‘நீருக்குள் மூழ்கி காணாமல் போகும்’ வித்தை காட்ட முயன்று பரிதாபமாக உயிரிழந்த கொல்கத்தா மந்திரவாதி!

இதோ நேற்று உண்மை தெரிந்து விட்டது. கிட்டத்தட்ட 30 அடி ஆழத்தில் மந்திரவாதி சஞ்சல் லாஹிரி அலைஸ் மாண்டிரேக்கின் சடலம் கிடைத்து விட்டது. நன்றாகக் கைகளும், கால்களும் கட்டப்பட்ட சங்கிலியால் நிலையில் ஜடுகர்
‘நீருக்குள் மூழ்கி காணாமல் போகும்’ வித்தை காட்ட முயன்று பரிதாபமாக உயிரிழந்த கொல்கத்தா மந்திரவாதி!

கிராமப்புறங்களில் ஆறு, குளம் கம்மாய்களில் மூச்சைப் பிடித்துக் கொண்டு முங்கி 50 எண்ணும் வரை வெளியில் வராமல் மூச்சடக்கிப் பழகுவோம். அது ஒரு விளையாட்டு. இதிலும் கூட சிலர் தோற்றுப் போய் தண்ணீருக்கு அடியில் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்த விளையாட்டின் மீதான ஆர்வமும், திரில்லும் இப்போதும் கூட பலருக்கும் குறையவே இல்லை. இன்றும் கூட ஸ்விம்மிங் பூல்களில் இப்படி முயல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.

அதற்கும், மேலே உள்ள தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று குழம்பி விடாதீர்கள். தொடர்பு இருக்கிறது. மனித மனம் விசித்திரமானது. யாராலும் முடியாத ஒன்றை நாம் சாதிக்க வேண்டும். என்ற உணர்வு ஒவ்வொரு மனித உயிருக்குள்ளும் இருக்கிறது. சிலரால் அதை நிறைவேற்றி விட முடியும். சிலரால் எத்தனை முயன்றாலும் அது முடியாது. அப்படி முடியாத பட்சத்தில் நிகழ்த்திக் காட்டி சாதிப்பவர்களை நாம் மந்திரவாதிகள் என்றும் மாயஜால வித்தைகள் தெரிந்தவர்கள் என்றும் நம்மிலிருந்து விலக்கி வைத்து அவர்களின் மீது பயங்கலந்த மரியாதையும் செலுத்தத் தொடங்கி விடுகிறோம்.

மாயாஜால வித்தைகள் உண்மையா? வெறும் கண்கட்டு வித்தைகளா? என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. நமக்குத் தேவை, கொஞ்சம் பரபரப்பு மற்றும் த்ரில் அனுபவம் மட்டுமே! அதனால் தான் யாரேனும்...

  • உங்கள் கண்ணெதிரே நான் காற்றில் கரைந்து காணாமல் போகிறேன்.
  • ஆழமான ஆற்றின் நடுவே நடந்து காட்டுகிறேன்

என்றெல்லாம் பீலா விட்டால் உடனே அதை நம்ப முயல்கிறோம்.

இதோ இந்த கொல்கத்தா மந்திரவாதியின் அவலக் கதையும் அப்படியான ஒரு ஏமாற்று முயற்சி தான்.

கொல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சல் லாஹிரி எனும் இந்த மந்திரவாதி, கொல்கத்தாவின் ஆழமான பெரிய நதியான கூக்லியில் இறங்கி காணாமல் போய் மீண்டு வருவதாக இரு நாட்களுக்கு முன்பு மக்களைத் திரட்டி அறிவித்திருக்கிறார். இது இவருக்குப் புதிதில்லை. 2013 ஆம் ஆண்டிலும் இதே போல ஒரு கப்ஸா விட்டு மக்களைக் கூட்டி வைத்து ஆற்றில் இறங்கி காணாமல் போவதாக அறிவித்திருக்கிறார்.

அண்டர் வாட்டர் எஸ்கேப் ஆக்ட் பொய்த்துப் போன காலம்!

நூற்றுக்கணக்கான மக்கள் ஹெளரா பாலத்திலும், ஆற்றின் கரையிலும், போட்களிலும் நின்று கொண்டு இவரது மாயாஜாலத்தை ரசிக்கக் கூடி இருந்த நிலையில், ஆற்றில் இறக்கப்பட்ட மந்திரவாதி சஞ்சல் லாஹிரி அவர்கள் கண்ணெதிரே தன்னை ஆற்றுக்குள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட ஆளுயர இரும்புக் கூண்டின் பலவீனமான கதவை உடைத்துத் திறந்து கொண்டு ஹாயாக வெளியேறிய காட்சி அரங்கேறியது. அதாவது மாயாஜாலம் என்ற பெயரில் காணாமல் போய் மீள்வதற்கு பதில், அவர் கண்ணெதிரே கூண்டை உடைத்து தப்பி நீந்தி வருவதைக் கண்ட மக்கள், தங்களுக்கான த்ரில் அனுபவம் மிஸ் ஆகி விட்டதே என்று கோபமாகி விட்டனர். கண்ணெதிரே காணாமல் போய் மீண்டு வருவேன் என்று சொன்ன மந்திரவாதி, இப்படி கண்ணெதிரே காட்சியாக நீந்தி வருவதைக் கண்டதும், இது ஒரு ஏமாற்றுவேலை என்று அவர்களுக்குப் புரிந்து விட்டது. அதனால் கோபத்தில் கொந்தளித்து ’எங்களை என்ன வேலையற்ற மடையர்கள் என்றா நினைத்து விட்டாய்? ஆற்றுக்குள் காணாமல் போவதாகச் சொல்லி விட்டு நீந்தி வந்தா தரிசனம் தருகிறாய் என்று சொல்லி, மந்திரவாதியை நையப்புடைத்து அனுப்பி விட்டனர். இது அன்று நடந்த கதை. 

இதே கூட இப்போதும் நடந்திருந்தால் பிரச்னை இல்லை. கூடியிருக்கும் மக்களிடம் மட்டும் அடி வாங்கி மந்திரவாதி தப்பி இருப்பார். ஆனால், இம்முறை விதி சதி செய்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. மாயாஜாலம் செய்து காணாமல் போய் மீள்வதாகச் சொல்லி இரும்புக் கூண்டுக்குள் கூக்லியில் இறக்கப்பட்டு காணாமல் போன சஞ்சல் லாஹிரியை உயிருடன் மீட்க முடியவில்லை.

பதட்டத்தில் கழிந்த ஞாயிறு பிற்பகல்!

மந்திரவாதி சஞ்சல் லாஹிரிக்கு என்ன ஆயிற்று என்று தெளிவாகத் தெரியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முழுதும் ஒருவேளை அவர் தனது கூண்டைத் திறந்து வெளியில் வர இயலாமல் மரணித்திருக்க வேண்டும். அல்லது தனது கண்கட்டு வித்தைகளைப் பயன்படுத்தி கூடியிருக்கும் மக்களை ஏமாற்றி நதியின் வேறு ஏதேனும் ஓரிடத்தில் நீந்திச் சென்று தப்பியிருக்க வேண்டும் என்ற ஐயம் வலுத்தது. இரண்டில் உண்மையாகவே நடந்தது எது? ஒரு மந்திரவாதியின் மாயாஜால முயற்சி துயரத்தில் முடியப் போகிறதா? அல்லது சாகஸத்தில் முடியப் போகிறதா? எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் காத்திருந்தார்கள் கொல்கத்தா மக்கள்.

உள்ளே போன மந்திரவாதியை இன்னும் காணோமே ‘ என பயத்துடன் கரையில் காத்திருந்த பார்வையாளர்களில் சிலருக்கு, நடுக்கடலில் யாரோ ஒரு மனிதன் உயிருக்குப் போராடி தத்தளிப்பது நிழற்காட்சியாகத் தெரிந்திருக்கிறது. அதன் பின்னரே விஷயம் காவல்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மற்றும் ஆழ்கடலில் டைவ் அடித்துத் தேடும் திறன் கொண்டவர்களது குழு என இரண்டும் வரவழைக்கப்பட்டு மந்திரவாதியின் உடலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

30 அடி ஆழத்தில் கிடைத சடலம்!

இதோ நேற்று உண்மை தெரிந்து விட்டது. கிட்டத்தட்ட 30 அடி ஆழத்தில் மந்திரவாதி சஞ்சல் லாஹிரி அலைஸ் மாண்டிரேக்கின் சடலம் கிடைத்து விட்டது. நன்றாகக் கைகளும், கால்களும் கட்டப்பட்ட சங்கிலியால் நிலையில் ஜடுகர் மாண்டிரேக்கின் (சஞ்சல் லாஹிரியின் பட்டப்பெயர்) சடலம் வெளியில் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இதை பயத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

துயரத்தில் முடிந்த ஒரு மந்திரவாதியின் அவலக் கதையை நினைத்து அங்கு வேடிக்கை பார்த்த மக்கள் வாயடைத்துப் போயினர்.

ஆபத்தான விளையாட்டுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?

சரி, இப்படி ஒரு ஆபத்தான தந்திரத்தை நிகழ்த்த இவருக்கு அனுமதி யார் கொடுத்தது? என்ற கேள்வி எழுந்தது. 

