வந்தேறிகளல்ல உழைப்பாளிகள்!

பிகாரிலிருந்து குஜராத் மாநிலம் சபர்கந்தாவில் கூலி வேலை செய்த தொழிலாளி ஒருவரால் 14 மாத குழந்தை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு

பிகாரிலிருந்து குஜராத் மாநிலம் சபர்கந்தாவில் கூலி வேலை செய்த தொழிலாளி ஒருவரால் 14 மாத குழந்தை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து வேலை தேடி பிகார், உத்தரப் பிரதேசத்திலிருந்து குஜராத்துக்கு வந்தவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள். 
பாதிப்புக்குள்ளான பெண் தாக்கூர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குஜராத் க்ஷத்ரிய சேனை என்கிற அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் கடந்த 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல்பேஸ் தாக்கூர். இவர் இப்போது சட்டப்பேரவை உறுப்பினரும்கூட. குஜராத் மாநிலம் முழுவதும் குஜராத் க்ஷத்ரிய தாக்கூர் சேனை வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அல்பேஸ் தாக்கூர் அறிவித்திருக்கிறார். அதை தேசிய கட்சியான காங்கிரஸ் மெளனமாக ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனநிலையை அந்தத் தொகுதியில் ஏற்படுத்தவும், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக குஜராத்தில் நடத்தப்பட்டிருக்கும் வன்முறையை பயன்படுத்தவும் கையாளப்படும் அரசியல் சதியாக இந்தத் தாக்குதல்கள் இருக்குமோ என்கிற ஐயப்பாடு எழாமல் இல்லை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும், குஜராத் க்ஷத்ரிய தாக்கூர் சேனை தலைவருமான அல்பேஸ் தாக்கூர் இருப்பது அந்த ஐயப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது.
இதுபோல வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படுவது புதியதொன்றும் அல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்னால் மும்பையில் மதராஸிகள் என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியர்களுக்கு எதிராக சிவ சேனை தாக்குதல்களை நடத்தியது. இரண்டாண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில், குறிப்பாக பெங்களூருவில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கில் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகத்திலிருந்து அச்சத்துடன் தங்கள் மாநிலங்களுக்கு பயணிக்க நேர்ந்தது. 
மாநிலங்களுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு உள்ளேயும் மட்டுமல்ல, சர்வதேச அளவில் பிழைப்பு தேடி இடம் பெயர்தல் என்பது உலகமயச் சூழலில் தவிர்க்க முடியாததாகிவிட்டிருக்கிறது. அமெரிக்கா என்கிற நாடே புலம்பெயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டு அவர்களது உழைப்பால் செல்வச்செழிப்பான நாடாக மாறியிருப்பது உலகறிந்த உண்மை. மத்திய ஆசியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போர்களின் தாக்கத்தால் லட்சக்கணக்கானவர்கள் சிரியா, லெபனான், ஈரான், இராக், லிபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள். 
பிகார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 50,000 பேர் குஜராத் மாநிலத்திலிருந்து வெளியேறி இருப்பது அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே தடுமாற வைத்திருக்கிறது. பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னை குஜராத்திலுள்ள பல தொழிற்சாலைகளையும், வியாபார நிறுவனங்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது.
பிழைப்புக்காகக் குடியேற்றம், வேலை தேடி இடப்பெயர்ச்சி என்பதன் பின்னணியில் பரவலாகக் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம்தான் அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் எடுத்த ஆய்வு ஒன்றில் 48 சதவீதம் இந்தியர்கள் மிகவும் கவலைப்படும் பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம்தான் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
2016 - 17க்கான பொருளாதார புள்ளிவிவரத்தின்படி, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில்தான் மிக அதிகமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்தத் தொழிலாளிகள் காணப்படுகிறார்கள். இதுபோல, வெளிமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படும் மாநிலங்கள்தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிட தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றமடைந்திருக்கின்றன என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
1979-இல் மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர்கள் இடப்பெயர்வு சட்டம் நிறைவேற்றப்பட்டு வேற்று மாநிலத்துக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாடாளுமன்றம் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்பதைதான் அவ்வப்போது வேற்று மாநிலத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக குஜராத் அரசு தொழிற்சாலைகளிலும், சேவை நிறுவனங்களிலும் 80 சதவீத குஜராத்திகளை பணி அமர்த்துவது கட்டாயப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்திய குடிமகன் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், பணியாற்றவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருக்கும் நிலையில், இப்படியொரு வாக்குறுதியை குஜராத் அரசு எந்த அடிப்படையில் வழங்குகிறது என்று புரியவில்லை. வெளிமாநிலப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை எல்லா மாநில அரசுகளுக்கும் உண்டு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com