சிறப்புக் கட்டுரைகள்

வேலை இல்லாததால் அன்றாட குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சிக்கினார்! மீண்ட கதை சொல்கிறார் கஸ்தூரி!

புகழ் செல்வம்

கஸ்தூரியும் செல்வராஜும் அரிசி ஆலை ஒன்றில் கொத்தடிமைத் தொழிலாளர்களாகச் சிக்கிக் கொண்டவர்கள். அவர்கள் தங்களின் விடுதலைக்காக ஏங்கி இருந்தனர். தப்பிச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்கிற பதற்றத்தில் சுதந்திரமான வாழ்க்கையைப்பற்றி அவர்கள் ஒரு போதும் நினைத்ததில்லை. ஓரிரு ஆண்டுகள் மட்டுமல்ல…

'நாங்கள் வாங்கிய கடனை வேலை செய்து அடைத்து விட்ட பின்னர் முதலாளி எங்களை வீட்டிற்கு அனுப்பும் நாளுக்காக காத்திருந்தோம்.' - கஸ்தூரி

அந்த நாள் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14, 2017 ஆம் ஆண்டு வந்தது. கஸ்தூரி, அவரது கணவர் செல்வராஜ் மற்றும் நான்கு குடும்பங்கள் பொன்னேரி மண்டல வருவாய் அலுவலரால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையிலிருந்து மீட்கப்பட்டனர். மொத்தம் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் (5 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை மற்றும் பத்து மாதம் ஆன ஆண் குழந்தை ஒன்று) உள்ளிட்டோரை அவர்கள் வேலை செய்து வந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

பத்து ஆண்டுகளாகச் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் பறித்த கொத்தடிமை முறையைப் பற்றி கஸ்தூரி தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

நியாயமான கூலியை வழங்கி தங்களைக் கண்ணியமாக நடத்திய ஒரு அரிசி ஆலை முதலாளியிடம் கஸ்தூரியும் செல்வராஜும் வேலை செய்து வந்தனர். ஆனால் அரிசி ஆலையை அவர் குத்தகைக்கு விட்டுவிட்டுச் சென்றுவிடவே இவர்கள் வேறு இடத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டியதாயிருந்தது.

வேலை இல்லாததால் அன்றாட குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சீனிவாசன் என்கிற முதலாளியிடம் தங்கள் வேலை செய்து கழித்து விடுவதாகக் கூறி ரூபாய் 7000 கடனாக வாங்கினர். ஆனால் அந்த அரிசி ஆலையில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குத் தொடங்கும் வேலை மாலை வரை நீண்டு சுமார் 10 மணி நேரம் நீடித்தது. தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி இறக்கும் வேலையை செய்தனர். ஒவ்வொரு முறையும் 40 மூட்டை அளவு நெல் அரிசி ஆவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இந்த வேலையைச் செய்து வந்த கஸ்தூரிக்கும் செல்வராஜுக்கும் வாரத்திற்கு ரூபாய் 300லிருந்து 400 வரை மட்டுமே கூலியாக வழங்கியுள்ளார் அந்த முதலாளி. இது அரசு நிர்ணயம் செய்திருக்கும் ஒருவரின் சராசரியான குறைந்த பட்ச கூலியை விட மிகக் குறைவானது.

உறவினர் ஒருவர் இறக்கும் பட்சத்தில் முதலாளி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிப் போகச் சொல்வார். ஆனால் எல்லா வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் திரும்ப வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பார். அவசரம் மற்றும் திருவிழா காலங்களில் வீட்டுக்குச் சென்றாலும் முதலாளி திடீரென அவர்களது வீட்டிற்கே சென்று அரிசி ஆலைக்கு வேலைக்குத் திரும்பும்படி அழைத்து வந்துவிடுவார். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை அடிக்கடி மிரட்டி எப்படியாவது வேலைக்குத் திரும்பச் செய்துவிடுவார். கஸ்தூரியும் செல்வராஜும் ஒருமுறை வீட்டிற்குச் சென்றபோது இதேபோல் நடந்தது. செல்வராஜ் உடல்நிலை சரியில்லாமல் தன் கிராமத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் முதலாளி அவரை விடாமல் வேலைக்குத் திரும்பும்படி நிர்ப்பந்தித்து அழைத்து வந்து ஓய்வில்லாமல் வேலை வாங்கினார்.

தொழிலாளர்கள் வேறு எங்கும் வேலைக்குச் செல்லக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறுவார். அப்படிச் செல்வதானால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி விட்டுச் செல்லுமாறு சொல்லுவார். அரிசி ஆலையில் வேலை இல்லாத காலத்தில் முதலாளி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 ரூபாய் வழங்கிவிட்டு அதனை ஏற்கனவே வாங்கிய கடனில் சேர்த்துக் கொள்வார். இப்படியாகத் தொழிலாளர்கள் அவருக்கு அதிகமான கடன் தொகையைத் திருப்பி செலுத்த வேண்டியிருப்பதால் அரிசி ஆலையை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என மிரட்டுவார். இவ்வாறு அந்த முதலாளி அற்ப பணத்துக்காக எங்களை ஏமாற்றி எங்களின் கடின உழைப்பைச் சுரண்டியுள்ளார்.

'எங்களைப் போன்ற மக்களை அதிகாரிகள் காப்பாற்றி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களுக்கும் அந்த நாள் வரும் என்று காத்திருந்தோம்…' - கஸ்தூரி.

கஸ்தூரியும் செல்வராஜும் மீட்கப்பட்டு தற்போது ஓராண்டாகிறது. அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தாலும் தற்போது சுதந்திரமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

'இனி யாரிடமிருந்தும் முன் பணம் வாங்க மாட்டோம்' என்று கஸ்தூரி உறுதியாகக் கூறுகிறார்.

கொத்தடிமையாக இருந்த பத்து வருடங்கள் தாங்க முடியாத வலி, கண்ணீர், அவமானம் மற்றும் கையறுநிலை தற்போது காணாமல் போய்விட்டன. தங்களது மகன் மற்றும் மகளின் எதிர்காலத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

நன்றாகப் படித்துச் சம்பாதிப்பவர்களுக்கு 7000 ரூபாய் என்பது தங்களது ஒரு மாத வருமானத்தில் பாதி கூட இருக்காது. ஆனால் அந்த பணத்தை திருப்பிச் செலுத்த பத்து வருடங்கள் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT