வழிகாட்டும் தீர்ப்பு!

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தில்லியின் ஆட்சி நிர்வாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தில்லியின் ஆட்சி நிர்வாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம் கான்வில்கர், டி ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்படாததால், அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறது.
 தில்லிக்குத் தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. அதே நேரத்தில், மாநிலப் பட்டியலில் உள்ள நிலம், காவல்துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவை நீங்கலாக, பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் அனைத்துக்கும் சட்டம் இயற்றும் அதிகாரமும் முடிவெடுக்கும் நிர்வாக அதிகாரமும் தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உண்டு என்பதைத் தீர்ப்பு தெளிவாகவே பதிவு செய்கிறது.
 சுதந்திரம் அடைந்தது முதல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது தலைநகர் தில்லியின் நிர்வாகம். தில்லி மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளை தில்லி மாநகராட்சி கவனித்துக் கொண்டது. 69-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் படி, தில்லிக்குத் தனியான சட்டப்பேரவை 1991-இல் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த தில்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், நிலம், காவல்துறை, சட்டம் ஒழுங்கு ஆகிய மூன்று துறைகளும் மாநில அரசிடம் வழங்கப்படாமல் மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநரின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. அதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.
 தில்லி, தேசத்தின் தலைநகரம் என்பதால், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும், வெளிநாட்டுத் தூதரகங்களும் இருக்கும் நிலையில் தில்லியின் மாநில அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறையையும் சட்டம் ஒழுங்கையும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருந்து வருகிறது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி பதவிக்கு வந்தது முதல் தில்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து கடும் பனிப்போர் நிலவி வருகிறது. மத்திய ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேயான மோதல், தில்லி அமைச்சரவைக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையேயான மோதலாக பொதுவெளியில் வெடித்தது என்பதுதான் இதன் நிஜமான பின்னணி.
 2016-இல் தில்லி உயர்நீதிமன்றம், தேசிய தலைநகர் பகுதியாக தில்லி இருப்பதால் அதன் நிர்வாகத் தலைவராக துணைநிலை ஆளுநர்தான் இருப்பார் என்றும், அவருக்குத்தான் அதிகாரம் என்றும் தீர்ப்பு வழங்கி இருந்தது. இப்போதைய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு 2016-இல் தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பல பகுதிகளை நிராகரித்துவிட்டது.
 இப்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படி ஏனைய மாநில ஆளுநர்களைப் போல தில்லியில் துணை நிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உதவியுடனும், ஆலோசனையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும். அமைச்சரவையின் எந்தவொரு முடிவையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பும் அதிகாரம் தனக்கு இருப்பதாக துணை நிலை ஆளுநர்கள் தெரிவித்து வந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆம் ஆத்மி அரசு முன்வைத்த பல முக்கியமான முடிவுகளை துணை நிலை ஆளுநர் செயல்படுத்த விடாமல் தடுத்து வந்தார். இதை இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்தது.
 இப்போது தில்லி மாநிலத்தின் அதிகாரப் பகிர்வு குறித்த தெளிவை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அன்றாட அலுவல்களைப் பொருத்தவரை, மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு, துணை நிலை ஆளுநர் ஒப்புதல் கொடுத்தாக வேண்டும். அதே நேரத்தில் துணை நிலை ஆளுநருக்கு குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அமைச்சரவையின் முடிவுகளை அனுப்பி வைக்கும் அதிகாரம் தொடரவும் தீர்ப்பு வழிகோலுகிறது. ஆனால், "எந்த முடிவையும்' குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எடுத்துச் செல்வது என்பதற்கு, "ஒவ்வொரு முடிவையும்' என்று பொருள் காணக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
 இந்தத் தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறிவிட முடியாது. இன்னும்கூட தில்லி நிர்வாகத்தின் முக்கியமான பிரச்னைகளில் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் தொடர்கிறது. அதேபோல, தில்லி அரசின் முடிவுகளை நாடாளுமன்றம் (மத்திய அரசு) நிராகரிக்க முடியும். துணை நிலை ஆளுநரின் அலுவலகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவ வேண்டுமே தவிர, அதன் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடமுடியாது.
 இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் எதிராகப் போராடும் போக்கை முதல்வர் கேஜரிவாலும், மாநில அரசை செயல்படவிடாமல் முடக்கும் போக்கை துணை நிலை ஆளுநரும் நிறுத்திக் கொண்டு தங்களது பொறுப்புகளை உணர்ந்து பொதுமக்களின் நலன் கருதி நிர்வாகம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
 ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது என்பதால், இதுவொரு முன்னுதாரணமான தீர்ப்பாக வருங்காலத்தில் மேற்கோள் காட்டப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com