முள் கிரீடம்!

உர்ஜித் படேலின் பதவி விலகலைத் தொடர்ந்து

உர்ஜித் படேலின் பதவி விலகலைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் பொருளாதாரத் துறை செயலரான 61 வயது சக்திகாந்த தாஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவது புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னால் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வெற்றிகரமாக செயலாற்றியிருக்கிறார்கள். அதனால், இந்தியாவின் 25-ஆவது ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் சக்திகாந்த தாஸின் செயல்பாடுகளை அவரது மூன்று ஆண்டுப் பதவிக் காலத்துக்குப் பிறகு எடை போடுவதுதான் நியாயமாக இருக்கும். 

1980-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தமிழக அரசில் தொடங்கிய அவரது பயணம், மத்திய - மாநில அரசுகளில் 37 ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகு உச்சத்தைத்  தொட்டிருக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் சக்திகாந்த தாஸ், மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிபுணர்களான ரகுராம் ராஜனும், உர்ஜித் படேலும் பதவி வகித்திருப்பதால், ஆட்சிப் பணி அதிகாரியான சக்திகாந்த தாஸின் செயல்பாடுகள் நிதி நிர்வாக, பொருளாதார நோக்கர்களால் கூர்ந்து கவனிக்கப்படும் என்பதில் ஐயப்பாடு இல்லை. 

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸின் பின்னணியையும் அவரது செயல்பாட்டு முறைகளையும் கூர்ந்து கவனித்தால், எந்தவிதமான சிக்கல்களையும் அவரால் பதற்றப்படாமல் நிதானமாகக் கையாள முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

தமிழகத்தின் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை செயலராகவும் தொழில் துறை செயலராகவும் சக்திகாந்த தாஸ் பணியாற்றியபோது அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் என்று எத்தனையோ முடிவுகளைப் பட்டியலிட முடியும். 2008-இல் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறையின் துணைச் செயலராக அவர் பதவியேற்றது முதல், 2017-இல் பதவி ஓய்வு பெற்றது வரை வருவாய், பொருளாதாரத் துறை என்று நிதியமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டிருக்கிறார். 

ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 2008-இல் துணைச் செயலராக மத்திய அரசுக்கு அழைத்து வரப்பட்டார் சக்திகாந்த தாஸ். பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரான பிறகும்கூட அவருடன் பணியாற்றினார் என்பதும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் துணைச் செயலராகவும் இணைச் செயலராகவும் நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதில் பங்களித்திருக்கிறார் என்பதும், அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்பதற்கான தகுதி படைத்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, அருண் ஜேட்லி ஆகிய மூன்று நிதியமைச்சர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் என்பது அவரால் எல்லாவிதமான அரசியல், நிர்வாக சூழலிலும் தாக்குப் பிடிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. 

2016 நவம்பர் 8-ஆம் தேதி நரேந்திர மோடி அரசு அதிக மதிப்புச் செலாவணிகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவற்றை செல்லாததாக்கி அறிவித்தபோது, பொருளாதாரத் துறை செயலராக இருந்தவர் சக்திகாந்த தாஸ். மோடி அரசின் அதிர்ச்சி தரும் அந்த அறிவிப்பை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல், புதிய நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்யும் மிகவும் சிக்கலான நடைமுறையையும் கையாள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

ஒட்டுமொத்த பொருளாதாரமே நிலைகுலைந்தாற் போன்ற குழப்பமான அந்தச் சூழலை அவர் பதற்றமே இல்லாமல் கையாண்ட முறைதான் ஓரளவுக்கு அரசின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியது என்று கூறலாம். அதற்கான வெகுமதிதான் சக்திகாந்த தாஸூக்கு வழங்கப்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி என்கிற விமர்சனத்துக்கும் அதுதான் காரணம்.

மத்திய நிதியமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் நிலையில், அரசின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்ட ஒருவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் ஒரேயடியாக அரசின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டுவிடவும் முடியாது. 

ரிசர்வ் வங்கியின் இருப்புத் தொகை, வங்கிகள் வரைமுறையில்லாமல் கடன் வழங்குதல், வளர்ச்சிக்கும் விலைவாசிக்கும் இடையேயான சமநிலை, வங்கிகளின் வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ரிசர்வ் வங்கியின் கோணத்தில் அணுக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படும். மத்திய அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையையும் சுதந்திரத்தையும் இழக்காமல் சுமுகமான முறையில் பிரச்னைகளுக்கு விடை காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவருக்கு முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர்களாகப் பணியாற்றிய எஸ். வெங்கடரமணன், ஒய்.வி. ரெட்டி, டி. சுப்பா ராவ் ஆகியோரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக இருந்தவர்கள்தான். ரிசர்வ் வங்கி ஆளுநரான பிறகு அவர்கள் சுதந்திரமான செயல்பாட்டை மேற்கொண்டனர் என்பது சக்திகாந்த தாஸூக்கு தெரியாமல் இருக்காது. மற்றவர்கள் முகம் கோணாமல், தான் நினைத்ததை சாதிக்கும் திறமைசாலி இந்த ஒடிஸாக்காரர் என்பதால், எதிர்தரப்பையும் தனது "காந்த' சக்தியால் எதிர்கொள்வது அவருக்கு சிரமமாக இருக்காது என்றாலும், அவருக்கு சூட்டப்பட்டிருப்பது மலர் கிரீடம் அல்ல, முள் கிரீடம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com