புல்வாமா தாக்குதலை அரசியலாக்கக் கூடாது என்று சொல்வதே மிக மோசமான அரசியல்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
Pulwama Terror Attack
Pulwama Terror Attack


காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்தக் கொடூரத் தாக்குதல் நாட்டையே மிகப்பெரிய துக்கத்தில் ஆழ்த்தியது. 40 வீரர்களின் உயிரிழப்பு என்பது எளிதாகக் கடந்துவிட முடியாத செயல்தான். இவர்கள் எல்லையில் நடந்த போரில் வீரமரணம் அடைந்திருந்தால்கூட நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்தார்கள் என்ற பெருமையை ஆறுதலாகக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் பணியில் சேரும் தருணத்தில், நாட்டுக்குள்ளேயே நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் அர்த்தமற்ற முறையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த உயிரிழப்புகளுக்கு நிச்சயம் வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் அதைச் சரியாகச் செய்தது. மேலும், குறிப்பாக உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த நாடே துணை நிற்கிறது என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதையும், இந்திய மக்கள் சரியாகச் செய்து வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க, புல்வாமா தாக்குதல் விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்ற போர்வையில் மிகப்பெரிய அரசியல் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் இருக்கும் தேசப்பற்றை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. பாகிஸ்தானை இல்லாமல் ஆக்க வேண்டும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும், தக்க பதிலடி தர வேண்டும் என உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடாக பல கருத்துகள் பரவலாகப் பரவி வருகின்றன. 

அண்டை நாடு மீது போர் தொடுப்பது ஏதோ பப்ஜி விளையாட்டை விளையாடுவது போல் என்று எண்ணும் அளவிலான சிந்தனை எங்கிருந்து புகட்டப்படுகிறது. 

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, இந்தப் பயங்கரவாத சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறிய கருத்து இதோ: 

"புல்வாமா தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை எப்போதுமே கண்டிக்கத்தக்கது. அதை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று சொன்னதுடன், "ஒரு குறிப்பிட்ட சில அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த நாட்டையோ அல்லது ஒரு தனிநபரையோ நாம் பழி சுமத்தலாமா" என்றும் தெரிவித்திருந்தார். 

ஆனால் டிவிட்டர்வாசிகள், நவ்ஜோத் சிங் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சியில் அவர் பங்குபெறும் நிகழ்ச்சியில் இருந்து அவரை உடனே நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் டிவிட்டர்வாசிகள் வைத்தனர். இந்த ஹேஷ்டேக், டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது. 

பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம்தானே தெரிவித்துள்ளார், பிறகு ஏன் இந்தக் கோபம் என்று ஆராய்ந்தால், ஒரு பயங்கரவாத அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஒட்டுமொத்த நாட்டையே குறைகூறலாமா என்று அவர் கூறிய கருத்துதான் இப்படி பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதற்கேற்றார்போல், டிவிட்டர்வாசிகளின் கோரிக்கையை ஏற்று நவ்ஜோத் சிங் சித்துவும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். 

நவ்ஜோத் சிங் தெரிவித்த கருத்தில், இது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனத்தையோ தெரிவிக்காமல் இல்லை. இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அவற்றைப் புறம் தள்ளிவிட்டு, அவர் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகப் பேசியதுபோல் கட்டமைத்து அதை எதிர்ப்பதை எந்த மாதிரியான சிந்தாந்தமாக எடுத்துக்கொள்வது. 

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அந்தப் பயங்கரவாதத்தைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும்; அதற்கு ஒரு நாட்டின் அரசு துணை நின்றால் அந்த நாட்டு அரசைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அதற்காக, அந்த நாட்டில் இருக்கும் அனைவருமே குறிப்பிட்ட அந்தப் பயங்கரவாதச் செயலை ஆதரிப்பது போன்றும், தேச விரோதி போன்றும் பிம்பங்களை உருவாக்குவது எந்த மாதிரியான அரசியல்.

