தலையங்கம்

தேங்கிக் கிடக்கும் நீதி!

ஆசிரியர்

மத்திய அரசு ஏதாவது காரணம் கூறி மேல்முறையீடுகளில் ஈடுபடுவது குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. தொடர்புடைய இன்னொரு பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் நிலையில், அதேபோன்ற ஏனைய பிரச்னைகளிலும் தேவையில்லாமல் மேல் முறையீடுகளைச் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை அரசு ஏன் வீணாக்குகிறது என்று நீதிபதிகள் லோகுரும், குப்தாவும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
 முறையாகவும், விரைவாகவும் நீதி வழங்கப்படுவதற்கு உதவும் விதத்தில் அரசு தனது கடமைகளையும் பொறுப்புகளையும் சரிவரச் செய்யவில்லை என்கிற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறது. தேங்கிக்கிடக்கும் வழக்குகளைக் குறைப்பதற்கு தேசிய வழக்காடு கொள்கை ஒன்றை ஏற்படுத்த அரசு தவறியிருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான வழக்குகள் ஒன்று அரசுத் துறை
 களுக்கு எதிராகவோ அல்லது அரசுத் துறைகளாலோ தொடுக்கப்படுவதுதான் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு மிக முக்கியமான காரணிகள் என்பதில் சந்தேகமில்லை.
 வழக்குகள் தேங்கிக்கிடப்பதால் இருதரப்பு வழக்குரைஞர்களும்தான் பயனடைகிறார்களே தவிர, வழக்கு தொடுப்பவர்களோ, அரசோ அல்ல. உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடுகள் வரும்போது அரசு அந்த மேல் முறையீடுகளை முறியடிப்பதற்குத் தனது முழுமையான அதிகார பலத்தை பயன்படுத்துவது சாமானியனுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய நீதியைத் தட்டிப் பறித்துவிடுகிறது. தேவையில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் அரசுத்தரப்பு மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்பதுதான் நீதிபதிகள் லோகுர் மற்றும் குப்தாவின் கருத்து.
 2016}இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியிடம் அன்று வாதத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் எல்லா வழக்குகளையும் அவர் விசாரிப்பதாக இருந்தால், ஒரு வழக்குக்கு சராசரியாக அவரால் ஐந்து முதல் ஆறு நிமிடங்கள்தான் ஒதுக்க முடியும் என்று தெரிய வந்திருக்கிறது. தன் முன்னால் விசாரணைக்கு வந்திருக்கும் அத்தனை வழக்குகளையும் ஐந்து அல்லது ஆறு நிமிடத்தில் அவசர அவசரமாக விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது என்று சொன்னால், அதன் விளைவாக முறையான நீதி, வழக்குத் தொடுத்தவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடும். இந்த அளவுக்கு அதிக அளவில் வழக்குகள் தேங்குவதுதான் நீதிபதிகளுடைய பணியைக் கடினமாக்குகிறது.
 வழக்குரைஞர்கள்தான் நீதித்துறையின் அடிப்படை உயிர்நாடிகள். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்கி, தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட முடியாது. ஆனால், பெரும்பாலான வழக்குரைஞர்கள் வழக்குகளை ஒத்திப் போடுவதிலும், காலதாமதப்படுத்துவதிலும் கூடுதல் அக்கறை காட்டுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு கட்டணம் வழங்கி, வழக்குரைஞர்களை நம்பி வழக்குத் தொடுக்கும் சாமானிய மக்கள் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, காலதாமதப்படுவதால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மிகமிக தாமதமாக நீதி கிடைப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வழக்குரைஞர்களின் மெத்தனம் மிகமிக முக்கியமான காரணம்.
 கடந்த ஆண்டு மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் 3.2 கோடி வழக்குகளில் 46% வழக்குகள் மத்திய}மாநில அரசுகளால் தொடுக்கப்பட்டவை. விதிமுறை மீறல்கள், வரி ஏய்ப்பு, நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இதில் அடக்கம். அவற்றில் கீழமை நீதிமன்றங்களில் அரசின் ஆணைக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து அரசுத்தரப்பு மேல்முறையீடு செய்திருக்கும் வழக்குகள் மிக அதிகம். அதனால்தான் நீதிபதிகள் லோகுர், குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேவையில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் அரசுத்தரப்பு மேல்முறையீட்டில் ஈடுபடுவது வழக்குகள் அதிகமாகத் தேங்குவதற்குக் காரணமாகிறது என்று குற்றம் சாட்டுகிறது.
 நீதித்துறையும் சரி, தேவையில்லாத நிர்வாக விஷயங்களில் தலையிடுவது அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. விளம்பரம் தேடுவதற்காகத் தொடுக்கப்படும் பொதுநல வழக்குகளை ஏற்றுக்கொள்வது, கீழமை நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான தடை உத்தரவு, மேல்முறையீடு, நிவாரணம் ஆகியவற்றை அங்கீகரிப்பது, சட்ட ரீதியாக எடுக்கப்படும் நிர்வாக நடைமுறைகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிப்பது என்பன போன்ற வழக்குகளை அனுமதித்து, நீதித்துறையும் தேவையில்லாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அதிகரிக்கிறது என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.
 தனி நபர் மேல் முறையீடுகளைத் தடுப்பது என்பது நீதிக்கு விரோதமாக அமையக்கூடும். ஆனால், அரசுத் தரப்பு தனக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து வலுவில்லாத வழக்குகளில் மேல்முறையீடு செய்வது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது போல தவிர்க்கப்படாவிட்டாலும் குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க முடியும்.
 உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையில் 20%, உயர்நீதிமன்றங்களில் 38% இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இன்னொருபுறம் மேல்முறையீடுகளில் அரசுத்தரப்பு பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை. இவை இரண்டையும் நீதித்துறை சுட்டிக்காட்டி, தனது வருத்தத்தை பலமுறை தெரிவித்துவிட்டது. இனியும் அரசு தனது மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது சரியல்ல.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT