ஆதாயம் தராது!

தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்திச் செலவை விட, 150% அதிகமாக விற்பனை விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்'

தேசிய ஜனநாயகக் கூட்டணி விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்திச் செலவை விட, 150% அதிகமாக விற்பனை விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்' என்று வாக்குறுதி அளித்திருந்தது. நரேந்திர மோடி அரசு, இப்போது வரலாறு காணாத அளவுக்கு காரீப்' பருவப் பயிர்களுக்கான உற்பத்திப் பொருள்களின் ஆதார விலையை அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு 2019-இல் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. 
உற்பத்தியான விளைபொருள் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவது மிகவும் சிரமம். கோதுமைக்கும் நெல்லுக்கும்தான் அரசு முறையான கொள்முதலுக்கு வசதி செய்திருக்கிறது. அதனால், ஏனைய பயிர்களுக்கான அரசின் குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏட்டளவில் மட்டும் இருக்குமே தவிர, நடைமுறையில் பயனளிக்குமா என்பது சந்தேகம்தான்.
குறைந்தபட்ச ஆதார விலை எந்தப் பயிருக்கு அதிகமாக இருக்கிறதோ அந்தப் பயிர் விவசாயிகளால் அதிகமாகப் பயிரிடப்படும். உற்பத்திச் செலவுக்கு மேல் ஒன்றரை (1.5) மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்போது, விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஏற்கெனவே அரிசி, கரும்பு இரண்டும் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி தேங்கிக் கிடக்கும் நிலையில், இப்போது விதிக்கப்பட்டிருக்கும் அதிகரித்த ஆதார விலை அரசுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.
நெல்லும் சரி, கரும்பும் சரி, மிக அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்கள். அதனால், அவற்றின் உற்பத்திச் செலவும் அதிகம். அவற்றுக்கு அதிகமாக ஊக்கம் தரப்பட்டால், அதன் விளைவாக நிலத்தடி நீர் குறையும் அபாயமும் ஏற்படும். நமது உணவுத் தேவைக்காக அரசு கொள்முதல் செய்வதில் தவறில்லை. ஆனால், தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாகக் கொள்முதல் செய்து, அவை கிடங்குகளில் தேங்கிக் கிடப்பதில் அர்த்தமில்லை.
அதேபோல பருத்தி, நிலக்கடலை, சோளம் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சந்தை விலையைவிட மிகவும் அதிகம். அதன் விளைவாக, தனியார் மொத்த வியாபாரிகள் இந்தப் பொருள்களை வாங்குவதைக் குறைத்துவிட்டால் இவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொள்வார்கள். நாசட்', பருத்தி கார்ப்பரேஷன்' உள்ளிட்ட அரசு அமைப்புகள் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை வாங்க முன்வராமல் போனால், அது அவர்கள் மத்தியில் அரசின் மீதான வெறுப்பையும் கோபத்தையும் அதிகரிக்குமே தவிர, அதிகபட்ச ஆதார விலை தரப்பட்டிருக்கிறது என்கிற மகிழ்ச்சியை ஏற்படுத்தாது. 
விவசாயிகளின் பிரச்னை வறுமையோ, பற்றாக்குறையோ அல்ல. வறட்சி அல்லது அதிக பருவ மழையால் ஏற்படும் பாதிப்பு. இல்லையென்றால், நல்ல விளைச்சலும், நல்ல விலையும் கிடைக்கும் என்று கருதிப் பயிரிட்டு, உற்பத்திப் பெருக்கத்தால் வாங்க ஆளில்லாமல் தேக்கம் ஏற்படுவது. இதன் விளைவாக அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திருந்தாலும் கூட, அதைவிடக் குறைவான விலைக்கு விளைபொருள்களை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதனால், அளவுக்கு அதிகமான உற்பத்திப் பிரச்னையை, அதிகரித்த ஆதார விலையின் மூலம் மேலும் அதிகரிப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. 
முன்பு சோவியத் யூனியனுடன் போர் மூளலாம் என்கிற சூழல் ஏற்பட்டபோது, தங்களது உணவுப் பாதுகாப்புக்காக ஐரோப்பிய நாடுகள் சர்வதேச விலையை விட அதிக விலையை அறிவித்து விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்க முற்பட்டன. அதன் விளைவாக அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல், அவர்கள் தங்களது எதிரியாகக் கருதிய சோவியத் யூனியனுக்கே குறைந்த விலையில் அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். அதுமுதல் மானியங்கள் அளிப்பது ஆதார விலை நிர்ணயிப்பது, அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வழிகோலுவது உள்ளிட்டவைக்கு ஐரோப்பிய நாடுகள் விடை கொடுத்தன. இதிலிருந்து இந்திய அரசு பாடம் படிக்க வேண்டும். 
விவசாயிகளின் நிலையை உயர்த்த வேண்டும் என்பதும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதும் அரசின் நோக்கமாக இருந்தால், அதற்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து நிர்ணயிப்பதல்ல தீர்வு. மேலும், மாநிலத்திற்கு மாநிலம் விளைபொருள்களும் விவசாயிகளின் பிரச்னைகளும் வேறுபடும் நிலையில், இதற்கு தேசிய அளவிலான தீர்வு கிடையாது.
பத்து ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குறித்து அரசு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு இப்போது வழங்கப்படுவது போல வருமான வரிச் சலுகை உள்ளிட்ட எந்தவொரு சலுகையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. பத்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, அவர்கள் பயிரிடும் விளைபொருள்களின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல ஏக்கருக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை நேரடி மானியமாக வழங்க அரசு முற்பட்டால், தேவைக்கு அதிகமான உற்பத்தி, கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்கள் வீணாவது, தேவையில்லாமல் அதிகமான தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விவசாயிகள் நாடுவது உள்ளிட்ட பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை நரேந்திர மோடி அரசுக்குத் தேர்தலில் குறைந்தபட்ச வாக்குகளை உறுதி செய்யும் என்று கருதினால், அது வெறும் மாயத் தோற்றமே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com