வீரம் மதிக்கப்படவில்லை!

முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நிறைவு கடந்த ஞாயிறன்று உலகமெல்லாம் கொண்டாடப்பட்டது.


முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நிறைவு கடந்த ஞாயிறன்று உலகமெல்லாம் கொண்டாடப்பட்டது. சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் 11-ஆம் நாளில்தான் முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 
முதலாம் உலகப்போரில் இங்கிலாந்து ராணுவத்திற்கு அன்றைய பிரிட்டிஷ் இந்தியா பெரும்பாலான வீரர்களையும் போருக்கான பொருள்களையும் வழங்கியது. ஏறத்தாழ 15 லட்சம் இந்திய வீரர்கள் அந்தப் போரில் இங்கிலாந்துக்காக ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 74,187 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 70,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தும், ஊனமடைந்தும் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாகத்தான் ஐரோப்பிய நாடுகள் முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நிறைவை போரில் மாண்ட இந்திய வீரர்களின் நினைவு அஞ்சலியாக கொண்டாடின.
இதுபோன்ற நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு ஐரோப்பியர்கள் வழக்கமாக அஞ்சலி செலுத்த, மலர் கொத்துகளை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ராணுவ வீரர்களின் நலனுக்காக வழங்குவார்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக, வீரர்களின் நினைவாகவும் அண்ணல் காந்தியடிகளின் நினைவாகவும் கதர் தொப்பிகள் லண்டன் மாநகர வீதிகளிலும், இங்கிலாந்தில் சிறிய, பெரிய நகரங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட பிரமுகர்கள் அந்தக் கதர் தொப்பியை அணிந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இங்கிலாந்தில் நடந்த முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நிறைவு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வு வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில், முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது தொடர்ந்து அடித்ததுபோல தேவாலயத்தில் மணியோசை விண்ணைப் பிளந்தது. பிரிட்டிஷ் மகாராணி உள்ளிட்ட அரச குடும்பத்தினரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 
பிரிட்டனில் மட்டுமல்ல, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் முதலாம் உலகப்போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் நன்றியுணர்வுடன் அஞ்சலி செலுத்தத் தவறவில்லை. ஏற்கெனவே முதலாம் உலகப்போரின்போது, பெல்ஜியத்தில் போரில் ஈடுபட்ட 1,30,000 இந்திய வீரர்களின் நினைவாக 2002-இல் ஒரு நினைவுச் சின்னம் ஏற்கெனவே எழுப்பப்பட்டிருக்கிறது. குறைந்தது 10,000 இந்திய வீரர்களுக்கும் அதிகமானோர் பெல்ஜியத்தில் மட்டும் அந்தப் போரில் உயிரிழந்தனர். முதலாம் உலகப்போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்காக நினைவுச் சின்னம் ஒன்று இப்போது பிரான்ஸிலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நவம்பர் 10-ஆம் தேதி திறந்துவைத்தார். 
முதலாம் உலகப்போரில் இந்திய வீரர்கள் உற்சாகமாகப் பங்கேற்றார்கள் என்றுதான் கூற வேண்டும். லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் முதலாம் உலகப்போரில் பங்கு பெற்ற வீரர்களின் நேரடி அனுபவங்கள் ஏறத்தாழ 1,000 பக்கங்களுக்கு மேல் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1970-இல் பதிவு செய்யப்பட்ட அந்த நேரடி அனுபவங்களின் மூலம் படிப்பறிவில்லாத 15 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் எந்தளவுக்கு மனிதாபிமானமே இல்லாமல் நடத்தப்பட்டனர், இன வெறியால் துன்புறுத்தப்பட்டனர் என்றெல்லாம் பதிவுகள் காணப்படுகின்றன. பிரிட்டிஷாரும், ஐரோப்பியர்களும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் பின்னணியில், நன்றிக்கடனும் அவர்களது குற்ற உணர்வும் காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், நாம் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
முதலாம் உலகப்போரில் இறந்த வீரர்களுக்காக துருக்கியில் ஹெல்லஸ் மெமோரியல் என்கிற நினைவுச் சின்னம் கட்டப்பட்டிருக்கிறது. பிரான்ஸில் நூவே சாப்பல் மெமோரியல், இஸ்ரேலில் ஹைபா மெமோரியல் ஆகியவை கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அந்த வீரர்கள் குறித்து நாம் நினைத்துப் பார்ப்பதுகூட கிடையாது. தில்லியிலுள்ள இந்தியா கேட் நினைவுச் சின்னத்தில் ஏறத்தாழ 13,000 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன, அவ்வளவே. 
இந்திய ராணுவத்தின் பாட்டியாலா படை அந்த மாநிலத்திலிருந்து முதலாம் உலகப்போரில் மறைந்த வீரர்களுக்காக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியாவில் முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போரில், பிரிவினையின்போது நடந்தப் போர், சீன, பாகிஸ்தான் யுத்தங்கள் ஆகியவற்றில் எல்லாம் வீரத்துடன் பங்கெடுத்த இந்திய ராணுவத்தினருக்காக ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி ஏதோ சம்பிரதாயத்துக்காக நாம் கொடி நாள் கொண்டாடுகிறோமே தவிர, ராணுவத்தினரின் முக்கியத்துவத்தை உணரவோ, அவர்களது உயிர் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூறவோ செய்யவில்லை என்பதை வேதனையுடன் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படைக்கு உலகிலேயே மூன்றாவது அதிகமான வீரர்களைப் பங்களிக்கும் நாடு இந்தியாதான். இன்னும்கூட கிராமப்புறங்களில் ராணுவ வீரர் என்று சொன்னால் மக்கள் மத்தியில் தனி மரியாதை தரப்படுகிறது. அதே அளவு மரியாதையும் முக்கியத்துவமும் இன்றைய படித்த நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. 
முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நிறைவு, உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவு தினத்தை உலகமே அனுசரித்தபோது, இந்தியா அது குறித்த சிந்தனையே இல்லாமல் இருந்ததை என்னவென்று சொல்வது?
வீரன் என்பவன் தலைமுறை கடந்து மக்கள் மனதில் நிலைத்திருப்பவன். வீரனுக்கு மரணம் கிடையாது. இந்த உண்மையை இன்றைய தலைமுறையினருக்கு உணர வைக்கும் கடமை அரசுக்கும் சமுதாயத்துக்கும் உண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com