அழிவின் விளிம்பில்...!

கடந்த வாரம் தேசிய வன விலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியொன்றும் வெளிவந்தது.

கடந்த வாரம் தேசிய வன விலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியொன்றும் வெளிவந்தது. குஜராத் மாநிலத்திலுள்ள கிர் தேசிய வனவியல் பூங்காவில் உள்ள 23 ஆசிய சிங்கங்கள் கடந்த ஒரு மாதத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கின்றன என்பதுதான் அந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி. மூன்று வாரத்தில் 23 சிங்கங்கள் இறந்திருப்பது, எந்த அளவுக்கு நாம் வன விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்பதை வெளிச்சம் போடுகிறது.
ஆசிய சிங்கங்களின் கடைசி உறைவிடமாக இருப்பது குஜராத் மாநிலம் கிர் தேசிய வனவியல் பூங்காதான். உலகிலுள்ள மொத்த 523 ஆசிய சிங்கங்களின் உறைவிடமாக இருக்கும் இந்த வனவியல் பூங்கா இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. 
இப்போது இந்த வனவியல் பூங்காவின் நிர்வாகமும், அங்கே வாழும் சிங்கங்களின் பராமரிப்பும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்கும் 21-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் சில சிங்கங்கள் இறந்துவிட்ட செய்தி வெளிவந்தபோதே அது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் இது குறித்த கவலை எழுந்தது மட்டுமல்ல, உலகிலுள்ள பல பகுதிகளிலிருந்தும் வன விலங்கு ஆர்வலர்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கவே தொடங்கி விட்டனர். மர்ம மரணங்கள் தொடர்ந்தால் ஆசிய சிங்கங்கள் என்கிற உயிரினமே இல்லாமல் போய்விடக்கூடும் என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
உறைவிட உரிமைக்காக சிங்கங்களுக்கு இடையே நடந்த சண்டையில் சில சிங்கங்கள் உயிரிழந்தன என்பதுதான் சிங்கங்கள் மர்ம மரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்து. சிங்கங்களுக்கு நடுவில் இதுபோல உறைவிட உரிமைக்காகப் போட்டியும், பகையும் ஏற்படுவது இயல்பு. அதேபோல, ஆண் சிங்கங்கள், தங்களது பெண் இணைக்காகவும் சண்டை போட்டுக் கொள்வதுண்டு. அதனால், முதலில் சில சிங்கங்கள் மரணமடைந்தபோது வனத்துறை அதிகாரிகளின் விளக்கம் நம்பும்படியாக இருந்தது.
தொடர்ந்து மேலும் பத்து சிங்கங்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. மரணமடைந்த சிங்கங்களில் மூன்று பெண் சிங்கங்களும் இருந்தன என்பதும், இறந்த சிங்கங்களின் மீது எந்தவிதக் காயமோ, நகக் கீறல்களோ இல்லை என்பதும் ஐயப்பாட்டை எழுப்பின. இணைக்கான போட்டியில் பெண் சிங்கங்கள் கொல்லப்படுவதில்லை என்பதுதான், கிர் வனவியல் பூங்காவில் ஏற்பட்ட மரணங்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என்கிற கருத்து வலுப்பெற்றதற்கான காரணம்.
வனவியல் ஆர்வலர்களின் வற்புறுத்தலின் பேரில், ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. பூச்சிகள் செத்து விழுவதுபோல சிங்கங்கள் மரணமடைவதன் பின்னணியில், நாய்களைத் தாக்கும் அபாயகரமான டிஸ்டெம்பர் நுண்ணுயிரித் தொற்றும் ப்ரோட்டோசோல் என்கிற நோய் பாதிப்பும் இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனடியாக அமெரிக்காவிலிருந்து 300 தடுப்பூசி மருந்துகள் இதற்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றன. 30 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன.
2015-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிர் வனவியல் பூங்காவில் 523 ஆசிய சிங்கங்கள் இருந்தன. அவற்றில் 109 ஆண் சிங்கங்கள், 201 பெண் சிங்கங்கள், 73 வளர் பருவத்தில் இருப்பவை, 140 குட்டிகள். அவற்றில் இப்போது 300 மட்டும்தான் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. 2015 முதல் 2018 வரையிலான மூன்று ஆண்டுகளில் கிர் பூங்காவில் புதிதாக 120 சிங்கங்கள் இனப்பெருக்கத்தின் மூலம் பெருகின. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 180 சிங்கங்கள் இறந்திருக்கின்றன. அவற்றில் 30 சிங்கங்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றன என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
கிர் வனவியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், தொடர்ந்து ஏதாவது நோய்த் தொற்றுக்கு ஆளாகி வந்திருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அந்த வனப் பகுதியில் வாழும் ஆதிவாசிகளான மால்தாரீஸ்கள், நாய்கள், பசுக்கள் உள்ளிட்ட வளர்ப்பு மிருகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து பல்வேறு நோய்த் தொற்றுகள் சிங்கங்களைத் தாக்குகின்றன என்கிற கருத்து பரவலாகவே இருக்கிறது.
இது குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே, கிர் வனவியல் பூங்கா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் சிங்கங்களை எந்தவிதமான நோய்த் தொற்றுகள் தாக்குகின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கான பாதுகாப்பை மேற்கொண்டிருக்க முடியும். நோய்த் தொற்று மட்டுமே மரணத்துக்குக் காரணமாக இருக்க முடியாது. சிங்கங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும்கூடக் காரணமாக இருக்கலாம்.
1993 முதலே, ஆசிய சிங்கங்களுக்கு இன்னுமோர் உறைவிடம் ஏற்படுத்துவது குறித்த யோசனையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தங்கள் மாநிலத்தின் பெருமையாக மட்டுமே ஆசிய சிங்கங்கள் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் குஜராத் மாநில அரசு அதற்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறது. 2013-இல் உச்சநீதிமன்றம் அடுத்த ஆறு மாதத்தில்அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் புதிய வனவியல் பூங்காவை உருவாக்கி சில சிங்கங்களை அங்கே மாற்றும்படி உத்தரவிட்டும், அதற்கு குஜராத் மாநில அரசு ஒத்துழைப்பதாக இல்லை.
ஆசிய சிங்கங்கள் மாநில உரிமையல்ல; தேசிய உரிமையுமல்ல; உலகத்தின் சொத்து. இந்த விலங்கினம் அழிந்து விடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இனியும் மெத்தனமாக இல்லாமல் விழித்துக்கொண்டு, கிர் வனவியல் பூங்காவில் உள்ள சிங்கங்களைப் பாதுகாத்தாக வேண்டும். இதில் கெளரவம் பார்க்கக் கூடாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com