நிஹாரிகா... ஜூனியர் என் டி ஆரைப் பார்க்க கம்மலை விற்று பஸ் ஏறிய இளம்பெண் இன்றோ சாதனைப் பெண்!

வாழ்வின் முதல்பாதி முழுக்க நிராகரிப்பையும், ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்து வந்த நிஹாரிகாவுக்கு வாழ்வின் மிகப்பெரிய கிஃப்ட் என்றால் அது அவரது கணவர் கண்ணனும், குழந்தைகளும் மட்டும் தான் என்கிறார்.
நிஹாரிகா... ஜூனியர் என் டி ஆரைப் பார்க்க கம்மலை விற்று பஸ் ஏறிய இளம்பெண் இன்றோ சாதனைப் பெண்!

நிஹாரிகா... வாழ்வின் சதிராட்டங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து ஜெயித்த பெண்!


இந்தப் பெண்ணை தற்செயலாக யூடியூப் நேர்காணல் ஒன்றின் வாயிலாகத்தான் நான் அறிந்து கொள்ள நேர்ந்தது. இந்தப் பெண்ணின் முகத்தை முதல்முறை பார்க்கும் யாருக்குமே சட்டெனத் தோன்றக்கூடியது ’இவள் ஆசிர்வதிக்கப்பட்டவள்’ என்ற  எண்ணமாகத் தான் இருக்கக் கூடும். ஆனால், புன்னகை மாறா அந்த முகத்தினடியில் புதைந்திருக்கின்றன எண்ணற்ற நிராகரிப்புகளும், அவமதிப்புகளும், ஏக்கங்களும், துயரங்களும். நீங்களும் தான் தெரிந்து கொள்ளுங்களேன் இந்த நிஹாரிகாவின் கதையை... 

ஆம், அடுக்கடுக்கான சிக்கல்களில் இருந்து மீண்டு நிஹாரிகா இன்று இந்தச் சமூகத்தில் தனக்கென சம்பாதித்து வைத்திருக்கும் அங்கீகாரத்தைப் பற்றி நாம் எல்லோரும் அறியத்தான் வேண்டும்.

நிஹாரிகா... இது அவரது சொந்தப் பெயர் அல்ல. பிறந்த போது வீட்டில் வைத்த பெயர் வேறு.

பிறந்த மூன்று மாதத்தில் அம்மா ஃபிட்ஸ் வந்து இறந்து விடுகிறார். என்னதான் அப்பாவும், தாத்தா, பாட்டிகளும் இன்னபிற சுற்றங்களும் இருந்த போதும் அம்மா இறந்த நிமிடம் முதலே நிஹாரிகா அனாதையாகி விட்டார் என்பதே உண்மை. ஆயினும் காலம் என்பது நமது கணிப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது இல்லையா?!

அம்மா இறந்து விட்டார். அப்பாவிடம் குழந்தையை ஒப்படைக்க அம்மாவைப் பெற்ற பாட்டி, தாத்தாவுக்குத் தயக்கம். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு அப்பாவால் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியுமா? குழந்தைக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? ஏற்கனவே மகளைப் பறிகொடுத்த சோகம் வேறு. அதனால் தங்களுடனே குழந்தையை வைத்துக் கொண்டு வளர்ப்பது என்று அவர்கள் முடிவெடுக்கிறார்கள். குழந்தைக்கு நன்கு விவரம் தெரிந்து பள்ளி செல்லும் பருவம் வந்ததும் தந்தையிடம் அனுப்புவது என்று தீர்மானித்து மூன்று மாதக் குழந்தை நிஹாரிகா அவரது பெரியம்மா வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். தாத்தா, பாட்டி இருப்பது கிராமத்தில். பெரியம்மாவுக்கு நிஹாரிகாவின் மீது எப்போதுமே பாசம் அதிகம். அதிலும் தாயை இழந்த குழந்தை என்ற பரிவும் சேர்ந்து கொள்ள தனக்கு முன்னரே மூன்று குழந்தைகள் இருந்த போதிலும் தங்கை மகளைத் தாங்கு தாங்கு எனத் தாங்கி ஒரு இளவரசியைப் போல வளர்த்து வந்திருக்கிறார்.

தாயில்லாச் சிறுமி என்று நிஹாரிகாவுக்கு பெரியம்மா வீட்டில் மட்டுமல்ல, பாட்டி வீடு, ஊர், சுற்றத்தினரின் வீடுகள் என எங்கு சென்றாலும் அன்புமழை பொழிந்திருக்கிறது.

