வாங்க ஆளில்லை!

ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்படும் என்று நரேந்திர மோடி அரசு அறிவித்து ஓராண்டு ஆகப்போகும் நிலையில்,

ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்படும் என்று நரேந்திர மோடி அரசு அறிவித்து ஓராண்டு ஆகப்போகும் நிலையில், இப்போது அந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. எதிர்பார்த்ததுபோல, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆர்வம் காட்டிய சில நிறுவனங்களும் பின்வாங்கிவிட்டிருக்கின்றன.
வாரத்துக்கு 54 உள்ளூர் தடங்களில் 2,330 விமான சேவையையும், 39 சர்வதேச தடங்களில் 393 விமான சேவையையும் வழங்கும் ஏர் இந்தியாவின் 115 விமானங்களை, அதை வாங்கும் நிறுவனம் பெறப்போகிறது. அதுமட்டுமல்ல, சர்வதேச விமான நிலையங்களில் விமானம் நிறுத்துவதற்கான இட வசதி ஏர் இந்தியாவில் இருக்கிறது. இவற்றைப் புதிய விமான சேவை நிறுவனங்கள் எளிதில் பெற்றுவிட முடியாது. அப்படி இருந்தும்கூட, ஏர் இந்தியாவை விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லை என்பதிலிருந்து, இதிலிருக்கும் பிரச்னையைப் புரிந்து கொள்ளலாம்.
ஏர் இந்தியா நிறுவனமும் அதன் இரண்டு துணை நிறுவனங்களும் 76% பங்குகளை விற்பது என்று முடிவு செய்து, அறிவிப்பும் வெளிவந்தது. மீதமுள்ள 24% பங்குகள் அரசின் வசமே இருக்கும் என்று கூறியது மட்டுமே முதலீட்டாளர்களின் உற்சாகமின்மைக்குக் காரணமல்ல. ரூ.33,000 கோடிக்கும் அதிகமான கடன் சுமையையும், 11,214 நிரந்தர ஊழியர்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அரசின் அறிவிப்பை யாருமே சட்டை செய்யவில்லை.
விமானப் போக்குவரத்தை அரசுடைமையாக்குவது என்கிற திட்டம் ஆரம்பத்திலேயே எதிர்க்கப்பட்டது. 1950-இல் விமானப் போக்குவரத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து என்பது மிகுந்த தொழில்நுட்பம் சார்ந்த துறை. அரசு நிர்வாக இயந்திரத்தின் மெத்தனமான, கோப்புகள் சார்ந்த அணுகுமுறை, விமானப் போக்குவரத்துத் துறையின் வேகத்துக்கு ஈடுகொடுக்காது. அரசின் தலையீடு என்பது அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தலையீடாகி, விமானப் போக்குவரத்தின் வளர்ச்சியை பாதிக்கும்' என்று அந்த அறிக்கை தொலைநோக்குப் பார்வையுடன் தெரிவித்திருந்தது.
எந்தவிதப் போட்டியும் இல்லாமல் அரசுத் துறையாகச் செயல்பட்ட போதும்கூட, ஏர் இந்தியாவோ, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமோ லாபத்தில் இயங்கியதா என்றால் இல்லை. அரசு மானியத்தின், அதாவது மக்களின் வரிப்பணத்தில்தான் இயங்கி வந்திருக்கின்றன. நரசிம்ம ராவ் அரசால் தாராளமயமாக்கல் கொள்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. அப்போதிருந்தே, அரசுத்துறை விமான நிறுவனங்கள் பேரிடரை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டன.
1996-இல் விஜய் கேல்கர் தலைமையிலான நிபுணர் குழு, இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரித்து அளித்தது. படிப்படியாக இரண்டு நிறுவனங்களையும் தனியார்மயத்துக்குத் தயாராக்கி, அதன் பிறகு பங்குகளை விற்பனை செய்வது என்கிற கேல்கர் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தி இருந்தால், இப்போது ரூ.50,000 கோடிக்கும் அதிகமான கடன்சுமையுடன் ஏர் இந்தியாவைக் கட்டிக்கொண்டு போராட வேண்டிய அவசியம் அரசுக்கு இருந்திருக்காது. அந்தப் பரிந்துரைகளை அதிகாரிகளும், சில கார்ப்பரேட் நிறுவனங்களும் நிராகரித்துவிட்டன.
2000-இல், அன்றைய அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு, ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் பங்குகளை விற்பனை செய்து, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்ற முற்பட்டபோது, உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்கள் வரிசை கட்டி வந்து நின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லூப்தான்சா, பிரிட்டிஷ் ஏர் வேஸ், குவான்டாஸ், டெல்டா, ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ரூ.10,000 கோடிக்கும் அதிகமான விலை கிடைத்திருக்கக்கூடும். அவற்றையும் அதிகாரவர்க்கம் தடுத்துக் கெடுத்தது.
ஏர் இந்தியா மட்டுமல்ல, எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின் நிலைமையும் இதே போன்றதுதான். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்தான் பெரும்பாலானவை. 2016-17-க்கான பொதுத்துறை நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைப்படி, முந்தைய பத்தாண்டுகளில் நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 54-இல் இருந்து 82-ஆக உயர்ந்திருக்கிறது. அந்தப் பத்தாண்டுகளில் அரசுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ.2.23 லட்சம் கோடி!
விமானப் போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோல மிகப்பெரிய நஷ்டத்தில் அரசின் உதவியால் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். இரண்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.25,667 கோடி இழப்பை சந்தித்திருக்கின்றன. 
ஏர் இந்தியா நிறுவனத்தைப் பொருத்தவரை, அரசு இப்போது விதித்திருக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதை விலைக்கு வாங்க யாரும் முன்வர மாட்டார்கள். வெளிநாட்டு விமான சேவைக்காக ஏர் இந்தியா, முன்பு போல உள்நாட்டு சேவைக்காக இந்தியன் ஏர்லைன்ஸ், குறைந்த கட்டணம் வசூலிக்கும் விமான சேவை நிறுவனம் என்று ஏர் இந்தியா நிறுவனத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். அதற்குப் பிறகு, விற்பனைக்கு முயன்றால், ஒருவேளை அவற்றை வாங்க சில நிறுவனங்கள் முன்வரலாம். 
முன் வைத்த காலைப் பின் வைக்காமல், முடிந்தவரை இழப்பில்லாமல் ஏர் இந்தியா என்கிற பாரத்தை இறக்கி வைப்பதுதான் புத்திசாலித்தனம். ஒவ்வொரு நாளும் மக்களின் வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com