அரசின் அவசர கவனத்துக்கு...

ஒருபுறம் பெரிய அளவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதும், உயர்ந்த பதவிகளை அவர்கள் வகிப்பதும் பெருமிதத்தை ஏற்படுத்தினாலும்கூட,

ஒருபுறம் பெரிய அளவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதும், உயர்ந்த பதவிகளை அவர்கள் வகிப்பதும் பெருமிதத்தை ஏற்படுத்தினாலும்கூட, சமுதாயத்தில் மகளிர் பாதுகாப்பு என்பது இந்தியாவில் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. வேலை பார்க்கும் மகளிர் நலன் குறித்தும், வெளியூர்களில் வேலைக்குச் செல்லும் மகளிரின் உறைவிடப் பாதுகாப்பு குறித்தும் போதுமான கவனம் செலுத்தப்படாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. 
கடந்த ஜூலை மாதம் கோவை பீளமேடிலுள்ள மகளிர் விடுதி ஒன்றில் வேலை பார்க்கும் ஐந்து பெண்கள் அந்த விடுதியின் கண்காணிப்பாளரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான நிகழ்வு அதிர்ச்சி அளித்தது. இந்த மாதத்தில் சென்னையில் நடந்த நிகழ்வுகள் அதைவிடப் பேரதிர்ச்சியைத் தருகின்றன. ஆதம்பாக்கத்தில் மகளிர் விடுதி நடத்தும் ஒருவர், அங்கு தங்கியிருக்கும் பெண்களின் அறைக்குள் கேமராக்களைப் பொருத்தியிருந்ததும், மாதவரத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் கண்காணிப்பாளரின் பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் ஒரு பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டதும் மக்களின் கவனத்தைப் போதுமான அளவு ஈர்க்காமல் போனது வியப்பளிக்கிறது.
தமிழக அரசின் சமூக நலத்துறை ஓரளவுக்கு இந்தப் பிரச்னை குறித்து விழித்துக் கொண்டிருக்கிறது. சமூக நலத்துறை அதிகாரிகள், மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதனைக் கடந்த வாரம் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் செயல்படும் மகளிர் விடுதிகள் குறித்தும், கட்டண விருந்தினர் வசதி அளிப்பவர்கள் குறித்தும் தங்களுக்குத் தகவல் வழங்கும்படி காவல்துறையிடம் கோரியிருக்கிறது சமூக நலத்துறை. இந்த மாத இறுதிக்குள் எல்லா மகளிர் விடுதிகளும், கட்டண விருந்தினர் வசதி வழங்குபவர்களும் சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், வீடுகள் ஒழுங்காற்றுச் சட்டம் 2014 சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அதன்படி, மகளிர் விடுதி என்பது பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ; சேர்ந்தோ, தனியாகவோ; உணவு வசதியுடனோ, இல்லாமலோ தங்குவதற்கு இடம் வழங்கும் கட்டடம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வீடுகளில் கட்டண உறைவிடம் வழங்குவது குறித்து எந்தவித விளக்கமும் தரப்படவில்லை. அதேபோல, வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதிகளில் எத்தனை பேர் தங்கலாம் என்பது குறித்தும் எந்தவிதமான வரைமுறையும் குறிப்பிடப்படவில்லை.
தமிழகம் முழுவதும் வேலை பார்க்கும் மகளிர் விடுதிகள் புற்றீசல் போல உருவாகி வருகின்றன. வேலை பார்க்கும் மகளிர் விடுதி என்று அறிவிக்காமல், அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அதில் வெளியூர்களிலிருந்து வேலைக்கு வரும் பெண்கள் கட்டண விருந்தினர்கள் என்கிற அடிப்படையில் உறைவிடம் வழங்கப்படுவதும் பரவலாகவே காணப்படுகின்றன. குடும்பத்தினர் வேலை பார்க்கும் மகளிரை தங்களது வீட்டில் விருந்தினராகத் தங்க வைக்கும் முறையைத் தவறாகப் பயன்படுத்தி, வேலை பார்க்கும் மகளிர் விடுதியைக் கட்டண விருந்தாளிகள் என்கிற பெயரில் பலர் நடத்த முற்பட்டிருப்பது விபரீதங்களுக்கு வழிகோலியிருக்கிறது.
தமிழ்நாடு மகளிர், குழந்தைகள் விடுதிகள், வீடுகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி, வேலை பார்க்கும் மகளிர் விடுதிகளாக வீடுகள் மாற்றப்படுவது குறித்த தெளிவான விளக்கம் இல்லாமல் இருப்பதுதான், இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். மூன்று மாடிக் குடியிருப்புகளை மொத்த வாடகைக்கு எடுத்து அவற்றை கட்டண விருந்தாளிகள் என்கிற பெயரில் வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதிகளாக நடத்துகிறார்கள். இவற்றுக்கு கட்டடத்தின் பாதுகாப்பு, தீயணைப்பு துறையினரின் ஒப்புதல், கழிப்பறை வசதிகள் குறித்த எந்தவித அனுமதியும் இருப்பதில்லை. 
விடுதிகளில் தங்கும் ஒவ்வோரு நபருக்கும் குறைந்தது 125 ச.மீ. இடம் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை பின்பற்றப்படுவதில்லை. தனித்தனிப் படுக்கைகள், தனித்தனி கட்டில்கள் வழங்கப்படாமல் பல அடுக்குக் கட்டில்கள் மகளிருக்கு ஒதுக்கப்படுகின்றன. தனியான உணவு உண்ணும் இடம், பொழுதுபோக்கு அறை, பாதுகாப்புக்குக் காவலர்கள் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இதுபோன்ற முறையற்ற கட்டண விருந்தினர் இடங்களில் இருப்பதில்லை. 
வேலை பார்க்கும் மகளிருக்காக செயல்படும் தங்கும் விடுதிகள் சட்டப்படி முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் விடுதிகளில் மேலாளர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் விடுதியில் இருப்பது அவசியம். அதேநேரத்தில், அறைகளில் தங்கும் பெண்களின் தன்மறைப்பு நிலைக்கு பாதுகாப்பும் வேண்டும். பெரும்பாலான விடுதிகளில் இவை எதுவுமே பின்பற்றப்படுவதில்லை. 
இந்த மாத இறுதிக்குள் அனைத்து வேலை பார்க்கும் மகளிர் விடுதிகளும், கட்டண விருந்தினர் வசதி அளிக்கும் வீடுகளும் சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பை யாரும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. காவல் துறையும் சமூகநலத் துறையும் இந்தப் பிரச்னையில் முனைப்புக் காட்டினால் பல விடுதிகள் மூடப்படக் கூடும். அப்போது வெளியூரிலிருந்து வேலைக்காகத் தனியாக வந்து தங்கும் மகளிரின் நிலை குறித்து யோசித்தாக வேண்டும்.
இது போன்ற விடுதிகளை முறைப்படுத்தி அவை சட்டத்துக்கு உட்பட்டு அடிப்படை வசதிகளுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்கு இப்போதைய முனைப்பு வழிகோலியிருக்கிறது. தமிழகம் முழுவதும் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான பெண்களும் மாணவிகளும் வெளியூர்களில் தனியாகத் தங்குவது அதிகரித்து இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னையை அரசு பொறுப்புணர்வுடன் முன்னுரிமை கொடுத்து அணுகி முடிவு கண்டாக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com