தலையங்கம்

இது மட்டும்தான் தீர்வு!

ஆசிரியர்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மாதிரி விவரங்கள் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பி இருக்கிறது. ஏறத்தாழ 40 லட்சம் பேர் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டு இருக்கிறார்கள். விடுபட்ட 40 லட்சம் பேரில் தங்களது குடியுரிமைக்கான ஆவணங்களை அளிப்பவர்கள் தேசிய குடியுரிமை பதிவேட்டில் சேர்க்கப்படுவார்கள் என்றாலும்கூட அந்த எண்ணிக்கை கணிசமாக இருக்காது என்பது உறுதி. 
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், 19-ஆம் நூற்றாண்டில் சோட்டா நாக்பூர், பிகார் பகுதிகளில் இருந்தும் வங்கத்தில் இருந்தும் முஸ்லிம் தோட்டத் தொழிலாளர்கள் அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டனர்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் கிழக்கு, மேற்கு வங்கத்தில் இருந்து அஸ்ஸாமுக்கு குடியேற்றம் தொடர்ந்தது. அஸ்ஸாம் மாநிலத்தின் முதலாவது முதல்வரான கோபிநாத் போர்டோலாய் சுதந்திரத்துக்கு முன்பே இந்தப் பிரச்னையை எழுப்பியிருக்கிறார். 
கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்து வங்க தேசம் உருவானபோது பூதாகரமாக வெடித்தது. லட்சக்கணக்கில் வங்க தேச அகதிகள் அஸ்ஸாமுக்குள் நுழைய முற்பட்டதை மனிதாபிமான அடிப்படையில் தடுக்க இயலவில்லை. அன்றைய மத்திய - மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியும் வங்க தேச அகதிகளின் சட்ட விரோதக் குடியேற்றம் குறித்துப் பாராமுகமாக இருந்தது என்பது உண்மை. அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக மாற்றப்பட்டனர் என்பதையும் மறுக்க இயலாது. 
1951-இல் முதல்முதலாக, தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாமில் தயாரிக்கப்பட்டது. அதன்படி இந்திய குடிமக்களையும் சட்ட விரோதமாக பிரிவினையின்போது நுழைந்த கிழக்கு பாகிஸ்தானியரையும் அடையாளம் காண முற்பட்டது. அதற்கு பின்னும்கூட கிழக்கு பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 1951 முதல் 61-க்கும் இடையேயான பத்து ஆண்டுகளில் அஸ்ஸாமின் மக்கள்தொகை 36% அதிகரித்தது என்றால் தேசிய மக்கள்தொகை அதிகரிப்பு வெறும் 25% மட்டுமே. 1961-71 இடைவெளியில் அஸ்ஸாமின் மக்கள்தொகை 35% அதிகரித்தது. 1971-இல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பிறகு, சட்ட விரோத குடியேற்றம் கடுமையாக அதிகரித்து வாக்காளர்களின் எண்ணிக்கையும் 50% அதிகரித்தபோது, அஸ்ஸாமியர்கள் மத்தியில் அது பீதியை எழுப்பியது. 
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் குறைந்தது 50,000 போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், சட்ட விரோதமாக குடியேறியவர்களில் பலர் வாக்காளர்களாக மாறியிருப்பதும் அஸ்ஸாமியர்களை கொதித்தெழ வைத்தன. அதன் விளைவுதான் 1979-இல் அஸ்ஸாமிய மாணவர்கள் இயக்கம் போராட்டத்தில் இறங்கியதும், சுதந்திர இந்தியாவின் முதலாவது மிகப் பெரிய அரசியல் கலப்பில்லாத மக்கள் இயக்கம் உருவானது. 
1985-இல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு, இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் மாணவர் இயக்கத்தினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் வாக்குறுதியின் அடிப்படையில் மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது என்று முடிவானது. 2015-இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நீதிமன்றக் கண்காணிப்பின் அடிப்படையில் இப்போது மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதான் பிரச்னையின் பின்னணி. 
உலகெங்கிலும் குடியேற்றம் ஒரு பிரச்னையாக மாறியிருக்கிறது. உலகளாவிய அளவில் எல்லா நாடுகளிலும் புலம்பெயர்ந்து குடியேறியவர்களுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. காஷ்மீரத்திலும் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்தியாவின் ஏனையபகுதியில் உள்ளவர்கள் குடியேறுவதற்கு தடையிருப்பது, அக்குடியேற்றத்தால் தங்களது பெரும்பான்மை பாதிக்கப்படும் என்கிற அப்பகுதி மக்களின் அச்சத்தின் காரணமாக ஏற்பட்டதுதான். அஸ்ஸாமிலும் பிரச்னை அதுதான். 
40 லட்சம் பேரின் வருங்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர்கள் மார்ச் 24, 1971-க்கு முன்னால் இருந்து அஸ்ஸாமில் இருப்பவர்கள் என்பதை நிரூபித்தாக வேண்டும். அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். 40 வருட ஆவணங்களை எத்தனை பேரால் தாக்கல் செய்ய முடியும் என்கிற கேள்விக்கு யார் விடையளிப்பது? அப்படித் தாக்கல் செய்ய முடியாதவர்களை என்ன செய்துவிட முடியும்? அவர்களை மீண்டும் வங்க தேசத்துக்கு திருப்பியனுப்ப முடியாது. அதேநேரத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தின் அதிகாரபூர்வ குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமியர்கள் சிறுபான்மையினராக்கப்படுவதும் நியாயமல்ல.
இந்தப் பிரச்னைக்கு ஒரேயொரு தீர்வுதான் உண்டு. பல வெளிநாடுகளில் வழங்குவதுபோல, தங்கி வேலை பார்ப்பதற்கான உரிமம்' (Work permit)  வழங்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்ட வங்கதேச வந்தேறிகள் தொடர்ந்து அஸ்ஸாமில் வாழ்வதற்கு வழிகோலப்பட வேண்டும். அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதில் தவறில்லை. இந்தியாவில் பிறக்கும் அவர்களது குழந்தைகள் குடியுரிமை பெற வழிகோல வேண்டும். இதுமட்டும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியும். 
40 லட்சம் பேரை நாடு கடத்தியதாக உலக சரித்திரத்தில் இதுவரை இல்லை. வந்தோரை வாழ வைக்கும் பாரத பூமி அந்தப் பாவத்தைச் சுமக்கலாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT