தேவையில்லா தலையீடு!

அனைத்து கணினிகளிலும்

அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களைக் கண்காணிப்பதற்கான அனுமதியை சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், வருவாய் புலனாய்வுத் துறை, "ரா' விசாரணை அமைப்பு, தில்லி காவல்துறை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில விசாரணை அமைப்பு, புலனாய்வு அமைப்பு என்று பத்து விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை வழங்கியுள்ளது. என்ன காரணத்துக்காக இப்போது திடீரென்று இப்படியோர் அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது என்பது குறித்து எந்த விளக்கமும் தரப்படாததால் சர்ச்சை எழுந்திருப்பதில் வியப்பில்லை.

கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கண்காணிப்பது, பரிமாறப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அனுப்பப்படும் தகவல்களை இடை மறித்து கண்காணிப்பது, கணினி மூலம் தகவல் அனுப்புவதைத் தடை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை மேலே குறிப்பிட்டுள்ள விசாரணை அமைப்புகள் எந்தவிதத் தடையுமின்றி மேற்கொள்ள இந்த உத்தரவு அனுமதிக்கிறது. இப்படிக் கண்காணிப்பதற்கு எந்தவிதமான முன் அனுமதி பெற வேண்டும் என்பதோ, காரணம் குறிப்பிட வேண்டும் என்பதோ தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவு, கடுமையான விமர்சனத்துக்கும் தேவையில்லாத அச்சத்துக்கும் வழிகோலியிருக்கிறது. 

தகவல் தொடர்பு சேவையாளர், பயன்பாட்டாளர் அல்லது கணினியை பயன்படுத்துபவர் ஆகியோர் விசாரணை அமைப்புகளுக்கு அவர்கள் கோரும்போது அனைத்துவிதத் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த உத்தரவு தெரிவிக்கிறது. அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தால், அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

இந்திய தந்தி சட்டம் 1951-இல், மத்திய அரசு 2007-இல் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் மூலம் எந்தவொரு தகவலையும் அரசு கண்காணிக்கவும், உள்நுழைந்து சோதனை நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏனைய வழிமுறைகளின் மூலம் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு அப்படியும் இயலாத கட்டத்தில் மட்டும்தான் உள்நுழைந்து தகவலைப் பெற வேண்டும் என்று சட்ட விதிமுறை இருக்கிறது. 

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 - அரசுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சில அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் பட்டியலிடப்பட்டிருக்கும் அதிகாரங்கள், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்கெனவே இருப்பவைதான். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இல் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சில சட்ட விதிமுறைகள் 2008-இல் சேர்க்கப்பட்டன. அதன்படி, எந்தவொரு தகவலையும் உள்நுழைந்து சேகரிக்கும் அதிகாரம் ஏற்கெனவே பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. 

2008-இல் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தின்படி, கணினியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை நுழைந்து பார்க்கும் அதிகாரமும், கண்காணிக்கும் அதிகாரமும் சேர்க்கப்பட்டன. இப்போது நரேந்திர மோடி அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு, ஏற்கெனவே முந்தைய மன்மோகன் சிங் அரசால் கொண்டுவரப்பட்டுவிட்ட விதிமுறைகளின் நீட்சிதான் என்றாலும்கூட, இதுகுறித்து விமர்சனம் எழுப்பப்படுவதற்கு அடிப்படைக் காரணம் உண்டு. 

ஒவ்வொரு குடிமகனின் தன்மறைப்பு நிலையும், அடிப்படை உரிமை என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, முந்தைய சட்டம் அரசியல் சாசன அனுமதியைப் பெறுமா என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. எந்தவொரு தனிநபரின் கணினியிலும் நுழைந்தோ அல்லது கணினி மூலம் தகவல்களை இடைமறித்தோ தகவல்களைச் சேகரிப்பது உச்சநீதிமன்றத்தின் தன்மறைப்புநிலை தீர்ப்புக்கு எதிரானதாக அமையும் என்பதால்தான் இப்போதைய உத்தரவு கேள்விக்குறியாகிறது. அதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தவறினால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற விதிமுறை அடக்குமுறைச் சட்டத்துக்கு நிகரானதாகத் தோற்றமளிக்கிறது. 

தேசத்தின் பாதுகாப்பு எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் குடிமக்களின் தன்மறைப்பு நிலை. தவறிழைக்கும் ஒரு சிலரை அடையாளம் காண்பதற்காக ஒட்டுமொத்த குடிமக்களையும் கண்காணிக்க முற்படுவதும், அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பு அமைப்புகள் வலுக்கட்டாயமாக உள்நுழைந்து சோதனையிட முற்படுவதும் அனுமதிக்கவே முடியாத ஜனநாயக விரோதச் செயல்பாடு. 

இந்தச் சட்டத்தை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகளும் தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளை அச்சுறுத்தவும், பயமுறுத்தி பணம் பறிக்கவும் முற்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அதிகார வர்க்கத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய அரசு, அதிகாரவர்க்கத்திடம் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அதிகாரங்களை ஒப்படைப்பது சர்வாதிகார ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம். 

தன்மறைப்பு நிலையை அடிப்படை உரிமையாக்கியிருக்கும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு அனுமதி வழங்காது என்று எதிர்பார்க்கலாம். உச்சநீதிமன்றமும் இதற்கு மெüன அங்கீகாரம் வழங்குமேயானால், கண்ணுக்கெட்டும் தூரத்தில் சர்வாதிகாரம் தென்படும் சாத்தியம் இருப்பதை தவிர்க்க முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com