எல்லாம் நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தால் பிறகு வாழ்க்கையில் அனுபவங்களுக்குப் பஞ்சமாகி விடுமில்லையா?

சரியாக நிஹாரிகா மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது விதி அவரது அப்பாவுடைய சகோதரர் (அதாவது அப்பா வழிப் பெரியப்பா) ரூபத்தில் கதவைத் தட்டியது. நிஹாரிகாவுக்கு என்ன தான் பெரியம்மா வீட்டில் பாசம் கொட்டிக் கிடந்தாலும்... அங்கிருப்பவர்கள் தன்னுடைய அம்மா, அப்பா இல்லை தனக்கென ஒரு சொந்த அப்பா நகரத்தில் இருக்கிறார். அவரைச் சென்று காண வேண்டும், அவருடன் இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் நிறையவே இருந்தது. அந்த நேரத்தில் பெரியப்பா வந்து;

‘உன் அம்மாவின் நகைகள் மற்றும் அவள் பெயரில் இருக்கும் சொத்துக்களை எல்லாம் வாங்கிக் கொண்டு நீ பேசாமல் இங்கே வந்து விடு... நாங்கள் உன்னை வளர்க்கிறோம், என்ன இருந்தாலும் நீ எங்களது குழந்தை’ என்று தூபம் போடவே விவரமறியாச் சிறுமியான நிஹாரிகாவும் விளையாட்டுத் தனமாக தன்னை இதுநாள் வரை வளர்ந்து வந்த பெரியம்மா, பெரியப்பாவிடம் போய் தன் பங்கு சொத்துக்களையும், அம்மாவின் நகைகளையும் கேட்டிருக்கிறார். 

பாலூட்டி வளர்த்த கிளி பாம்பாகக் கொத்த வந்த விபரீதம் போல இதை கருதிய பெரியம்மா, உன் நகைகளைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. கைக்குழந்தையான உன்னை என்னிடம் தூக்கிக் கொடுத்து வளர்த்துக் கொடு என்றார்கள். நானும் இது நாள் வரை வளர்த்து வந்திருக்கிறேன். என் சொந்தப் பிள்ளைகளுக்கும் மேலாக உன்னை பாசத்துடன் வளர்த்தேன். ஆனால், அந்தப் பாசத்தை தூக்கி எறிவது போலிருக்கிறது உனது இந்த சுயநல முடிவு. இனிமேல் நீ இங்கே இருக்க வேண்டாம். பாட்டி, தாத்தா வரட்டும், எல்லோருமாகச் சேர்ந்து பேசி உன்னை உன் அப்பாவிடமே ஒப்படைத்து விடுகிறோம். என்று நிஹாரிகாவின் விண்ணப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

மூன்றாம் வகுப்புப் படிக்கும் சிறுமி நிஹாரிகா, தன் அப்பா வீடு வந்து சேர்ந்த கதை இது தான்.

பிறந்தது முதலே ஆண்டுக்கு எப்போதாவது ஒரு முறையோ, இருமுறையோ மட்டும் ஏதாவது பொருட்களை வாங்கிக் கொண்டு தன்னைப் பார்க்க வரும் தந்தையிடம்... தன் மீதான பாசம் நீறு பூத்த நெருப்பாக உள்ளேயே மினுங்கிக் கொண்டிருக்கும். இனி அது மொத்தமாகத் தனக்கு கிடைக்கும்... என்ற நம்பிக்கையுடனும், சந்தோஷத்துடனும் அப்பா வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் சிறுமி நிஹாரிகா.

குழந்தையின் பொறுப்பு அவருக்கு இல்லாததை தனக்கான சுதந்திரமாகக் கருதியிருந்த நிஹாரிகாவின் அப்பாவுக்கு அப்போது இரண்டாம் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்து விட்டிருந்த நாட்கள் அவை. நிஹாரிகாவை சித்தி மட்டுமல்ல சித்தி பிள்ளைகளும் ஏன் அப்பாவுமே கூட பெரிய சுமையாகத் தான் கருதினார்கள். சித்திக்குப் பிறந்த குழந்தைகள் இருவரும் தனியார் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படிக்க. நிஹாரிகா அரசுப் பள்ளியில் சேர்க்கப் பட்டு படிக்க வேண்டிய கட்டாயம். வீட்டில் மாற்றாந்தாய் கொடுமையின் அத்தனை ரூபங்களும் சிறுமி நிஹாரிகாவுக்கு விஸ்வரூப தரிசனமாயின. வேளா வேளைக்கு போதிய உணவில்லை. அந்தச் சிறுமி சதா பசியுடன் அலைந்தாள். அத்துடன் வீட்டினுள் தங்கை, தம்பியினுடைய வேலைகள் அத்தனையும் இவள் தலையில்... அந்தப் பிள்ளைகளினுடைய துணிகளைத் துவைப்பது, பாத்திரம் துலக்குவது என்று சதா வேலை இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு. அப்போதெல்லாம் நிஹாரிகாவுக்கு ஒரே துணை தன் நிழல் மட்டுமே.

