தலையங்கம்

மனசாட்சியின் குரல்!

ஆசிரியர்

இந்தியா மகளிருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்ற தேசம் என்பதை சமீபத்திய சில நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மதிய உணவுத் திட்டம் மத்திய - மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட நிலையிலும்கூட பசியின் கொடுமையால் குழந்தைகள் இந்தியாவில் மரணிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நமது சட்டங்களும் திட்டங்களும் ஏட்டளவில்தான் இருக்கின்றன என்பது தெரிகிறது.
 மன்சி, ஷிகா, பரூல் மூவரும் எட்டு, நான்கு, இரண்டு வயதான சகோதரிகள். இவர்கள் மூவரும் கடந்த வாரம் தில்லியில் உணவில்லாமல் பசியால் இறந்திருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தரும் செய்தி நமது மனசாட்சியையே உலுக்குகிறது. இந்தியாவின் பணக்கார நகரங்களில் ஒன்றான தேசத்தின் தலைநகரில் மூன்று பெண் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறந்து போயிருக்கும் சம்பவம் நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. எட்டு நாள்களாக அந்த மூன்று பெண் குழந்தைகளும் ஒரு கவளம் உணவு கூட இல்லாமல் பசியுடன் போராடி இறந்திருக்கிறார்கள் எனும்போது, அதைவிடக் கொடூரமான ஒரு சம்பவம் வேறு எதுவும் இருக்க முடியாது.
 உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்று நாம் நம்மை வர்ணித்துக் கொள்வது போலியான ஒன்று என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போடுகின்றன.
 நாம் பொருளாதார வளர்ச்சி குறித்தும், ஏற்றுமதி - இறக்குமதி குறித்தும், பங்குச் சந்தையின் எழுச்சி - வீழ்ச்சி குறித்தும் கவலைப்படும் அளவுக்கு குடிமக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருப்பதற்கு ஒரு கூரை குறித்து அக்கறை செலுத்தவில்லை என்பதைத்தான் தில்லியில் நடந்ததுபோல ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
 உணவு மற்றும் வேளாண் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள்தொகையில், 20 கோடி பேர் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்கிறார்கள். அவர்களுக்கு மூன்று வேளை உணவுக்கு வழியில்லை. இத்தனைக்கும் இந்திய நாடாளுமன்றம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி உணவை அடிப்படை உரிமையாக்கி இருக்கிறது.
 எப்படி சிறுவர் - சிறுமியரின் உணவுப் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தவில்லையோ, அதேபோல அவர்கள் மீதான வன்முறையைக் கட்டுப்படுத்துவதையோ, அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையோகூட இன்னும் நாம் செய்யவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குழந்தைகள், சிறுமியர், சிறார்கள் ஆகியோர் குறித்துப் போதுமான அளவு விழிப்புணர்வு இன்னும் ஏற்படாமல் இருப்பது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 பிகார் மாநிலம், முசாபர்பூரில் மாநில அரசு நடத்தும் சிறுமியர் காப்பகத்தில் உள்ள 29 பெண் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்த மாநிலத்திலுள்ள குறுகிய கால தங்குமிடங்களைத் தணிக்கை செய்யச் சென்ற டாடா நிறுவனத்தின் அமைப்பு ஒன்று இந்தத் தகவலை வெளிக்கொணர்ந்திருக்கிறது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், 41 பெண் குழந்தைகள் இன்னொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
 இந்தியாவில் ஏறத்தாழ 34.5 கோடி குழந்தைகள் ஒதுக்கப்பட்டு, நிராதரவாக, அனாதையாக அல்லது சட்டத்தின் பிடியில் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருப்பவர்களாகக் காணப்படுகின்றனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான எத்தனைசட்டங்கள் வந்தாலும் அவை எதுவும் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதாகத் தெரியவில்லை.
 குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், அவர்களைப் பசிக்கொடுமையில் இருந்து காப்பாற்றுவதற்கும், மத்திய - மாநில அரசுகள் ஆண்டுதோறும் குழந்தைகள் காப்பகங்களுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதுபோன்ற குழந்தைகள் காப்பகங்கள், சிறார்களுக்கான நீதிச் சட்டத்தின் (ஜூவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தக் காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். ஆனால், பல்வேறு ஆய்வுகளும் கணக்கெடுப்புகளும் இது குறித்துத் தரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
 இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான அனாதை இல்லங்களும், குறுகிய கால தங்கும் விடுதிகளும், சிறார் காப்பகங்களும் பதிவு செய்யப்படாமல் நடத்தப்படுகின்றன. அதனால், இவற்றில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறித்த முழுமையான விவரத்தைத் திரட்ட முடியாத நிலை காணப்படுகிறது. அந்த குழந்தைகளின் உணவுக்காக பெறப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பது குறித்த கண்காணிப்பு இல்லை.
 அரசு நடத்தும் காப்பகங்களில்கூட கண்காணிப்போ, முறையான ஆய்வோ நடத்தப்படுவதில்லை. அதனால், அந்தக் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துள்ள உணவு தரப்படுகிறதா, அவர்கள் மீது பாலியல் ரீதியான வன்முறை நடத்தப்படாமல் இருக்கிறதா உள்ளிட்ட எந்த ஒரு விவரங்களும் வெளிவருவதே இல்லை.
 அரசு, தனியார் அமைப்புகள் நடத்தும் சிறார் காப்பகங்கள், அனாதை இல்லங்கள் அனைத்துமே தீவிரமான கண்காணிப்புக்கும், முறையான ஆய்வுக்கும் உள்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அவற்றை ஊடகங்கள், சமூக ஆர்வலர்களின் ஆய்வுக்கும் அனுமதிக்க வேண்டும். உணவில்லாமல் பசியால் குழந்தைகள் இறப்பது, காப்பகங்களிலேயே அவர்கள் சுரண்டப்படுவது, பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது உள்ளிட்ட சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் மட்டும்தான் நாம் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசுவதற்கான அருகதையைப் பெறுவோம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT