தலையங்கம்

கனவு நனவாகாது!

ஆசிரியர்

மெட்ரோ ரயில், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மால்கள் என்று இந்தியாவின் நகரங்கள் அசுர வளர்ச்சி அடையும் வேளையில், நகரங்களில் வீடில்லாமல் தெருவோரங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து அரசும் சரி, சமூக ஆர்வலர்களும் சரி, ஊடகங்களும் சரி போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 
வீடில்லாதவர்கள் என்போர் தெருவோரங்களிலும், நடைபாதைகளிலும், மேம்பாலங்களுக்கு அடியிலும், திறந்த வெளிகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும், மண்டபங்களிலும், ரயில் நிலையங்களிலும் வாழ்பவர்கள் என்று வீடில்லாதவர்களுக்கு அரசு விளக்கம் தருகிறது. இதுபோல பல லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்று தெரிந்தும்கூட, அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் மத்திய - மாநில அரசுகளோ, ஊராட்சி அமைப்புகளோ எந்தவிதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. 
அரசின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 18 லட்சம் பேர் இதுபோல வாழ்கிறார்கள். தன்னார்வ அமைப்புகள் நடத்தும் ஆய்வுகளின்படி, இந்தியாவில் வீடில்லாமல் தெருவோர வாசிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 லட்சத்துக்கும் அதிகம். புறம்போக்கு நிலங்களில் குடிசைகள் அமைத்து வாழ்பவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர்களையும் சேர்த்தால் குடியிருக்க வீடில்லாமல், இருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும். 
2016-லேயே உச்சநீதிமன்றம், நகர்ப்புறங்களில் வீடில்லாமல் வாழ்வோருக்கான அடிப்படை வசதிகள் குறித்தும், அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டியது குறித்தும் மத்திய அரசை விமர்சித்தும், கண்டித்தும் உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறது. குறிப்பாக, தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர் காலங்களில் வசிக்க வீடில்லாமல் தெருவோரம் வாழ்பவர்களுக்கான தற்காலிக உறைவிடங்களை வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அப்படியிருந்தும் இந்த பிரச்னை தீர்வு காணப்படாமலும், தீர்வு காண முனைப்புக் காட்டப்படாமலும் தொடர்கிறது.
2013 செப்டம்பர் மாதம், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (நேஷனல் அர்பன் லைவ்லிஹுட் மிஷன்) அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய அரசு ஆண்டுதோறும் நகர்ப்புறங்களில் வீடில்லாமல் வாழ்பவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்கிறது. வேடிக்கை என்னவென்றால், மத்திய அரசால் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை அல்லது மடைமாற்றம் செய்யப்பட்டு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான். இதே நிலைமை தொடர்ந்தால், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் என்பது மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் நிதியுதவி பெறுவதற்கான பெயரளவுத் திட்டமாக மாறிவிடக் கூடும்.
2016-இல், போதுமான நிதி ஆதாரம் இருந்தும்கூட வறுமையில் வாடும் நகர்ப்புற ஏழைகளுக்கு உறைவிடம் வழங்கும் திட்டம் மத்திய - மாநில அரசுகளால் செயல்படுத்தப்படாமல் இருப்பதை உச்சநீதிமன்றம் கண்டித்தது. கடந்த ஆண்டு இன்னும் ஒருபடி மேலே போய், மத்திய அரசால் இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதைக் கணக்குத் தணிக்கை ஆணையர் கண்காணிக்க வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தது. இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு விசித்திரமான வாதத்தை முன் வைத்தது. தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ரூ.1,000 கோடி, வீடில்லாத நகர்ப்புற ஏழைகளுக்கு இருப்பிட வசதிக்காக மட்டுமல்லாமல், ஏனைய பணிகளுக்கும் சேர்த்துத்தான் என்பதுதான் அந்த வாதம். 
முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒப்பிடும்போது, இந்தியாவில் குடியிருக்க வீடில்லாதவர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. கிராமப்புற இந்தியாவில் வீடில்லாதவர்களுடைய எண்ணிக்கை 28% குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நகரங்களில் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்திருக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில்லாமல் மக்கள் நகரங்களை நோக்கி நகர்வதன் விளைவுதான் இது என்பதைத் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உச்சநீதிமன்றத்தில் இந்த பிரச்னை நீதிபதிகள் மதன் லோக்கூர், தீபக் குப்தா முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2016 - 17-இல் ரூ.412 கோடியும், 2017 - 18-இல் ரூ.228 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி செலவிடப்படாமல் இருந்தது தெரியவந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடில்லாதவர்களின் வசதிக்காக 790 நகரங்கள் நிதியுதவி பெறுகின்றன. இதை மத்திய அரசு கண்காணிக்காவிட்டால், உயர்நீதிமன்றங்களின் மேற்பார்வையில் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணித்தால் என்ன? என்கிற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு தலைமை வழக்குரைஞர் உடனடியாக நீதிமன்றத்திலேயே ஒப்புதல் அளித்தது மிகப்பெரிய வேடிக்கை. 
நீதிமன்றமே அரசின் செயல்பாடுகளை எல்லாம் கண்காணிப்பது, நடைமுறைப்படுத்துவது, விதிமுறைகளை வகுப்பது என்கிற வழிமுறைக்கு ஆட்சியாளர்கள் மனமுவந்து வழிகோலுவது விசித்திரமாக இருக்கிறது. 2022-க்குள் இந்தியாவிலுள்ள அனைவருக்கும் வீடு என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு கனவாக இருக்குமே தவிர, நனவாகப் போவதில்லை என்பதைத்தான் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் செயல்பாடு வெளிச்சம் போடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT