்டியத்தில் ஜனாபாய், கோமாபாய், கேரளத்தின் லலிதாம்பிக அந்தரஜனம், வங்கத்தின் ஆஷா பூர்ணாதேவி.

பக்தி சுவை பொங்கும் கணக்கற்ற பாடல்களும், நாமாவளிகளும், பாசுரங்களும் இந்த பக்தைகளின் பங்களிப்பாக நமக்கு கிடைத்திருக்கின்றன. இதில் கவனிக்கத் தக்கது மீராபாய் அரச குல மங்கை,  வீட்டுப் பெண், ஜனாபாய் பணிப்பெண்ணாக வாழ்ந்தவர். ஆண்டாள் கோயிலில் கைங்கர்யம் செய்தவர் வீட்டுப் பெண், காரைக்கால் அம்மையாரோ வியாபாரியின் வீட்டுப் பெண். வேறுபட்ட குடும்ப, பொருளாதார நிலையில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அனைவரும் தம் லட்சியத்தில் சற்றும் தளர்ந்தவர்களாக இல்லை. 

ஞானமார்க்கத்தில் வாழ்ந்து  தெய்வங்களுக்கு நிகராக தங்களை உயர்த்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். நாம் இன்றும் நம் வழிகாட்டிகளாய் அவர்களைப் போற்றி வணங்குகிறோம். யோக வாசிஷ்டம் சொல்லும் சுதலா, ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருவாக விளங்கிய பைரவிபிராமணி, அன்னை சாரதா தேவி, சித்தர்களுக்கு நிகராக தத்துவப்பாடல்களைத் தந்து சித்தி அடைந்த ஆவுடையக்காள் மற்றும் அக்கமஹாதேவி என்று ஆத்ம ஞானிகள் வரிசையும் இந்த தேசத்தின் பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. 

சென்ற நூற்றாண்டை எடுத்துக் கொண்டால் சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திய பெண்கள் சிவகங்கையை சேர்ந்த குயிலி தொடங்கி தில்லையாடி வள்ளியம்மை, கவிக்குயில் சரோஜினி நாயுடு வரை ஏராளமானோர் உள்ளனர். கலை, அறிவியல் என எல்லாத் துறைகளிலும் இன்றும் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்கின்ற பெண்மணிகளைப் பார்க்கிறோம். பெண் உரிமை பற்றிய கருத்தாக்கங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள இன்று நாம் மனதில் கொள்ள வேண்டியது, நமது ஆற்றல் இந்த சமூகத்திற்கானதாக, பாரத தேசத்தின் மேன்மைக்கானதாக இருக்க வேண்டும். தொன்று தொட்டு அதுவே நமது அடையாளம்.

ஆக, புராணங்கள் தொடங்கி இலக்கியம், வரலாறு என அத்தனையும் நமக்கு சொல்வது ஒன்றே தான் அது, விருப்பம், ஆர்வம், துடிப்பு இவை மூன்றும் கொண்ட பெண்ணின் ஆற்றல் வெளிப்பட்டே தீரும். எந்தக் காரணங்களும் அவற்றுக்குத் தடையாய் நிற்க முடியாது. அப்படித் தடையாய் வரும் அத்தனையும் தாண்டி சக்தி வடிவாய் பெண் உயர்ந்து நிற்பாள்.                  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com