இந்த சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதாக இருந்தால் உஷார்.. எச்சரிக்கும் அமைச்சகம்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கும் 96 பகுதிகளை அடையாளம் கண்டு அறிவித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.
இந்த சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதாக இருந்தால் உஷார்.. எச்சரிக்கும் அமைச்சகம்


தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கும் 96 பகுதிகளை அடையாளம் கண்டு அறிவித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.

இந்த அறிவிப்பு வெளியாகக் காரணமாக இருந்த மிக மோசமான சாலை வடிவமைப்புக்கும், பொறியாளர்களுக்கும் முதலில் நாம் கரம் குவித்து நன்றி தெரிவித்த பிறகு கட்டுரையைத் தொடர்வதே நியாயமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கூட தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 96 இடங்களில் நிகழும் விபத்துகளைத் தடுக்க முடியவில்லை என்று மாநில சாலைப் பாதுகாப்புக் கவுன்சில் அளித்த தொடர் வலியுறுத்தலை அடுத்து, தமிழகத்தில்  அதிக விபத்துகள் நடக்கும் இப்பகுதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய மத்திய அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக நமது எக்ஸ்பிரஸ் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மிக மோசமான வடிவமைப்பின் காரணமாக சுமார் 30 சதவீத சாலை விபத்துகள் நிகழ்வதாக சாலைப் பாதுகாப்புக் கவுன்சில் கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 5,491 கி.மீ. சாலைகளைப் பராமரிக்கும் மாநில தேசிய நெடுஞ்சாலைத் துறையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து மாநில சாலைப் பாதுகாப்புக் கவுன்சிலிடம் அளித்த அறிக்கையில், தமிழகத்தில் 96 இடங்கள் அதிக விபத்துகள் நேரிடும் 'பிளாக் ஸ்பாட்' இடமாகக் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை சரி செய்யும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் மோசமான சாலை வடிவமைப்பினால் விபத்துகள் நேரிடுகிறதோ அங்கு மேம்பாலங்கள் அல்லது சாலைகளை மாற்றியமைக்கும் பணி நடைபெறும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக சென்னை - பெங்களூர் பைபாஸ் சாலையில் ஆம்பூர் சந்திப்பு அருகே அதிக விபத்துகள் நிகழ்கின்றன. ஆனால், அங்கு  வசிக்கும் மக்களின் தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் மேம்பாலத்தைக் கட்ட முடியவில்லை. இந்த பிரச்னையில் மாநில அரசு தலையிட்டு தீர்வு காண உதவிட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

விபத்து அதிகம் நிகழும் 96 இடங்களில் 24 பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை45, மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை7, சென்னை - பெங்களூர் பைபாஸ் மற்றும் மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 52 இடங்களில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அல்லது சுரங்கப் பாலம் கட்டும் பணிகளுக்கான பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்காலிகமாக முன்னெச்சரிக்கை பலகைகள் பொருத்துவதும், யு-டர்ன்-க்கான சாலை சமிக்ஞைகளை மிக அழுத்தமாக சாலைகளில் வரைவதும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள தகவலில், புதிதாக அமைக்கப்படும் அனைத்து சாலை திட்டங்களிலும், மக்கள் சாலையைக் கடப்பதற்கான நடைப்பாலங்கள், சுரங்கப் பாதைகள் உள்பட அனைத்து சாலைப் பாதுகாப்புத் திட்டங்களும் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 டிசம்பர் மாதம் வரை 61,213 பேர் சாலை விபத்துகளில் பலியாகியிருப்பதாகவும், இதில் 30 சதவீதம் பேர், மோசமான சாலை வடிவமைப்பினால் நடந்த விபத்துகளால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com