போதுமே இந்த விவாதம்!

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவது சாத்தியப்படுமா என்பது குறித்து சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மக்கள் கருத்தையும் கோரி இருக்கிறது

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவது சாத்தியப்படுமா என்பது குறித்து சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மக்கள் கருத்தையும் கோரி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்து வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு 
ஐந்தாண்டு பதவிக்காலம் உறுதிப்படுத்துவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்ல, இதற்கு முன்னரே பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே அத்வானியும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும்கூட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
1967 வரை மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்ததால் எல்லா அரசுகளுமே தங்களது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தன. 1967-இல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளும் கூட்டணி ஆட்சிகளும் பதவிக்கு வந்த பிறகுதான் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பல மாநிலங்களில் சாத்தியமற்றதாகி விட்டது. இந்தியாவில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமற்றதாக மாறிவிட்டிருக்கும் நிலையில், இப்போது மீண்டும் இது குறித்த விவாதம் எழுந்திருக்கிறது.
இந்தப் பிரச்னை முரண்பட்ட பல கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். சட்ட ஆணையத்திடம் இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் சமாஜவாதி கட்சியும், தெலங்கானா ராஷ்டிர சமிதியும், பாஜகவும் ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற கருத்தை ஆதரித்திருக்கின்றன. உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் நேரடியாக மோதிக்கொள்ளும் சமாஜவாதி கட்சியும் பாஜகவும் இந்தப் பிரச்னையில் ஒத்தக் கருத்தை வெளிப்படுத்தியிருப்பது வியப்பளிக்கிறது. அதைவிட வியப்பு, மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் திரிணமூல் காங்கிரஸும், இடது சாரிகளும் ஒருங்கிணைந்திருப்பது. இரண்டு கட்சிகளுமே ஒரே நேரத்தில் தேர்தல்' என்கிற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. அப்போது தேர்தல் வழிகாட்டு விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடுவதால், மக்கள் நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் தொடர முடியாத தேக்க நிலை ஏற்படுகிறது. தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் அரசு இயந்திரமும் அநேகமாக ஸ்தம்பித்து விடுகிறது. காவல்துறையின் கவனமும் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதை விடுத்து தேர்தல் கண்காணிப்புப் பணியில் திசை திரும்புகிறது. இவையெல்லாம்தான் ஒரே நேரத்தில் தேர்தல்' என்கிற கோரிக்கையை முன்வைப்பவர்கள் கூறும் காரணங்கள்.
மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரே நேரத்தில் தேர்தல்' என்பது விவாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்குமே தவிர நடைமுறை சாத்தியமாகாது என்பது மட்டுமல்ல, மக்களாட்சித் தத்துவத்துக்கு ஏற்புடையதாகவும் இருக்காது. மாநில அரசுகள் தனிப்பெரும்பான்மையுடன் செயல்படும்போது, மத்தியில் உள்ள அரசு பெரும்பான்மை இழந்துவிட்டால் மாநில ஆட்சிகளைக் கலைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதேபோல, மாநில சட்டப்பேரவையில் ஒரு ஆட்சி கவிழ்ந்துவிட்டால் அடுத்த மக்களவைத் தேர்தல் வரும்வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசின் மறைமுக ஆட்சியாக இருக்குமே தவிர, மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையாது. 
இப்போது இருப்பதுபோல, மக்களவைக்கோ மாநில சட்டப்பேரவைக்கோ ஐந்தாண்டு அதிகபட்ச காலவரம்பு இருக்கலாமே தவிர, கட்டாயக் காலவரம்பு என்பது ஆபத்தானது. அது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்காது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது, மாற்று ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்கிற கருத்தும் தவறானது. அப்படி அமையுமானால் வெகுஜன விரோத ஆட்சியை அகற்ற முடியாது என்பது மட்டுமல்ல, கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். 
சட்ட ஆணையத்தின் செயல் அறிக்கையில், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தில், குறைந்தது ஆறு சட்டங்களிலாவது திருத்தங்கள் கொண்டுவந்தாக வேண்டும். இவற்றில் சில அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருப்பதால், கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றுவது கடினம் என்பதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒத்திப்போட்டு 2019 மக்களவைத் தேர்தலுடன் நடத்துவது என்பது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு வசதியாகவும் சாதகமாகவும் இருக்கும் என்பதற்காக முன்மொழியப்பட்ட திட்டமாகத்தான் ஒரே நேரத்தில் தேர்தல்' என்கிற பிரதமரின் கோரிக்கையும், சட்ட ஆணையத்தின் பரிசீலனையும் தோற்றமளிக்கின்றன. தேர்தல் ஆணையமும் சட்ட ஆணையமும் இது குறித்த ஆலோசனைகளை முன்னெடுத்தாலும், ஏனைய கட்சிகள் பாஜகவுக்கு அந்த வாய்ப்பை வழங்காது என்பதில் சந்தேகமில்லை. 
இந்தியா என்பது பல நாடுகளை (மாநிலங்களை) உள்ளடக்கிய தேசம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல்' என்பது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்ப்பதாக அமையாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com