ரகுராம் ராஜனின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் பெர்க்லே நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் எதிர்காலம் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

அமெரிக்காவின் பெர்க்லே நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் எதிர்காலம் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மூன்று மிகப் பெரிய சிக்கல்களை பட்டியலிட்டிருக்கிறார். பொருளாதாரப் பிரச்னைகளில் அவரது கணிப்பு இதுவரை சரியாக இருந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
 கட்டுமானத் துறை உள்பட இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பது, மின் உற்பத்தித் துறையை முறைப்படுத்தி மின்சாரம் சேதாரமின்றி முறையாக மக்களுக்குச் சென்று அடைவதை உறுதிப்படுத்துவது, வங்கித் துறையின் வாராக்கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பது ஆகிய மூன்று காரணிகள் அவரால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த வளர்ச்சி தேவையான அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கு பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவை வரி விதிப்பு ஆகிய இரண்டு நடவடிக்கைகளும் முக்கிய காரணிகள் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.
 ரொக்கமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத கருப்புப் பணத்தை ஒழிப்பது என்பதுதான், அதிக மதிப்புச் செலாவணிகளை செல்லாததாக்கும் முடிவுக்கு முக்கியமான காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரால் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீரிலும், நக்ஸல் பாதிப்புள்ள பகுதிகளிலும் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு கருப்புப் பணம்தான் காரணம் என்கிற அரசின் வாதம் பொய்யாகியிருக்கிறது. அதேபோல, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரொக்கப் பரிமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, ரொக்கமில்லா பரிமாற்றத்துக்கு வழிகோலும் என்கிற வாதமும் நடைமுறைச் சாத்தியமல்ல என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபணமாகியிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும்கூட தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடர்கிறது என்பதிலிருந்து அரசின் நோக்கங்களான கருப்புப் பண ஒழிப்பு, ரொக்கமில்லா பரிமாற்றம் ஆகியவை ஈடேறவில்லை என்பது உறுதிப்படுகின்றன.
 நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு பிரச்னைகளை சுமக்க வேண்டி வந்தது. ஆனால், அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து நரேந்திர மோடி அரசின் கவனத்தை பண மதிப்பிழப்பு முடிவு திசை திருப்பியது என்பதுதான் உண்மை. எதையோ பெரியதாக சாதித்துவிட முடியும் என்று நினைத்து மோடி அரசால் எடுக்கப்பட்ட அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கும் முடிவு, தேவையில்லாத புதிய பிரச்னைகளை அரசுக்கு உருவாக்கி அதன் செயல்பாட்டை முடக்கியதுதான் கண்ட பலன்.
 மிக அதிகமான விலைவாசி ஏற்றம், நாணய மதிப்புக் குறைவு ஆகியவற்றை பொருளாதாரம் எதிர்கொள்ளும்போது மட்டுமே, ரூபாயின் மதிப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். 2012-13-இல் 5.4%-ஆகவும், 2013-14-இல் 6.1%-ஆகவும் இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு 2014-15-இல் 7.2%-ஆகவும், 2015-16-இல் 8.1%-ஆகவும் வளரத் தொடங்கியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு மாதம் முன்னால் அக்டோபர் 2016-இல் வருடாந்திர விலைவாசி உயர்வு வெறும் 4.2%-ஆக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் தடம் புரள வைத்தது அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை.
 கடந்த மார்ச் 2017-இல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சாதனையாக முன்வைத்து பாஜக உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு வரலாறு காணாத விதத்தில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இப்போது பாஜக ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான தேர்தல்களில் அதே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஆயுதமாக மாறியிருக்கிறது. பாஜக அது குறித்து பேசுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் எல்லையில் நடத்திய துல்லியத்தாக்குதல்கள் குறித்து மட்டுமே பெருமைப்பட்டுக்கொள்வதிலிருந்து, அந்த நடவடிக்கை எந்த அளவுக்கு அரசுக்குக் "கை கொடுத்திருக்கிறது' என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 இந்தியாவில் வேலையில்லாதவர்கள் விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.9%. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான அளவு. ரொக்க பரிமாற்றம் சார்ந்த கிராமப்புற விவசாயிகளும், சிறு தொழில் முனைவோரும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதன் விளைவுதான், இப்போது காணப்படும் வேலைவாய்ப்பின்மைக்கு காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கருப்புப் பணம், ரொக்கமில்லாப் பொருளாதாரம் ஆகியவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரடி வரி வசூல் அதிகரித்திருப்பது குறித்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கையும் வழிகாட்டுதலும் ரகுராம் ராஜனால் வழங்கப்பட்டிருக்கிறது. நல்ல பொருளாதார, நிதி நிர்வாக ஆலோசகர்கள் இல்லாததன் விளைவை நரேந்திர மோடி அரசு சந்திக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com