தலையங்கம்

கண்கெட்ட பின்னால்...

ஆசிரியர்

கடந்த சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் 23 பொருள்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க முடிவெடுத்திருக்கிறது. கடந்த 2017 ஜூலை மாதம் மறைமுக வரிகளை அகற்றி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இதுவரை கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 200-க்கும் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது மீண்டும் ஒரு மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 0%, 5%, 12%, 18%, 28% என்று ஐந்து நிலையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-ஆவது கூட்டத்தில் 23 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவின்படி பெரும்பாலான பொருள்கள் குறைந்த வரி விதிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், அதிகபட்ச வரி விதிப்பான 28% பட்டியலில் மிகக் குறைந்த பொருள்கள் மட்டுமே இனிமேல் இடம்பெறும். 
மக்களுக்குச் சுமை ஏற்படுத்தாத வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை கொண்டு செல்ல ஜிஎஸ்டி கவுன்சில் 31 முறை சந்தித்திருக்கிறது, விவாதித்திருக்கிறது என்பதிலிருந்து எந்த அளவுக்கு முன் யோசனை இல்லாமல் இந்த வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது வெளிச்சமாகிறது. கடந்த ஓர் ஆண்டுக் காலத்தில் 361 பொருள்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்து அதிக வரிப் பட்டியலிலிருந்து குறைந்த வரிப் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றனவே தவிர, இப்போதைய ஐந்து அடுக்கு வரி விதிப்பு குறைக்கப்படாமல் இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் முறையான ஆய்வோ, சிந்தனையோ இருக்கவில்லை என்பது தெரிகிறது. 
கடந்த 18 மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு கூட்டத்திலும் வெவ்வேறு பொருள்கள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களை விவாதித்து அவற்றின் மீதான வரிகளைக் குறைத்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இப்போதைய வரி விதிப்புக் குறைப்பு தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 
ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகப்படுத்தியதிலும் நடைமுறைப்படுத்தியதிலும் மத்திய அரசு பல்வேறு குளறுபடிகளைச் செய்து, தேவையில்லாமல் மக்களுக்கு மன உளைச்சலையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தியது என்றால், எதிர்க்கட்சியான காங்கிரஸின் செயல்பாடும் மெச்சும்படியானதாக இல்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை என்பதே முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முன்மொழியப்பட்ட ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முன்பு நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் அதிக வரிப் பட்டியலில் பல பொருள்கள் இருப்பதை சுட்டிக்காட்டி ஜிஎஸ்டி என்பதை கப்பர் சிங் டேக்ஸ் என்று கொள்ளைக்கார அரசின் வரி என்பது போல சித்தரிக்க முற்பட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இப்போது ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசு அதிக வரிப் பட்டியலில் இருந்து 23 பொருள்களின் மீதான வரியை குறைந்த விலைப் பட்டியலுக்கு மாற்ற முற்பட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநில பிரதிநிதிகள் எதிர்க்க முற்பட்டிருப்பது அவர்களது போலித்தனத்தைத்தான் எடுத்துரைக்கிறது. 
குறைந்த வரி மூலம் அதிக வரி வருவாயை அரசு பெற முடியும் என்கிற கருத்து முன்மொழியப்படுகிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வசூல் குறைந்து வருகிறது. கடந்த 2018-19 மத்திய நிதிநிலை அறிக்கையில் மாதம் ஒன்றுக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு மாதம் கூட அந்த இலக்கு எட்டப்படவில்லை. இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வரிக் குறைப்பால் அரசுக்கு ரூ.5,500 கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார். அப்படியானால், மேலும் ஜிஎஸ்டி வருவாய் குறையும்போது அந்த வருவாய் பற்றாக்குறையை அரசு எப்படி ஈடு செய்யப்போகிறது?
கடந்த ஓர் ஆண்டாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பல்வேறு பிரச்னைகளும், சிவப்பு நாடா தொந்தரவுகளும் எழுப்பப்படுகின்றன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சிக்கலான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கையாள முடிந்தது. ஆனால், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மட்டுமல்லாமல், வணிகர்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் 6.5 கோடி சிறு வியாபாரிகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஜிஎஸ்டி வரி விதிப்பால் 20%-க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். இதனால், பல லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். 
உலகில் ஒற்றை வரி விதிப்பு முறை உள்ள 115 நாடுகளில் மிகவும் சிக்கலான வரி விதிப்பு முறை இந்தியாவில் காணப்படுவதாக உலக வங்கியே கருத்துத் தெரிவித்திருக்கிறது. அதேபோல, 
உலகில் இரண்டாவது மிக அதிகமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நாடும் இந்தியாதான். உலகில் ஒற்றை வரி விதிப்பு முறை உள்ள 115 நாடுகளில், 49 நாடுகளில் அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே வரிதான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 
இன்னும் மக்களவைத் தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருக்கும் நிலையில் அவசர அவசரமாக வரி குறைப்பு செய்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. சட்டப்பேரவைத் தேர்தல் பின்னடைவின் எதிரொலி இது என்பதல்லாமல் வேறென்ன?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT