சூப்பர்! மரங்களுக்கும் இப்போ ஆம்புலன்ஸ் சர்வீஸ் வந்தாச்சு!

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்களால் ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ எனும் புதுமையான திட்டம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனித
சூப்பர்! மரங்களுக்கும் இப்போ ஆம்புலன்ஸ் சர்வீஸ் வந்தாச்சு!


சர்வதேச உயிரியல் பல்வகைமை தினமான நேற்று முன் தினம் புதன்கிழமை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்களால் ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ எனும் புதுமையான திட்டம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனித ஆபத்துக்களால் பாதிக்கப்பட்ட மரங்களை மீட்டு நகரை பசுமை மாறாமல் காப்பதே. 

ஏனெனில், கடந்த ஆண்டுகளில் மரங்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் விதத்தில் வார்தா மற்றும் கஜா புயல்சீற்றங்களின் போது இயற்கையின் கோரக் கரங்களால் எண்ணற்ற மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. இதனால் தமிழகத்தின் பெரும்பகுதி தனது பசுமையை இழந்தது. புயலால் பாதிப்புக்கு உள்ளான மரங்களை மீட்க நம்மிடம் அப்போது எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ இல்லாதிருந்த காரணத்தால் வார்தா புயலின் போது சென்னை நகரம் தனது ஒட்டுமொத்த மரங்களை இழந்து தவித்தது. மீண்டும் அப்படியொரு அபாயகரமான சூழலுக்கு தமிழகம் இடமளித்து விடக்கூடாது. எனவே, வேரோடு சாய்ந்த மரங்களையும் கூட ட்ரீ ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு முதலுதவி அளித்து வேறொரு இடத்தில் நிர்மாணித்தால் மரங்கள் பெருமளவில் உயிரிழக்கும் அபாயத்தை தடுக்கலாம் என்பதே இத்திட்டத்தை முன்மொழிந்துள்ள SASA அமைப்பின் நோக்கம்.

சென்னை சாலைகளில் தற்போது 33 மனிதர்களுக்கு ஒரு மரம் என்கிற விகிதாச்சாரத்தில் மரங்களின் எண்ணிக்கை குறுகி விட்டது. நிலமை இப்படியே சென்றால் பிறகு 100 மனிதர்களுக்கு ஒரு மரம், 1000 மனிதர்களுக்கு ஒரு  மரம் எனும் விகிதத்தில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போய் இறுதியில் மரங்களற்ற பாலைவனமாகச் சென்னை மாறவும் வாய்ப்பிருக்கிறது. 

அந்தநிலை வராமல் தடுக்கத்தான் இந்தியாவின் பசுமை மனிதர் டாக்டர் அப்துல் கனி இப்படி ஒரு அருமையான திட்டத்தை SASA அமைப்பின் துணையுடன் முன்மொழிந்திருக்கிறார். இது அவரது மூளையில் உதித்த திட்டம் தான். அவரது வழிகாட்டுதலின் படி இந்த ‘ட்ரீ ஆம்புலன்ஸில்’ தாவரவியல் நிபுணர் ஒருவர் தோட்டப்பணிகளில் தேர்ந்த உதவியாளருடன் பயணிப்பார். அவர்களுடன் தோட்டப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தண்ணீர், உயிர் உரம் மற்றும் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதே ஆம்புலன்ஸில் இடம்பெறும் என SASA அமைப்பின் நிர்வாகி சுரேஷ் கிருஷ்ண ஜாதவ் தெரிவித்தார்.

மரங்களுக்கான முதலுதவிப் பெட்டி, விதை வங்கி, விதைப்பந்து, வேரோடு விழுந்த மரங்களை மீண்டும் வேறிடத்தில் நட்டு வளர்த்து நிர்மாணிக்கத் தேவையான உபகரணங்கள், நகரின் பல்வேறு இடங்களிலும் மரம் நடுவதற்குத் தேவையான மரக்கன்றுகள், மண்வளம் குன்றிய பகுதிகளில் வளர இயலாமல் தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணற்ற மரங்களை மீட்டு வேறிடங்களில் நடத் தேவையான வசதிகள், நடப்பட்ட மரங்கள், நீக்கப்பட்ட மரங்கள் போன்றவை குறித்த ஒரு துல்லியமான சர்வே என ட்ரீ ஆம்புலன்ஸ் திட்டத்தின் கவனக் குவிப்பு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

நாட்டில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உயிர்காக்க ஆம்புலன்ஸ் சேவை இருக்கும் போது ஒட்டுமொத்த மனித உயிர்களும் செழிப்புடனும், ஆரோக்யத்துடனும் வாழத் தேவையான பல விஷயங்களைத் தரும் கொடை வள்ளல்களான மரங்களை உயிருடன் மீட்பதற்கு மட்டும் ஆம்புலன்ஸ் சேவை ஏன் இருக்கக்கூடாது? மரங்களுக்கும் தேவை ஆம்புலன்ஸ்கள் எனும் தார்மீக கோபத்தில் உருவானது தான் ட்ரீ ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம். கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கைச் சீற்றத்தால் சென்னை இழந்த மரங்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேலானது. இழந்த மரங்களில் ஒன்றைக்கூட இன்றும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை. அவ்விதமான இக்கட்டான நேரங்களில் இந்த ஆம்புலன்ஸ் நிச்சயம் உதவிகரமானதாக இருக்கும். மரங்களைக் காக்க நினைப்பவர்கள் எங்களது ட்ரீ ஆம்புலன்ஸ் ஹெல்ப் லைன் நம்பருக்கு அழைத்து தகவல் அளித்தால் போதும், எங்களது அமைப்பினர் நேரில் வந்து இலவசமாக மரங்களை மீட்டு தேவையான உதவிகளைச் செய்து முடிப்பார்கள். என்கிறார் பசுமை மனிதர் அப்துல் கனி.

இந்தத் திட்டத்தை நாங்கள் முதலாவதாகத் துவக்கி விட்டோமே தவிர, இதற்கு நாங்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. இது போன்ற நல்ல திட்டங்களுக்கு மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் துணையும் தேவை. சமூக சேவை அமைப்புகள் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்க வேண்டும். தற்போது சென்னையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் கூடிய விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும் அதற்கு தன்னார்வத் தொண்டர்களின் வலிமை வாய்ந்த உதவி தேவை எனும் சுரேஷ் கிருஷ்ண ஜாதவ், ட்ரீ ஆம்புலன்ஸின் ஹெல்ப் லைன் எண்ணையும் வெளியிட்டார்.

ட்ரீ ஆம்புலன்ஸ் ஹெல்ப் லைன் எண்: 9941006786

அத்துடன் சூழலியலில் விருப்பமுள்ளவர்கள் www.treeambulance.org எனும் இணையதள முகவரியில் தங்களைப் பதிவு செய்து கொண்டு ட்ரீ ஆம்புலன்ஸ் வாலண்டியர்களாகவும் செயல்படலாம். என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com