வாய்ப்பூட்டுச் சட்டம்!

புதன்கிழமை அன்று

புதன்கிழமை அன்று மகாராஷ்டிர மாநிலம் பீமா - கோரேகான் பகுதியில் நடந்த வன்முறையில் தொடர்பிருப்பதாகக் கூறி மகாராஷ்டிர காவல்துறையினர் இடதுசாரி ஆதரவாளர் ஐந்து பேரை கைது செய்தனர். தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மகாராஷ்டிர காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்
கிழமை திடீர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஹைதராபாதில் எழுத்தாளர் வரவர ராவ், மும்பையில் வெர்னோன் கோன்சல்வேஸ், அருண் பெரைரா, சத்தீஸ்கரில் வழக்குரைஞர் சுதா பரத்வாஜ், தில்லியில் சமூக ஆர்வலர் கெளதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்றும், அரசை கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் மாவோயிஸ்டுகளுக்கு மறைமுக உதவிகளை செய்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. 
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் புணேயை அடுத்த பீமா கோரேரான் பகுதியில் நடந்த ஜாதிக் கலவரத்தின் 200-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் முந்தைய நாள் ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது காவல்துறையின் குற்றச்சாட்டு. டிசம்பர் 31-ஆம் தேதி இடது சாரிகள் மற்றும் தலித் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்கர் பரிஷத் கூட்டம் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடைபெற்றது. அப்போது அதில் எந்தத் தவறையும் காவல்துறை காணவில்லை. புலனாய்வுத் துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தேசிய அளவிலான கைதுகள் நடைபெற்றனவா என்றால் அதுவும் இல்லை. யாரோ ஒரு தனிநபரின் புகாரின் அடிப்படையில் இந்தக் கைதுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதுதான் காவல்துறையின் செயல்பாடு குறித்து ஐயப்பாட்டை எழுப்புகிறது.
கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு காவல்துறையின் நடவடிக்கையின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. "மாற்றுக்கருத்து என்பது ஜனநாயகத்தில் பிரஷர் குக்கரின் பாதுகாப்பு வால்வைப் போன்றது. மாற்றுக்கருத்தையும் எதிர்ப்புக்குரலையும் அனுமதிக்காவிட்டால் ஜனநாயகம் என்கிற பிரஷர் குக்கர் வெடித்துவிடக்கூடும் ' என்கிற நீதிபதி சந்திரசூட்டின் கருத்து மத்திய - மாநில அரசுகளுக்குத் தரப்பட்டிருக்கும் அறிவுரை. 
புணேவில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்திற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து காவல்துறையினரிடம் தெளிவான விளக்கம் எதுவும் இல்லை. ராஜீவ் காந்தியின் மீதான படுகொலை தாக்குதலைப் போன்று பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் மீதும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான வலிமையான ஆதாரம் எதுவும் காவல்துறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கணினி ஒன்றில் காணப்பட்ட கடிதம்தான் இடதுசாரி ஆர்வலர்களின் வீடுகளை சோதனையிட்டதற்கும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் காரணம் என்பது 
ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து பேருமே நன்றாகப் படித்தவர்கள் எனும் நிலையில், கணினி மூலம் பிரதமர் படுகொலைச் சதியைப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் விவரமில்லாதவர்கள் அல்ல.
சமூக, மனித உரிமை ஆர்வலர்களும் அறிவி ஜீவிகளும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூகவிரோதச் செயல்களிலும், ஆட்சியைக் கவிழுக்கவும், அரசுக்கு எதிரான சதியில் இறங்கவும் முற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை  வழக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதே நேரத்தில் ஜனநாயகம் என்பது கருத்து வேறுபாட்டையும் மக்கள் நலனுக்காகப் போராடுவதையும் தடுப்பதாகவோ, உரிமைக்கான குரலுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதாகவோ இருக்க முடியாது.
தனி நபருக்கோ அரசுக்கோ எதிரான வன்முறைச் செயல்களை எந்த ஜனநாயகமும் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் அது மாவோயிஸ்டு ஆனாலும், ஹிந்துத்துவமானாலும், இஸ்லாமியமானாலும் அவரவர் கொள்கை ரீதியான கருத்துகளை முன்வைக்கவோ, அது குறித்துப் பேசவோ ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. கருத்துகள், கருத்துக்களால் எதிர்கொள்ளப்பட வேண்டுமே தவிர, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்குமுறையின் மூலமாகவோ அல்லது வற்புறுத்தல் மூலமாகவோ எதிர்க்கருத்தை முடக்கிவிட நினைப்பது ஜனநாயகப் பண்பாக இருக்காது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் மாவோயிஸ்டுகளுக்காக நிதி திரட்டினார்கள் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றும்,  சட்டவிரோதமான குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உண்டு.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டு கடுமையாக்கப்பட்ட சட்டங்களில் ஒன்று. 2007-இல் இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் அருண் பெரைராவும், வெர்னோன் கோன்சல்வேஸூம், 2011-இல் கெளதம் நவ்லகாவும், அதற்கு முன்னால் கவிஞர் வரவர ராவும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இதே சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இப்போது நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அதே பாதையில் பயணிக்க முற்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தில் இதுபோன்ற தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்ய வழிகோலும் சட்டங்கள் ஏன் தொடர வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com