காவல்துறையிடமும், கடலோர காவல்படையினரிடமும் சஞ்சல் லாஹிரி அனுமதி பெற்றுத்தான் இந்தக் காரியத்தை அரங்கேற்றி இருக்கிறார். அவர்களிடம் ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்றுகேள்வி எழுப்பினால், அவர் எங்களிடம் அனுமதி கேட்டு அனுப்பிய கடிதத்தில் சொன்னது வேறு, இங்கே நிகழ்த்தியது வேறு.  அவர் தன்னுடைய கடிதத்தில், நான் ஆற்றில் படகில் இருந்தவாறு சில மாயஜால வித்தைகளைக் காட்டப் போகிறேன், பிற்பகல் 1.30 மணியளவில் நிகழப்போகும் அதைப் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க அனுமதி வேண்டும்’ என்று தான் கேட்டிருந்தார், அதற்குத்தான் நாங்கள் அனுமதி அளித்திருந்தோம். என்கிறார்கள் அவர்கள்.

மரணம் குறித்து இந்தியாவின் பிரபல மந்திரவாதிகள் சொல்வதென்ன?

இந்தியாவின் பிரபல மந்திரவாதிகளிடம் இது குறித்துக் கருத்துக் கேட்கப்பட்ட போது பி சி சர்கார் உட்பட பிரபலங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னது ஒரே பதிலைத்தான் ’சஞ்சல் லாஹிரிக்கும் சரி அவரது மேஜிக் குழுவினருக்கும் சரி பயிற்சி போதாது’ என்பதே அது.

ஆற்றுக்குள் சென்ற மந்திரவாதி தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேலே வரவில்லை, அவரிடம் இருந்து எந்த சமிஞ்சைகளும் கூட வரவில்லை என்றதுமே அவர்கள் அலர்ட் ஆகியிருக்க வேண்டாமா? இப்படி விவரம் தெரியாமல், போதிய பயிற்சியுமில்லாமல் ஒரு ஆபத்தான மாய விளையாட்டில் ஈடுபட்டு அது உயிரிழப்பில் முடிந்து விட்டதே!’ என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டனர்.

ஆற்றுக்குள் இறங்கும் முன் மந்திரவாதி சஞ்சல் லாஹிரி சொன்ன கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா?

ஒரு ஆபத்தான தந்திரத்தை நீங்கள் திறம்பட கையாண்டு வெற்றி கண்டு விட்டீர்கள் என்றால் நிஜமாகவே நீங்கள் ஒரு முழுமையான மந்திரவாதி என்று அர்த்தம், ஒரு வேளை அந்த தந்திரத்தில் நீங்கள் தோற்றுப் போனால் பின்னர் அது துயரத்தில் தான் முடியும்’ - என்பதே!

சஞ்சல் லாஹிரியின் கதை இப்போது துயரத்தில் முடிந்து விட்டது.

சரி, இப்படி ஒரு ஆபத்தான மந்திர விளையாட்டைச் செய்து பார்க்க வேண்டும் என்று சஞ்சல் லாஹிரிக்கு யார் இன்ஸ்பிரேஷன்? என்று தேடிப் பார்த்ததில் பிரபல அமெரிக்க சண்டைப்பயிற்சியாளரான ஹாரி ஹூடினியின் பெயர் அடிபட்டது. அவர் இது மாதிரியான திரில் விளையாட்டில் பெயர் பெற்றவராம்.

ஹூடினி எஸ்கேப் ஆர்ட்!


ஹங்கேரியில் பிறந்து வளர்ந்தவரான இந்த அமெரிக்கன் வித்தைக்காரர் & சண்டைப்பயிற்சியாளர் எஸ்கேப் கலைகளில் வல்லவர் என்று பெயரெடுத்தவர். இவர் ஐரோப்பியச் சுற்றுலா மேற்கொண்டிருக்கையில் ஒருமுறை அங்கிருக்கும் காவலர்களிடம் சவால் விடுத்து, தனது கை, கால்களை இரும்புச் சங்கிலியில் பிணைத்துக் கொண்டு உயரமான கட்டிட உச்சியில் இருந்து லைஃப்ஜாக்கெட்டுடன் நீருக்குள் குதித்து காணாமல் போய் மீண்டு வந்து தனது வித்தையை நிரூபித்தார்.

அன்று முதல் இந்த வித்தை ஹூடினி ஆர்ட் என்று அழைக்கப்பட்டு பல்வேறு மந்திரவாதிகளை ஈர்க்கும் அம்சமாக மாறிப் பலரை அதைச் செய்து பார்க்குமாறு தூண்டிக் கொண்டிருந்தது. இதைச் செய்து முடிப்பதற்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன் பயிற்சிகளும் தேவை.  அதில் கோட்டை விட்ட காரணத்தால் சஞ்சல் லாஹிரி இன்று மறைந்து விட்டார். என்று கூறுகிறார்கள் இந்தியாவின் இதர மெஜீசியன்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com