பள்ளிக்குச் சென்று வெயிலில் வீடு திரும்பும் போது தன்னைப் பின் தொடரும் நிழலை தன் அம்மா என்று நினைத்துக் கொண்டு அதனுடன் பேசிக் கொண்டே வீடு திரும்பியதாக நிஹாரிகா சொல்லும் போது நம் கண்களில் கண்ணீர் குளம் கட்டாமல் இருந்தால் அது வியப்பு. சித்தி தான் அப்படி என்றால், தன் உதிரத்திலிருந்து உதித்த பெண் குழந்தை இவள் என்ற உணர்வு அப்பாவுக்கு ஏன் இல்லாமல் போனது? ஒரு சின்னஞ்சிறுமியை அடுப்படியில் உறங்கச் சொல்லி விட்டு படுக்கையறையில் தன் இரண்டாம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கதவைச் சாத்திக் கொண்டு உறங்கும் கல் நெஞ்சராக தந்தை ஏன் இருந்தார்? என்பது நிஹாரிகாவுக்கு இப்போதும் விடை கிடைக்காத கேள்வி.

தன் மீதான பொறுப்புணர்வு தந்தைக்கு ஏன் இல்லாமல் போனது? தான் ஏன் அப்பா இருந்தும் அனாதை போல சொந்த வீட்டில் உணர்ந்தோம்? என்பதெல்லாம் அந்தச் சிறுமியின் மூளைக்குள் குழப்பம் விளைவித்த கேள்விகள். இந்தப் புறக்கணிப்புகள் எல்லாம் மனதை ரணமாக்கவே, ஒருமுறை சித்தியிடமே சென்று, 'சித்தி, என்னால் இனி இங்கு இருக்க முடியாது. என்னை என் பாட்டி வீட்டுக்கே அனுப்பி விடுங்களேன்’ என்று நிஹாரிகா கெஞ்சும் அளவுக்குச் சென்றது. அப்போது சித்தி சொன்ன பதில்; 

'உன்னை இங்கே பள்ளியில் சேர்த்திருக்கிறோம்... பள்ளியில் டி சி கொடுத்தால் தான் உன்னால் பாட்டி வீட்டுக்குச் செல்ல முடியும்' என்று;

கொஞ்சமும் பொறுப்பற்ற மனுஷி அவர். தன் மகளைப் போன்று பாசம் காட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் கணவரின் மகள் என்ற பொறுப்புணர்வாவது இருந்திருக்க வேண்டும். அந்தச் சிறுமியை மனதளவிலும், உடலளவிலும் வேலை மேல வேலை வாங்கிப் படாதபாடு படுத்தி அவளே இனி இந்த வீடு வேண்டாம் என்று உதறிக் கொண்டு ஓடும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்றால் எத்தனை பெரிய கிரிமினல் மூளை என்று பாருங்கள். இப்போது இந்தச் சிறுமி அப்பாவிடம் சென்று எனக்கு டி சி வாங்கித் தாருங்கள் என்று கேட்பாளா இல்லையா?

கேட்டாள்... ஆனால் அப்பா அதற்குச் சம்மதிக்காததோடு நிஹாரிகாவைப் பொருட்படுத்தவும் இல்லை.

அப்பா வீட்டில் சித்திக் கொடுமை. தங்கை, தம்பியோ வீட்டு வேலைக்காரி போல தன்னை நடத்திய அவலமான சூழல்.

விவரமறியாச் சிறுமி, சித்தியின் பேச்சை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பள்ளியில் ஏதேதோ பொய்களைக் கூறி... தன் தந்தைக்கு கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு விட்டதால் பள்ளியில் டி சி வாங்க வர முடியவில்லை. என பக்கத்து வீட்டில் ஒரு பெரியவரிடம் அழுது உதவி வேண்டி அவரை அழைத்துச் சென்று பள்ளியில் டி சி வாங்கி வந்து விட்டார். இதை அறிந்ததும் அப்பாவுக்கு வந்ததே கோபம். அதுவரை மகளென்று பாசம் காட்டியதில்லை. ஆனால் அடிக்க மட்டும் கை நீண்டது. சிறுமி நிஹாரிகாவை அடித்துத் துவைத்து விட்டார். முடிவாக... பூஞ்சை உடல், சரியாக தலை சீவி விட்டு பாங்கு பார்க்கச் சித்திக்கு எப்போதும் மனமிருந்ததில்லை என்பதால் கோரையாக ஈறும் பேன்களுமாக சிக்கு விழுந்த தலைமுடி, எலும்பும் தோலுமாக எதைக் கண்டாலும் பயந்து நடுங்கும் நோஞ்சான் சவலைப் பெண்ணாக நிஹாரிகா மீண்டும் பாட்டி வீட்டுக்கே திருப்பி அனுப்பப் பட்டாள். இப்போது தாத்தா இறந்து விட்டிருந்தார்.

பாட்டிக்கும் வயதாகி இருந்தது. பெரியம்மாவோ இம்முறை நிஹாரிகாவின் மீது அளவற்ற பாசம் இருந்த போதும் கூட அவள் மீதான பொறுப்பெடுக்க பயந்தார், யோசித்தார். ஏனெனில், மீண்டும் அப்பா வழிச் சொந்தங்களால் தங்களுக்கு தொந்திரவு வராது என்று நிச்சயமில்லையே. எதற்கு வம்பு என்று அவரும் சிறுமியைக் கைவிட்டார்.

பள்ளி சென்று படிக்க வேண்டிய வயதில் நிஹாரிகா ஊர் ஊராக அலைக்கழிக்கப்பட்டாள். முறையான பள்ளிப்படிப்பு இதனால் தடை பட்டது.

பாட்டி வீட்டிலும் நிம்மதி இல்லை. இந்தச் சிறுமியைக் காரணம் காட்டி அங்கு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்த சித்தியும், மாமாவும் சண்டையிட்டுக் கொண்டு நகரத்துக்கு குடிபெயர்ந்தனர்.

அப்பா உதவவில்லை, பாட்டியோ இனி படிப்பு என்ன வேண்டியிருக்கிறது? பேசாமல் அப்பா மணந்து கொண்டிருந்த சித்தியின் தம்பிக்கோ, அல்லது அத்தை மகனுக்கோ நிஹாரிகாவை திருமணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது பொறுப்பு எனும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் அதற்கு நிஹாரிகா சம்மதிக்கவில்லை. பெரியம்மாவுக்கு நிஹாரிகாவின் மீது பாசம் இருந்த காரணத்தால் அவரொரு மாப்பிள்ளை பார்த்து வைத்தார். திருப்பதியில் அந்த மாப்பிள்ளைக்கு நிஹாரிகாவைப் பிடித்திருந்த போதும்... இன்னும் இவள் சிறுமி தானே... என் வயது இவளை விட மிக அதிகம். பொருந்தாது என்று தட்டிக் கழித்தார். அவரை நிஹாரிகாவுக்கும் பிடித்திருந்த காரணத்தால் மாப்பிள்ளையின் சம்மதத்துக்காக திருப்பதியில் தன் அக்கா வீட்டில் திருமணத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருந்தார் நிஹாரிகா.

மாப்பிள்ளை தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்து செய்தி வரவில்லை மாறாக மரணச் செய்தி தான் வந்தது. ஆம் மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட். சடுதியில் மரணம்.

நிஹாரிகாவின் திரதிர்ஷ்டம் அவளை சென்றவிடமெங்கும் துரத்தியது. ஆனாலும் விட்டேனா பார் என்று தான் அவளும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாள்.

பெரியம்மா பார்த்த மாப்பிள்ளை அல்லவா? எனவே இப்போது அவருக்குமே நிஹாரிகாவின் மீது பெரிதாகக் கோபம் மூண்டது. பாசம் இரண்டாமிடத்தில் வைக்கப்பட்டு அந்த இளம்பெண்ணின் மீதான கோபம் மட்டுமே பிரதானமாகி மீண்டும் அவளை இவர்கள் கை விட்டனர். 

இம்முறை நிஹாரிகா காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடிச் சென்றார். தனக்கு இத்தனை சொந்தங்கள் இருந்தும் யாரும் கவனிப்பாரில்லை. தனக்கு படிக்க வேண்டும்  அதற்கு அப்பா தரப்பில் உதவி தேவை என காவல்துறையில் அவர் கோரிக்கை வைத்தார். காவல்துறை தலையீட்டால் அருகிலிருந்த பள்ளியொன்றில் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு படிக்கலாம் என முடிவானது. அப்பா முதல் சில மாதங்களுக்கு சரியாக கட்டணம் செலுத்தியவர் பிறகு எல்லாம் மறந்தார் போல ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதையாக கைவிட்டு விட்டார். அந்த சமயத்தில் என் ஜி ஓவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, நிஹாரிகாவிடம் வந்து 'உன் பெரியப்பா, அப்பாவிடம் நானே முறையாக கட்டணம் செலுத்த வைக்கிறேன், நீ என் மகளைப் போலிருக்கிறாய் ,இனிமேல் கட்டணம் செலுத்தி ஹாஸ்டலில் இருக்க வேண்டியதில்லை. என் வீட்டில் வந்து என்னுடனே நீ தங்கி விடு.' என பாசம் பொங்க அழைக்கவே. தாயில்லாப் பெண் நிஹாரிகா அதை நம்பி அவருடன் சென்று அவரது வீட்டில் வசிக்கத் தொடங்கி இருக்கிறாள்.

அந்தப் பெண், நிஹாரிகாவின் பெயரைச் சொல்லி அவளது உறவினர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள், சேவா டிரஸ்டுகள் என பலரிடமும் டொனேஷனாகப் பணம் பெற்று அதைத் தன்னுடைய பணமாகப் பாவித்து நிஹாரிகாவுக்கு எல்லாமே தான் மட்டுமே இதுவரை செய்து வந்து கொண்டிருப்பதாக படம் காட்டியிருக்கிறார். சுற்றியிருந்த உலகமும் இதைக் கொஞ்சம் நம்பத்தான் செய்தது. சரி எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு தானே! பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தது. நிஹாரிகாவின் தேர்வு எண்கள் பேப்பர் ரிசல்ட்டில் இல்லை. உடனே நிஹாரிகாவுக்கு அதுவரை பாதுகாப்புக் கொடுத்து பொறுப்பேற்றிருந்த அந்த அம்மணி பொங்கி எழுந்தார். ‘நீ எல்லாம் ஒரு பெண்ணா? நீ பரீட்சையில் ஃபெயில் ஆகி இருக்கிறார். உன்னை ஆளாக்கி விடலாம் என்று பார்த்தால், நீ இப்படி என் மானத்தை வாங்கி விட்டாயே, இனிமேல் உன்னை என்னுடன் தங்க வைத்துக் கொள்ள முடியாது, உடனே நீ என் வீட்டை விட்டு வெளியேறு’ என்று உத்தரவிட்டார். 

நிஜத்தில் நடந்தது என்னவென்றால் நிஹாரிகா 90% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார். ஆனால், பேப்பரில் ஏதோ குளறுபடியாகி தேர்வு எண் அச்சாகாமல் இருந்திருக்கிறது. இப்பொது என்ன செய்வது? பெரியம்மாவின் மகள் வீடு அங்கே அருகில் தான் இருந்திருக்கிறது. முதலில் அங்கே சென்றிருக்கிறார். அங்கே அக்கா குழந்தைகள் என்றால் இவருக்குப் ப்ரியம். ஆனால் அப்போது என்ன காரணத்தாலோ பெரியம்மாவின் பெண் நிஹாரிகாவை வீட்டுக்குள் அனுமதிக்கவே இல்லை. உடனடியாக அங்கிருந்து விரட்டப்பட்டார். அங்கிருந்தும் வெளியேற்றப்பட்ட நிஹாரிகாவுக்கு தனக்கென்று யாருமே இல்லையே என்ற கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் ஏதும் செய்ய முடியாத இயலாமையும், வெறுப்பும் வாட்ட...

நேராக ஜூனியர் என் டி ஆர் வீட்டுக்கு கிளம்பி இருக்கிறார். எப்போதோ பேப்பரில் படித்தாராம். ஜூனியர் என் டி ஆர் நன்றாகப் படிக்கக் கூடிய வறுமையில் வாடும் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நல்லது செய்கிறார், உதவுகிறார் என்று. அப்படி நம்பித்தான் காதில் இருந்த துக்கினியூண்டு கம் மலயும் கால் கொலுசையும் விற்றுப் பணம் எடுத்துக் கொண்டு அவரைப் பார்த்து உதவி பெறக் கிளம்பியிருக்கிறார் நிஹாரிகா.

அங்கே அவரது வீட்டு கேட்டைக் கூடத் திறக்கவில்லை ஜூனியர் வீட்டு வாட்ச்மேன்.

'இப்போது அவருக்கு படங்கள் எல்லாம் ஃப்ளாப் ஆகிக் கொண்டே இருப்பதில் அவரே நஷ்டத்தில் இருக்கிறார். உங்களுக்கெல்லாம் உதவ முடியாது அம்மா. அது சும்மா பேப்பரில் போடுவார்கள். அதை நம்பி இப்படியா வருவார்கள்' என்று வாட்ச்மேன் சிரிக்க. உதவி கேட்பது என்று முன் வைத்த காலை பின் வைப்பதா? சரி இனி நேராக சந்திரபாபு நாயுடுவையே பார்த்து விட வேண்டியது தான். அவர் ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு உதவுவார் இல்லையா? என்று வெள்ளந்தியாக யோசித்து நம்பி  நிஹாரிகா சென்ற இடம் சந்திரபாபு நாயுடுவின் வீடு. இங்காவது கேட்டில் தடுத்தார்கள், சந்திரபாபு வீட்டை நெருங்குவதற்கு முன்பாக வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் முன்பாகவே பார்கேட் போட்டிருப்பார்களாம். அங்கேயே தடுத்து நிறுத்திய காவலர்கள். 'இங்கெல்லாம் வரக்கூடாது அம்மா, வீட்டில் வைத்து அவர் சொந்தக் காரர்களை மட்டுமே சந்திப்பார். மற்ற எந்த உதவி வேண்டுமென்றாலும் என் டி ஆர் பவன் எனும் அவரது அலுவலகத்துக்குச் சென்று தான் அவரைச் சந்திக்க நேரம் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அங்கிருந்து என் டி ஆர் பவன் செல்கையில் நிஹாரிகாவின் கண்களில் கண்ணீர் பொங்கிப் பொங்கி வழியத் தொடங்கியது.

இன்னும் எங்கெல்லாம் சென்று விட்டு சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி வர வேண்டியதாக இருக்குமோ?!

எல்லாம் எதற்காக?

மூன்று வேளைச் சோற்றுக்காகவும், இரவு தூங்க ஒரு பாதுகாப்பான இடத்துக்காகவும், அன்பான உறவினர்களுக்காகவும் தானே?!

அது ஏன் தனக்கு கிடைக்காமல் போனது? அம்மா என்ற ஒரே ஒரு ஜீவனை இழந்ததால்... எல்லோருமே தன்னை ஒரு சுமையாகக் கருதத் தொடங்கி விட்டார்களே. இந்த நிலை தன்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறது?

இப்படி யோசித்துக் கொண்டும்... கண்ணீரில் கரைந்தவாறும் ஒரு வழியாக என் டி ஆர் பவன் சென்றடைந்தார். ஆனால், அங்கே அவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் கண்டு தன் குறைகளைச் சொல்லி உதவி கேட்க மேலும் 1 வார காலம் பிடித்தது.

நிஹாரிகா மிக அழகான இளம்பெண். தன்னந்தனியாக ஹைதராபாத் கிளம்பி வந்து தனக்கு யாராவது பிரபலங்கள், நல்லவர்கள் உதவமாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். அப்படியான சூழலில் அவருக்கு மனிதர்களின் மீதான நம்பிக்கைக்கு முதல் வித்திட்டது அந்த ஆட்டோ டிரைவர் தான் என்கிறார் நிஹாரிகா. 
காது தோட்டையும், கொலுசையும் விற்ற பணம் தீர்ந்தபின்னும் அந்த டிரைவர் முகம் சுளிக்காமல் தனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து தன்னுடனே துணையாக வந்து சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்தில் த

ன்னை இறக்கி விட்ட நேர்மை இருக்கிறதே... அது இந்தக்காலத்தில் காண முடியாத ஒரு அருங்குணம் என்கிறார் நிஹாரிகா.

நிஹாரிகாவின் கதையில் இதற்குப் பிறகு தான் திருப்புமுனையே...

சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தனக்கு உதவ வேண்டும் என்று நிஹாரிகா கேட்ட போது, அவர் இந்தப் பெண்ணின் நிலையை எண்ணி வருந்தியதைக் காட்டிலும் நிஹாரிகாவின் குடும்பத்தினரின் உதாசீனத்தை எண்ணித்தான் மிகவும் கோபமடைந்திருக்கிறார். அவர் நிஹாரிகாவிடம்;

