ஏன் இந்த தயக்கம்?

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, மத்திய தகவல் ஆணையர் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது;

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, மத்திய தகவல் ஆணையர் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது; நியாயமானதும்கூட. நீண்ட நாளாகவே பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி இப்போது மத்திய தகவல் ஆணையரால் எழுப்பப்பட்டிருக்கிறது, அவ்வளவே.
உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமல், வங்கிகளில் பல நூறு கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருப்போரின் பெயர்ப்பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட மறுப்பது ஏன் என்பதுதான், மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு ரிசர்வ் வங்கியிடம் எழுப்பியிருக்கும் கேள்வி. தகவல் பெறும் சட்டப்படி கோரப்பட்டிருக்கும் விவரங்களைத் தராமல் இருப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக்கூடாது என்றும் மத்திய தகவல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.
இந்தியாவின் வங்கித்துறை, கடந்த சில ஆண்டுகளாகவே வாராக்கடன் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இந்தியாவின் 26 வங்கிகளின் மொத்த வாராக்கடனின் அளவு ஏறத்தாழ ரூ.7.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டைவிட இது 50% அதிகம். வங்கிகளின் மொத்த வாராக்கடனான சுமார் ரூ.7.5 லட்சம் கோடியில், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு மட்டுமே சுமார் ரூ.6.16 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டைவிட, இந்த நிதியாண்டில் வங்கிகளின் வாராக்கடன் ரூ.2.5 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. 
கடந்த செப்டம்பர் 2017-இல் ஓரளவுக்கு வாராக்கடன் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஜூன் மாதம் 9.04%-லிருந்து 8.93%-ஆகக் குறைந்தது. ஆனால், மார்ச் 2018-இல் அதுவே மளமளவென்று உயர்ந்து 10.14%-ஆக அதிகரித்துவிட்டது. பொதுத்துறை வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்தக் கடனில் 13.4% வாராக்கடன்.
ஆரம்பம் முதலே தேசப் பொருளாதாரத்தின் நலனையும், வங்கிகளுக்கும் பெரும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவையும் காரணம் காட்டி, பொதுத்துறை வங்கிகளும் சரி, இந்திய ரிசர்வ் வங்கியும் சரி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில், பெரும் கடனாளிகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்து வந்திருக்கின்றன. இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
2015-இல் உச்சநீதிமன்றம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வாராக்கடனாளிகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பொதுத்துறை வங்கி அல்லது தனியார் வங்கிக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்பில்லை. அதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் வாராக்கடன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது இந்திய ரிசர்வ் வங்கியின் கடமை என்று தனது தீர்ப்பில் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட, வங்கிகளின் கண்காணிப்பு அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படாமல் இருந்தால் எப்படி சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்று கேள்வி எழுப்புகிறார் மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு, மத்திய அரசையும் குற்றம்சாட்டத் தவறவில்லை. பெரும் வாராக்கடனாளிகள் குறித்த தகவல்களை மத்திய அரசும் பகிர்ந்துகொள்ள மறுக்கிறது என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சகம் வாராக் கடனைத் திரும்பப் பெறுவதற்கான தனது முயற்சிகள் குறித்து ஏன் மக்களிடம் விளக்கம் அளிக்கவில்லை என்று தகவல் ஆணையர் எழுப்பியிருக்கும் கேள்வியை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் நீண்டகாலமாகவே எழுப்பி வருகின்றனர். 
வங்கிகளுக்கு, அதிலும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமாக, வேண்டும் என்றே கடன் பாக்கி வைத்திருப்பவர்களின் பாக்கிகளை வசூல் செய்ய மத்திய அரசும், வங்கிகளும் அதன் கண்காணிப்பு அமைப்பான ரிசர்வ் வங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. வங்கியில் பெரும் கடன் பாக்கி வைத்திருப்பவர்கள் எல்லாருமே வேண்டுமென்றே கடன் பாக்கி வைத்திருப்பவர்கள் என்று கருதிவிட முடியாதுதான். அதே நேரத்தில், கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் விமர்சனத்துக்கு காரணம். 
வாகனக் கடன், வீட்டுக் கடன், சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோரின் கடன் ஆகியவற்றின் மீது உடனடியாக நட
வடிக்கை எடுத்து, அவர்களது வாராக்கடன் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் புகைப்படங்களுடன் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வங்கிகள், பல நூறு கோடி ரூபாய் வங்கியை ஏமாற்றி கடன் பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மட்டுமல்ல, அவர்கள் குறித்த விவரங்களையும் வெளியிடாமல் மறைப்பது, வாக்களித்த மக்களுக்கு அரசு இழைக்கும் மிகப்பெரிய அநீதி. இதை மோசடி என்று சொன்னாலும்கூடத் தவறில்லை.
மத்திய தகவல் ஆணையம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக கடன் பாக்கி வைத்திருப்போரின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரியிருக்கிறது. நவம்பர் 16-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியிருக்கிறது. அந்த விவரங்களை வழங்குவதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com