இதில் என்ன தவறு?

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் வியாழக்கிழமை நாகபுரியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) மூன்றாம் கட்டப் பயிற்சி முடிக்கும்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் வியாழக்கிழமை நாகபுரியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) மூன்றாம் கட்டப் பயிற்சி முடிக்கும் அந்த அமைப்பின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-இன் அழைப்பை ஏற்று முன்னாள் குடியரசுத் தலைவர் உரையாற்ற இருப்பது பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் எழுப்பியிருக்கிறது.
 ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசுவதே கூட தவறு என்றும், அது தீண்டத்தகாத அமைப்பு என்றும் கருதும் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களால், பிரணாப் முகர்ஜியின் முடிவை ஜீரணிக்க முடியவில்லை. பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்வதால் அந்த அமைப்புக்கு மரியாதை கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களின் அச்சம்.
 ஒருபுறம் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று பாஜகவும், இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ். முற்றிலுமாக அழிக்கப்படவேண்டுமென்று காங்கிரஸýம் வரிந்து கட்டிக் கொண்டு இருக்கும் நிலையில், இரண்டு எதிரெதிரான கொள்கைகளுக்கு நடுவே பாதை அமைக்க முற்பட்டிருப்பது, விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் வழிகோலும் என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாமல் இருந்திருக்காது. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அதன் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் வகுப்பவராகவும் இருந்திருக்கும் நிலையில் காங்கிரஸின் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பிரணாப் முகர்ஜி அறியாதவர் அல்ல. அதனால் சிந்திக்காமலோ, முன்யோசனை இல்லாமலோ அவர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை.
 ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அந்த இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலில் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். "லோகமான்ய' பால கங்காதர திலகர், மதன்மோகன் மாளவியா உள்ளிட்ட காங்கிரஸின் முன்னோடித் தலைவர்கள், இந்து மத அடிப்படையில்தான் விடுதலை வேள்விக்கு மக்களை ஒன்றுதிரட்ட முற்பட்டார்கள். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், பாபு ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு, வினோபா பாவே ஆகியோர் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட காங்கிரஸ் கட்சி பசுவதை தடுப்பு உள்ளிட்ட மதரீதியான சில கொள்கைகளை ஆதரிக்கவே செய்தது.
 அண்ணல் காந்தியடிகள் இந்து - முஸ்லிம் என்று மதரீதியாக பிளவுபடாத இந்திய தேசியத்தின் அடிப்படையில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டார். முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஜின்னா முன்வைத்த போதும்கூட, தீவிர இந்து மத விசுவாசியான அண்ணல் காந்தியடிகள், இந்தியா இந்து மத அடிப்படையிலான தேசமாக உருவாவதை ஏற்றுக் கொள்ளவில்லை.
 1947-இல் பண்டித ஜவாஹர்லால் நேரு அமைத்த முதலாவது தேசிய அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த இன்றைய பாஜகவின் முன்னோடியான ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி, வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்தார். சுதந்திர இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு முதல்முதலாக பரவலான அங்கீகாரம் கிடைத்தது, அவசர நிலை காலத்தில்தான். அன்றைய இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த அவசரநிலைச் சட்டத்தை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் போராடத் துவங்கியபோது அவருக்கு முதன்முதலில் பின் துணை நல்கியது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். "ஆர்.எஸ்.எஸ். பாசிஸ இயக்கம் என்றால், நானும் கூட ஒரு பாசிஸ்ட்தான்' என்று துணிந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு ஜெயபிரகாஷ் நாராயணன் அங்கீகாரம் அளித்தார். அதேபோல 1989-இல் வி.பி. சிங் தலைமையில் பாஜகவின் ஆதரவுடன் தேசிய முன்னணி அரசு ஆட்சி அமைந்ததற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸýம் ஒரு முக்கியமான காரணம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
 நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கட்சிகள் விவாதத்தின் மூலமும் கலந்து பேசியும் கருத்து ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்வதன் அடிப்படையில்தான் செயல்படுகிறது. அரசியல் வேறுபாடுகள் வெறித்தனமான விரோதமாக மாறிவிடாமல் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகப் பேசப்பட்டு முடிவெடுப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறப்பு.
 காங்கிரஸ் ஆட்சியில் பல முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்திருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பல நிகழ்வுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சிகளுடன் சமரசம் பேசி பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வந்தவர். 2011-இல் அண்ணா ஹசாரே தலைமையில் ஜன் லோக்பால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியபோது அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி அதை முடிவுக்கு கொண்டுவந்தவர் அவர்.
 ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைகள் குறித்த முழுமையான புரிதல் ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் விட அவருக்கு உண்டு. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அவரைவிட நன்கு அறிந்த இன்னொருவர் இருக்க முடியாது. இந்த பின்னணியுடன்தான் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்வில் கலந்து கொள்ள நாகபுரி செல்ல இருக்கிறார்.
 பிரணாப் முகர்ஜி நாகபுரிக்கு போக வேண்டுமா, வேண்டாமா என்பதல்ல கேள்வி. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்பதுதான் முக்கியம். தனது கருத்துக்கு மாறுபட்ட பிரணாப் முகர்ஜியை பேச அழைத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், அதை ஏற்றுக்கொண்ட பிரணாப் முகர்ஜியும் பாராட்டுக்குரியவர்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு முன்பே அதுகுறித்து விமர்சனம் செய்ய முற்படுவது ஜனநாயகம் சார்ந்த பண்பல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com