சரியும் ரூபாயின் மதிப்பு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. டாலர் ஒன்றுக்கு இதுவரை இல்லாத அளவிலான ரூ.69.10-ஐ எட்டியபோது அதிர்வு அலைகள் எழுந்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. டாலர் ஒன்றுக்கு இதுவரை இல்லாத அளவிலான ரூ.69.10-ஐ எட்டியபோது அதிர்வு அலைகள் எழுந்தன. பிறகு 19 பைசா குறைந்தது. இப்போதைய நிலவரப்படி ரூ.68.56 என்கிற நிலையை அடைந்திருக்கிறது. இதற்கு முன்னர், கடந்த 2016 நவம்பர் 24-இல் ரூ.68.73 வரை குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.69-ஐ கடந்தது இதுதான் முதல் முறை. 
இதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும்கூட, சர்வதேச அளவில் நடைபெறும் வர்த்தக யுத்தம் குறித்த அச்சமும், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையும்தான் இப்போதைய டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் திடீர் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணிகள். அதுமட்டுமல்லாமல் வங்கிகளின் மத்தியிலும், இறக்குமதியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கும் டாலருக்கான தேவைகூட காரணமாக இருக்கக்கூடும். குறிப்பாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் பெற கூடுதல் டாலர் தேவைப்படுவது இந்த அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும். இது இந்திய ரூபாயை மட்டுமல்லாமல் ஆசியாவின் பல்வேறு செலாவணிகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது.
அமெரிக்கா பல பொருள்களின் மீதான இறக்குமதி வரிகளை அதிகரித்து, பிற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முற்பட்டிருக்கிறது. இதன் எதிர்வினையாக, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க முற்பட்டிருக்கின்றன. இது சீனா, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு ஆகியவற்றை அமெரிக்காவுடன் மறைமுகமான வர்த்தகப் பனிப்போரை மேற்கொள்ளத் தூண்டியிருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் பனிப்போர் மும்பையிலிருந்து மணிலா வரையிலான பல்வேறு ஆசியப் பொருளாதாரங்களைக் கடுமையாகப் பாதித்திருப்பதில் வியப்பில்லை. 
சர்வதேச வர்த்தகப் பனிப்போர் மட்டுமே இந்த திடீர் வீழ்ச்சிக்குக் காரணமல்ல. கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் முதலீடு செய்திருந்த பல முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க முதலீட்டாளர்கள் பிற நாடுகளில் உள்ள தங்களது முதலீட்டைத் திரும்பப்பெற முற்பட்டதில் வியப்பில்லை. ஜனவரி தொடங்கி கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.68,000 கோடி) அளவிலான முதலீடு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீடுகளை நம்பி உருவாக்கப்படும் எந்த ஒரு நாட்டின் பொருளாதாரமும், இப்படியொரு சவாலை ஏதாவது ஒரு காலகட்டத்தில் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு திடீர் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு முக்கியமான காரணம். இந்தப் பிரச்னை மேலும் கடுமையாகக் கூடும் என்பதுதான் இப்போதைய நிலைமை. 
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை நவம்பர் முதல் எல்லா நாடுகளும் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரியிருக்கிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் தடையல்ல என்பதால் அமெரிக்காவின் வேண்டுகோளை இந்தியா ஏற்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்த பொருளாதாரமாக மன்மோகன் சிங், நரேந்திர மோடி அரசுகளால் மாற்றப்பட்டுவிட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் வேண்டுகோளை இந்தியா முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது என்பதுதான் எதார்த்த நிலைமை. இன்றைய நிலையில் இந்தியாவுக்கு மிக அதிகமான கச்சா எண்ணெய் வழங்கும் மூன்றாவது நாடு ஈரான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கடந்த முறை ஈரானுக்கு எதிராக சர்வதேசத் தடை விதிக்கப்பட்டபோது, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொண்டிருந்தன. 
இப்போது அமெரிக்கத் தடையைத் தொடர்ந்து இந்தியா ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக இருந்தால் அந்த வர்த்தகத்தை டாலரில் நடத்த முடியாது. அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது.
பொதுத் தேர்தலுக்கு ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், மிகவும் இக்கட்டான பொருளாதார நெருக்கடியை நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோது அதன் பயனை அரசு மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்திருந்தால், இப்போது ஏற்பட இருக்கும் மிகப்பெரிய விலைவாசி உயர்வை ஓரளவுக்கு எதிர்கொள்ள முடியும். 
கச்சா எண்ணெய் பிரச்னையில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா வளைந்து கொடுக்காமல் இருந்தால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்தான். ஆனால், அது சாத்தியம் என்று தோன்றவில்லை. 
டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி, இந்தியாவின் இறக்குமதி மதிப்பை கணிசமாக அதிகரித்து நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கும். அதை நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதில்தான் அடங்கியிருக்கிறது இதற்கான தீர்வு. சோதனையான காலகட்டத்தை எதிர்கொள்கிறது நரேந்திர மோடி அரசு - இந்தியாவும்தான்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com