பயங்கரவாதச் செயலுக்காக பயங்கரவாத அமைப்பைக் கண்டிக்காது, பொத்தாம் பொதுவாக ஒரு நாட்டையே முழுமையாக விமரிசனத்துக்குள்ளாக்குவதுதான் இந்தியா மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்துபோல் ஆகுமா? அப்படி இருக்கும்பட்சத்தில், அது எந்த மாதிரியான தேசப்பற்று? இதற்கு இத்தனை பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கிறது என்றால், எந்த மாதிரியான சமூகம் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

சிஆர்பிஎஃப் வீரர்களின் இழப்பை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று கூறி, இதுபோன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பது எவ்வளவு பெரிய அரசியல் செயல்?

இந்தத் தாக்குதலை எவ்வாறு எளிதில் கடந்துவிட முடியாதோ, அதேபோல் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் எழுந்துள்ள விளைவுகளையும் எளிதில் கடந்துவிட முடியாது. பிரபலமான, அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபரான நவ்ஜோத் சிங் சித்து மீதே இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுக்கவைக்க முடிகிறது என்றால், வரும் காலத்தில் ஒரு சாதாரண வெகுஜன மக்கள் ஒரு கருத்தை முன்வைத்தால், அந்த விவகாரம் எவ்வளவு மோசமான விளைவுகளில் கொண்டு சேர்க்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்ததற்காக, சில மாணவர்களும், நிறுவனங்களில் பணிபுரிந்த சிலரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் தாக்குதல் சம்பவத்தின் தாக்கமே. அந்தத் தாக்கத்தின் உணர்வுகளே இந்த வகையில் வெளிப்படுகிறது. ஆனால், உணர்ச்சிவசப்பட்டு அணுக வேண்டிய செயலா இது? உணர்ச்சிவசப்பட்டால் தீர்வு கிடைக்குமா? எதை உணர்ச்சிவசத்துடன் அணுக வேண்டும் எதை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும் என்கிற வேறுபாடு அறியாத சமூகம்தான் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகிறதா? அல்லது இந்தச் சமூகம் எதையுமே அறிவுப்பூர்வமாக அணுகிவிடக் கூடாது என்று நுணுக்கமாகத் திசை திருப்பப்படுகிறதா?

இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததில் இருந்து, இதை எந்தக் காரணத்துக்காகவும் இதை அரசியலாக்க வேண்டாம் என்று பல்வேறு பதிவுகளையும், பிரதமர் உட்பட அரசியல் தலைவர்களின் கருத்துகளும் இங்கு பரவி வருகிறது. ஆனால், இந்தச் சம்பவம் இங்கு அரசியலாக்கப்படுகிறது, அதுவும் தவறான அரசியலாக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவரும் உள்நாட்டில் பணியில் சேரும்போது நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எல்லைப் போரிலோ அல்லது உள்நாட்டில் பயங்கரவாதிகளுடனான போரிலோ உயிரிழக்கவில்லை. அப்படி இருக்கையில், அவர்கள் அடைந்தது வீரமரணம், அதற்குத் தக்க பதிலடி தரப்படும் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எவ்வளவு அரசியல் உள்ளது. அவர்கள் வீரமரணம் அடையவில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக உள்நாட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர். இந்த வார்த்தைப் பயன்பாட்டையும், அதைப் பயன்படுத்துபவர்களது பின்னணியையும் ஆராய்ந்தால் அதில் இருக்கும் அரசியல் புரியும். அதுவும், பொதுத் தேர்தல் வர இருப்பதால், அந்த அரசியல் ஆழத்தையும் எளிதில் உணரமுடியும்.

இணையதளவாசிகள்தான் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிடுகிறார்கள் என்றால், பிரதமர் மோடியும் இதற்குத் தக்க பதிலடி தரப்படும், பயங்கரவாதிகள் தவறு செய்துவிட்டனர், உங்கள் உள்ளத்தில் கொந்தளிக்கும் நெருப்பு எனது இதயத்திலும் எரிகிறது என்று, உணர்வுகளை மேலும் தூண்டும் வகையில் சினிமா பாணியில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி மட்டுமல்ல ஆளும் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களும் அதே பாணியைத்தான் கையாண்டு வருகின்றனர். 

பிரமதர் மோடி அப்படிக் கூறும்போது, எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லையே என்ற கேள்வி எழுந்தால், இது காஷ்மீர் தொடர்பான விவகாரம் என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கும். காரணம், ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் என்றாலும் சரி, பாஜக என்றாலும் சரி, காஷ்மீர் பயங்கரவாதத்துக்குக் காரணம் பாகிஸ்தான், சீனா மற்றும் பயங்கரவாதிகள் என்பதுதான் அரசின் பொதுவான பதிலாக இருக்கும். அதனால், காஷ்மீர் விவகாரத்தில் கட்சி பேதமின்றி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பதிலடி தர வேண்டும் போன்ற கருத்தைத்தான் அரசியல்வாதிகள் முன்வைப்பார்கள். 

காஷ்மீர் தாக்குதலுக்குப் பாகிஸ்தான்தான் காரணம், பயங்கரவாதிகள்தான் காரணம் என்று பேசிக்கொண்டுவரும் அதே தருணத்தில், இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியது இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த இளைஞன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, 19 வயதே ஆன பயங்கரவாதி அடில் அகமது தாரின் தந்தை பேட்டியளிக்கிறார். 

அதில் அவர், "காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண வேண்டியது மத்திய அரசின் உடனடிப் பணியாகும். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டாலே, இங்கு எந்த இளைஞனும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சுதந்திரத்துக்காக கையில் துப்பாக்கி ஏந்தும் நிலை ஏற்படாது. நான் வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாவிட்டால், இதுபோன்ற மோசமான தாக்குதல்களைப் பயங்கரவாதிகள் நடத்தக்கூடும். 

இளைஞர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு இங்கிருக்கும் சூழ்நிலையே அழுத்தம் தருகிறது. எனது மகன் குறைவாகவே படித்திருக்கிறான். ஆனால், பிஎச்டி படித்த மன்னான் வானி ஏன் பயங்கரவாத்தில் ஈடுபட்டான். தீர்க்கப்படாத காஷ்மீர் விவகாரம் மற்றும் இங்கிருக்கும் இளைஞர்கள் மோசமாக நடத்தப்படுவது போன்றவையே இதற்குக் காரணம்" என்றார். 

இவரது இந்தப் பேட்டியை, பயங்கரவாதியின் தந்தை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்போகிறோமா அல்லது காஷ்மீர் குடிமகன் என்ற வகையில் மதிப்பளிக்கப்போகிறோமா? 

கடந்த 2014 முதல் 2018 வரை, காஷ்மீரில் பொது மக்கள் 138 பேர், 339 பாதுகாப்புப் படையினர், 838 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்க இந்தியா என்ன பயங்கரவாத தேசமா? ஏன் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது? இந்தக் கேள்விக்கணை இங்கு எப்போது எழப்போகிறது?   

காஷ்மீரில் இஸ்லாமிய தேசம்தான் அமைய வேண்டும் என்று இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் என குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மீது தாக்குதல் நடந்ததாக எப்பொழுதாவது செய்திகளை வாசித்ததுண்டா? அப்படி இருக்கையில், காஷ்மீரில் நிகழ்வது இஸ்லாமிய பயங்கரவாதமா? 

காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைந்தது? காஷ்மீரில் எதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்? காஷ்மீரில் எதற்கு ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்கிறது? பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் ஏன் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்? காஷ்மீரில் சிறுவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் மீது ஏன் பெல்லட் குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு, அதன்மூலம் தீர்வு கிடைக்குமா கிடைக்காதா என்று ஆராய வேண்டிய கட்டாயம் இங்கு உள்ளது.  

ஆனால், தற்போதைய சூழலில் இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதும், தீர்வு காண்பதும் இரண்டாவதாகத்தான் இருக்கிறது. கேள்விகளை எழுப்பினால் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படும் இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற கேள்விகள் இங்கு எப்போது எழப்போகின்றன என்பதுவே பிரதானமாகிவிட்டது. இந்தக் கேள்விகளை எழுப்பாமலோ அல்லது எழும் கேள்விகளுக்கு விடை காணாமலோ காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட முடியுமா?  

இதை அரசியலாக்கக் கூடாது, பழிவாங்க வேண்டும், பதிலடி தர வேண்டும், சிந்திய ரத்தம் வீண் போகாது, பாகிஸ்தான் என்பது எதிரி நாடு, போர் தொடுக்க வேண்டும் என்பது போன்ற பிம்பங்களைக் கட்டமைத்து, தேசப்பற்று என்ற போர்வையில் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ‘அரசியல்’ செய்யப்படும் வரை, கேள்விகளை எழுப்புவதே இங்கு கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com