அமைதிக்கு அச்சுறுத்தல்!

கடந்த வெள்ளிக்கிழமை பனாமா

கடந்த வெள்ளிக்கிழமை பனாமா ஆவணங்கள் தொடர்பாக நடைபெற்ற ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 
10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்திருக்கிறது. அது போதாதென்று சுமார் 68 கோடி ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு மட்டுமல்லாமல் அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகம்மது சஃப்தார் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. 
ஏற்கெனவே கடந்த ஆண்டு பனாமா ஆவணங்கள் தொடர்பாக வெளிவந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அவரைப் பதவி நீக்கம் செய்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் தேர்தலில் போட்டியிட அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் வாழ்நாள் தடைவிதித்த தீர்ப்பின் நீட்சிதான் இப்போதைய தீர்ப்பு என்று கொள்ளலாம்.
பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம் இஸ்லாமிய மதச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதால் ஜனநாயக ரீதியிலான ஆட்சி அமைப்பில் காணப்படாத சில புதிய பிரிவுகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பிரிவின்படி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேர்மையானவர்களாகவும், இறை நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஒருவர் நேர்மையற்றவர் என்று உச்சநீதிமன்றம் கருதினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படவோ, அவர் அரசியலுக்கு வாழ்நாள் தடை விதிக்கவோ வேறு எந்த ஆதாரங்களும் தேவையில்லை. நீதிபதிகளின் முடிவு மட்டுமே போதும். 
பாகிஸ்தானின் ஜனநாயக அமைப்பில் காணப்படும் மிகப்பெரிய பலவீனம் இது. இதைப் பயன்படுத்தி மத குருமார்களும், ராணுவமும் கைகோத்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் பலரைப் பதவி நீக்கம் செய்திருக்கின்றன. இந்த "முல்லா - மிலிட்டரி கூட்டணி'யின் ஆதிக்கம் நீதித்துறையையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். அதனால்தான் பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவோர் அரசும் தொடர்ந்து பதவியில் நீடிக்கவோ, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணவோ இல்லாத நிலைமை இன்று வரை தொடர்கிறது. இந்தியாவுடனான உறவுகளை சுமுகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நவாஸ் ஷெரீப் எப்போதுமே முனைப்புக்காட்டி வந்தார் என்பதுதான் அவர் மீதான "முல்லா - மிலிட்டரி கூட்டணி'யின் ஆத்திரத்துக்குக் காரணம்.
நவாஸ் ஷெரீப்பும் அவரது மகள் மற்றும் மருமகனும் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள அவென் ஃபீல்டு ஹவுஸ் என்கிற பகுதியில் நான்கு குடியிருப்புகளை வாங்கியிருப்பது தொடர்பான வழக்கில்தான் தேசிய ஊழல் தடுப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது. 2015-இல் வெளியான பனாமா ஆவணங்களின்படி, நவாஸ் ஷெரீப்பும் அவரது குடும்பத்தினரும் முறைகேடாகச் சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலான ஒரு வழக்கில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.
வரும் ஜூலை 25-ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பல தீவிரவாதக் குழுக்கள் அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் களமிறங்கியிருக்கின்றன. இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைத் தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்கும், நவாஸ் ஷெரீப்பை பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பதற்கும் நீதித்துறையின் மூலமாக ராணுவம் மேற்கொண்ட மறைமுக உத்திதான் இந்தத் தீர்ப்பு என்கிற கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. 
கடந்த நான்கு ஆண்டுகளாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆட்சியில் பல அடிப்படைப் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நாட்டில் நிலவிய கடுமையான மின்பற்றாக்குறை பரவலாகத் தளர்ந்திருக்கிறது. அதேபோன்று, தீவிரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டிருக்கிறது. இதெல்லாம் சாமானியர்கள் மத்தியில் நவாஸ் ஷெரீப்பின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை உணர்ந்ததால்தான் ராணுவம் நீதித்துறையின் உதவியுடன் அவரை அகற்றிவைக்க முற்பட்டிருக்கிறது என்கிற கருத்து பாகிஸ்தான் நடுநிலையாளர்கள் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. 
மூன்று முறை நவாஸ் ஷெரீப் மக்களால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், அவரது பதவிக் காலத்தை முழுமையடைய பாகிஸ்தான் ராணுவம் அனுமதிக்கவில்லை. முதல் தடவை அவர் கட்டாயத்தின் பேரில் பதவி விலக நேர்ந்தது. அடுத்த முறை, ராணுவப் புரட்சியின் மூலம் அவரது அரசு அகற்றப்பட்டது. மூன்றாவது முறையாக, நீதித்துறையின் உதவியுடன் நவாஸ் ஷெரீப் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். 
நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்ஸþம் நவாஸ் தொண்டை புற்றுநோயால் லண்டனில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், நவாஸ் ஷெரீப்பின் குடும்பம் சிறையில் தள்ளப்பட இருக்கிறது. லண்டனிலிருந்து இஸ்லாமாபாத் திரும்பினால் விமான நிலையத்திலிருந்து அவர் சிறைச்சாலைக்கு ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுவார் என்பது உறுதி. 
நவாஸ் ஷெரீப் கூறியதுபோல, ராணுவம் என்கிற பொம்மலாட்டக்காரர்களால் இயக்கப்படும் தீவிரவாதிகள் இனிமேல் பாகிஸ்தானில் அரசியல்வாதிகளாக வலம் வரப்போகிறார்கள். இதன் விளைவுகள் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, இந்திய - பாகிஸ்தான் உறவுக்கும் நன்மை பயப்பதாக அமையாது என்பது உறுதி. பாகிஸ்தானில் ஜனநாயகம் பலவீனப்படுவது உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com