‘அம்மா, ஒரு இளம்பெண் தனியாக இப்படிக் கிளம்பி யார் துணையும் இல்லாமல் நகரத்துக்கு வருவது மிகப்பெரிய தவறு, இனிமேல் இப்படி யோசிக்காமல் முடிவெடுக்காதே... உன் அப்பா மற்றும் உறவினர்களை அழைத்து நான் பேசுகிறேன். இனிமேல் உன் மேல் அக்கறையாக அவர்கள் இருக்கும்படியாக நான் அவர்களைக் கண்டிக்கிறேன். ஊருக்குப் போய் நீ கல்லூரியில் சேர்ந்து படிக்கப்பார். அதன் பிறகும் அவர்கள் உன்னை இப்படி கைவிட்டால் நீ பேசாமல் ஹைதராபாத்துக்கே வந்து விடு, இங்கே விஜே வாக வேலை செய்து கொண்டே கல்லூரிப் படிப்பையும் தொடரலாம். அதற்கு நான் உதவுகிறேன்’ என்று வாக்களித்திருக்கிறார்.

அப்போது ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியின் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். முன்னாள் முதல்வர் என்றாலும் சந்திரபாபு நாயுடுவின் எளிமையும், கருணை நிறைந்த பேச்சும் அவர் மீது மிகப்பெரிய மரியாதை வர வைத்தது என்று சொல்லும் நிஹாரிகா. அதன் பிறகு தனது வாழ்வில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போனாலும் வீட்டினரின் கைவிடல் போக்கு மட்டும் எப்போதும் போல அப்படியே தொடர்ந்தது என்பதோடு தனக்கு திருமணம் செய்வித்து எங்காவது கை கழுவி விடும் முயற்சியும் அதிகமிருப்பதாகத் தோன்றவே மீண்டும் வீட்டை விட்டு வெளியேறு ஹைதை வந்திருக்கிறார்.

இப்போது நிஹாரிகாவுக்கு டோலிவிட் இயக்குனர் தேஜாவின் அறிமுகம் கிடைக்கிறது. சொந்தத் தந்தையால் நிராகரிக்கப்பட்டு வேதனைக்குட்படுத்தப் பட்ட இளம்பெண் தாய், தந்தை பாசத்தை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடிந்தது என்றால் அது இயக்குனர் தேஜா மற்றும்  அவரது மனைவியால் மட்டுமே என்கிறார்.  சில காலம் தேஜாவின் அலுவலகத்தில் தான் வாசம். அப்படியே அவரிடம் உதவி இயக்குனராகி சினிமா உலகிலும் காலடி எடுத்து வைத்தார்.

அப்போது அவர் சந்தித்த நபர் தான் கண்ணன் எனும் உதவி இயக்குனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஆரம்பத்தில் இங்கு மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட திரைபடங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு ஆந்திராவில் இயக்குனர் ராஜமெளலியின் டீமில் சேர்ந்திருந்தார். அவருக்கு முதல் பார்வையிலேயே நிஹாரிகாவைப் பிடித்துப் போய்விட்டது.

பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் இருவரும் நிஹாரிகாவின் அக்கா வீட்டில் வைத்து சந்தித்தனர். அப்போது நிஹாரிகா இயக்குனர் ராஜமெளலியின் அறிமுகம் பெற உதவச் சொல்லிக் கேட்டு கண்ணை சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார். வீட்டுக்கு வந்து நிஹாரிகா வீட்டை வைத்திருந்த பாங்கைப் பார்த்து விட்டு; இந்தப் பெண் இத்தனை கஷ்டங்களைப் பட்டுக் கொண்டு வீட்டையும் எத்தனை அழகாக நிர்வகிக்கிறாள். இவளைத் திருமணம் செய்து கொண்டால் தன்னையும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள்; என்று தோன்றியதால் உடனே திருமணத்திற்காகக் கேட்டிருக்கிறார்.

நிஹாரிகாவின் குடும்பத்தினருக்கும் சரி, கண்ணன் குடும்பத்தாருக்கும் சரி இந்தத் திருமணத்தில் கிஞ்சித்தும் சம்மதமில்லை. டோலிவுட்டில் தனக்கென இருக்கும் ராஜமெளலி குடும்பத்தார், இயக்குனர் தேஜா குடும்பத்தார் மற்றும் சில பிரபலங்கள் முன்னிலையில் முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொண்டு நிஹாரிகாவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் கண்ணன்.

கண்ணன் தன் வாழ்க்கையில் வந்த பின்னர் நிஹாரிகாவின் குடும்பப் பாச ஏக்கம் சற்றுத் தணிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ இந்த தம்பதியினருக்கு இப்போது ஆன் ஒன்று, பெண் ஒன்று என  2 குழந்தைகள்.

சினிமா உலகில் தான் எப்போதும் நிலையான வெற்றி என்ற ஒன்றிருப்பதே இல்லையே! நடுவில் கண்ணனுக்கும் தொழிலில் சரிவு நேர்ந்திருக்கிறது. நிஹாரிகாவுக்கும் சீட்டுப் பிடித்ததில் நஷ்டம் ஏற்பட்டு கடனில் மூழ்க வேண்டிய நிலை. அப்போது அவர் ஏதோ பார்ட் டைம் வேலையில் சேர குடும்பம் எப்படியோ ஓடியது. ஆயினும் தனக்கென ஒரு குடும்பம் அமைந்ததில் நிஹாரிகாவுக்கு பரம நிம்மதி. அந்த நிம்மதி தந்த ஊக்கத்தில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸில் கணவரது வழிகாட்டுதலின் படி சேர்வது என முடிவெடுத்தார் நிஹாரிகா. 4 வருட ஃபேஷன் டிஸைனிங் கோர்ஸ் என்பது ஒவ்வொரு நாளும் நிஹாரிகாவிடம் 18 மணி நேர உழைப்பைக் கோரியது. கைக்குழந்தையுடன் நடு இரவு வரை போராடி விட்டு பிறகு தன் கோர்ஸ் வேலைகளையும் முடித்து விடிந்து எழுந்து எதையேனும் சமைத்துச் சாப்பிட்டு என வாழ்க்கை ரொம்ப்ப பிஸியாக ஓடிய வேளை அது.

இதோ இப்போது நிஹாரிகா ஃபேஷன் டிஸைனர் மட்டுமல்ல, வெற்றிகரமான காஸ்ட்யூம் டிசைனரும் கூட.

வாழ்வின் முதல்பாதி முழுக்க நிராகரிப்பையும், ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்து வந்த நிஹாரிகாவுக்கு வாழ்வின் மிகப்பெரிய கிஃப்ட் என்றால் அது அவரது கணவர் கண்ணனும், குழந்தைகளும் மட்டும் தான் என்கிறார்.

இதைவிட பெரிய கொடுப்பினை வேறென்ன வேண்டும்?

இப்போது நிஹாரிகா ஒரு நல்ல மனைவி, குழந்தைகளுக்கு நல்ல தாய். ஒரு டிஸைனராக தான் எத்தனை சம்பாதித்தாலும் தன் குழந்தைகள் தன்னிடம் வந்து சொல்லும்... “ம்மா யூ ஆர் சச் அ க்ரேட் மதர்’ என்று எங்களுடைய நண்பர்கள் சொல்கிறார்கள்’ எனச் சொல்லும் போதெல்லாம் அதைத் தாண்டிய சந்தோஷங்கள் எதுவும் எங்கள் வாழ்வில் முதலிடம் பெற முடியாது என்கிறார்.

சரி தான்... பிறந்து மூன்று மாதங்களிம் தன் தாயை இழந்த வேதனையை... தான் ஒரு தாயான மறுநொடியில் மறந்து விட்டார் நிஹாரிகா.

தனக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன. இனி வருங்காலத்தில் இருக்கவும் போகின்றன. அதற்காக அசந்து போய் உட்கார்ந்து விட்டால் வாழ்வு முன் நகர்வது எப்படி?

எனவே எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க் வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்கிறார்.

வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும் என்று உட்கார்ந்திருக்க தேவை இல்லை. நாமே நமக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அந்த பாதையில் நடைபோடப் பழக வேண்டுமென்று சொல்லும் நிஹாரிகா நிச்சயம் நம் சமூகத்தின் பிற பெண்களுக்கெல்லாம் மிகச்சிறந்த ரோல்மாடலே! 

வெற்றி பெற்ற பெண்மணியாக நிஹாரிகாவின் வார்த்தைகள் பொன்னேடுகளில் பொரிக்கத் தக்கவை. 

‘ஒரு பொழுதில் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? யாராவது வேலை தருவார்களா? என்று நான் இந்த ஹைதராபாத் சாலைகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். இன்று நான் 25 பேருக்கு வேலை தரும் அளவுக்கு முன்னேறி இருப்பதே எனது சாதனை. இது அப்படியே தேங்கிப் போக விட்டுவிட மாட்டேன். மேலும், மேலும் என ஓடிக் கொண்டே இருப்பேன்.’ என்று மன உறுதியுடன் சொல்லும் நிஹாரிகாவுக்கு நாமும் ஏதாவது சொல்ல வேண்டுமில்லையா?

ஹாட்ஸ் ஆஃப் டு யு நிஹாரிகா!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com