கமல்நாத்தா பேசுவது..?

விபரீதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றிருக்கும் கமல்நாத்.

விபரீதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றிருக்கும் கமல்நாத். கடந்த திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அவரது அறிவிப்பு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது. வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 70% ஒதுக்கீடு செய்யாத தொழிற்சாலைகளுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ மத்தியப் பிரதேசத்தில் எந்தவித அரசு சலுகையும் வழங்கப்படாது என்கிற அவரது அறிவிப்பு. வேடிக்கை என்னவென்றால், முதல்வர் கமல்நாத்தே மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதுதான்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்த கமல்நாத், படித்ததும் வாழ்ந்ததும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில். 1980-இல் ஏழாவது மக்களவைக்கு மத்தியப் பிரதேசத்திலுள்ள சிந்த்துவாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், கடந்த ஒன்பது முறையாகத் தொடர்ந்து அந்தத் தொகுதியின் உறுப்பினராக மக்களவையில் தொடர்கிறார் கமல்நாத். இவர் வெளிமாநிலத்தவர் என்பதால் சிந்த்துவாரா தொகுதியினர் இவரை புறக்கணித்துவிடவில்லை என்பதை அவர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
கமல்நாத் மட்டுமல்ல, இதற்கு முன்னால் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானியும் உள்ளூர் வாசிகளுக்கு 80% வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, அது சர்ச்சைக்குள்ளானது. அதற்கு முன்னால் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தும், மகாராஷ்டிராவில் சிவ சேனையும் அதிலிருந்து பிரிந்த நவநிர்மாண் சேனையும் இதேபோல வெளிமாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்தவர்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததுண்டு. 
உலகில் உள்ளூர் இடப்பெயர்ச்சியில் 80 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது. 2017 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்ச்சி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 30%-க்கும் அதிகமானோர் சொந்த மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்று இன்னொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அப்படி இடம் பெயர்ந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், திருமணம் காரணமாக இடம் பெயர்ந்தவர்களே தவிர, வேலைக்காக இடம் பெயர்ந்தவர்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 
வேலை தேடி பிற மாநிலங்களுக்குச் செல்பவர்களில் அதிகமானோர் உத்திரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தவர்கள். வெளிமாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பை நாடும் மாநிலங்கள் தில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம், கேரளம் ஆகியவை. சொல்லப்போனால் பெரும்பாலான நகரங்கள் வெளிமாநில தொழிலாளர்களின் உழைப்பால்தான் இயங்குகின்றன. குறிப்பாக, கட்டுமானத் தொழிலில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் போனால் வேலை பார்ப்பதற்கே ஆள் இல்லாத நிலைமை ஏற்படலாம்.
பஞ்சாபிலும், ஹரியாணாவிலும் உள்ள தோட்டங்களும், பண்ணைகளும், விவசாய நிலங்களும் பெரிய அளவில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துமே வடமாநிலங்களிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் வரும் தொழிலாளர்களை நம்பித்தான் இயங்கி வருகின்றன. 
முதல்வர்கள் கமல்நாத்தும், ரூபானியும் நியாயமாகக் கவலைப்பட வேண்டியது, வெளிமாநிலத்தவர்கள் வேலை தேடி வருவது குறித்தல்ல. அப்படி வேலை தேடி வரும் வெளிமாநிலத்தவர்களின் நலனையும் உரிமையையும் பாதுகாப்பது குறித்துத்தான் கவலைப்பட்டிருக்க வேண்டும். 
சர்வதேச அளவிலும்கூட, வளர்ச்சியின் அடிப்படைக் காரணம் புலம்பெயர்தல் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா என்பது புலம்பெயர்ந்தவர்களின் நாடு. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களை எல்லாம் குடிமக்களாக அந்த நாடு ஏற்றுக்கொண்டதுதான். வேலைக்காக இடம் பெயர்தலையும், புலம் பெயர்தலையும் தடுக்க முற்படுவது என்பது வளர்ச்சிக்கு விடை கொடுப்பதாக மாறிவிடும். 
வெளிநாடுகளில் வேலை தேடி இடம் பெயர்வர்களைவிட இந்தியாவிற்குள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். பிற மாநிலங்களில் வேலை தேடிச் செல்பவர்கள் அங்கே நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லை. அதனால் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் தடை படுகின்றன. எந்தவிதமான தொழிலாளர் சட்டப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லாத நிலை காணப்படுகிறது. 
பெண்களும் குழந்தைகளும்தான் வேலை தேடி இடம் பெயர்பவர்களில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள். அவர்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவதுடன், முறையான ஊதியம் வழங்கப்படாமல் சுரண்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உறைவிட வசதியோ, மருத்துவ வசதியோ தரப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் விடப்படுகிறார்கள்.
இந்தியாவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் இல்லாமல் போனால் பல நகரங்கள் ஸ்தம்பித்து விடும் என்பதையும், வளர்ச்சிப் பணிகள் முடங்கிவிடும் என்பதையும், விவசாயம் உள்பட அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படும் என்பதையும் மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டிய தருணம் இது. வேலை தேடி வரும் மாநிலத்தில் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதால்தான் கமல்நாத் போன்றவர்கள் மாநில உணர்வைத் தூண்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இது குறித்து இந்தியா சிந்தித்து விடை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com