தலையங்கம்

அழிவை நோக்கிய நகர்வு...

ஆசிரியர்

பருவநிலை மாற்றம் என்கிற பேராபத்தை உலகம் எதிர்கொள்கிறது. 2052-க்குப் பிறகு, உலக வெப்பநிலையில் 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலும்கூட அதன் விளைவு பேரழிவை நோக்கி இட்டுச்செல்லும் அபாயம் காத்திருக்கிறது. அனல் காற்று, கடுமையான மழை, பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு என்று பல்வேறு இயற்கைப் பேரிடர்களை உலகம் சந்திக்க நேரிடும்.
 2015-இல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட தட்பவெப்பநிலை அளவும்கூடப் போதுமானதல்ல என்கிற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1850 முதல் 1900 ஆண்டு வரையிலான இயந்திரப் புரட்சிக் காலத்துக்கு முற்பட்ட அளவைவிட, இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகமான அளவுக்கு உலகின் சராசரி வெப்பநிலையை இலக்காக்கி இருந்தது பாரீஸ் ஒப்பந்தம். இப்போது ஏற்கெனவே 150 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட, உலகம் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் அடைந்திருக்கிறது. இன்னும் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால், வறட்சியும் வெள்ளப்பெருக்கும் புயலும் கடல் அமிலமயமாதலும் மேலும் அதிகரிக்கக்கூடும்.
 பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேசக் குழுவான ஐபிசிசி அறிக்கை சில அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, பாரீஸ் ஒப்பந்த இலக்கு, புவி வெப்பமயமாதல் பிரச்னையை எதிர்கொள்ளப் போதுமானதல்ல. குறைவான அளவு கரியமில வாயு வெளியேற்றும் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துவதும், எரிசக்தியின் தேவையைக் கட்டுப்படுத்துவதும் உடனடி அவசியம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
 ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தால் மனித இனமும் சூழலியலும் உயிரினங்களின் வாழ்வியலும் உலகளாவிய அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றன. உலக சராசரியைவிட வேகமாகவும் அதிகமாகவும் சில பகுதிகள் வெப்பமடைகின்றன. குறிப்பாக, நகரங்கள் அதிகரித்த வெப்பத்தை உணர்கின்றன. இந்த நிலையில் உலகம் 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பமடைந்தாலும் அது பலமடங்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய தீவுகள், பெரிய நகரங்கள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பிரதேசங்கள் ஆகியவை பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள். இவையெல்லாமே இந்தியாவில் காணப்படுவதால், ஏனைய நாடுகளைவிட இந்தியா மிக அதிகமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
 பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில், அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. எல்லாப் பொருளாதாரத் துறைகளும், நாடுகளும், தனி மனிதர்களும் இதுகுறித்த விழிப்புணர்வுடன் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே பேரழிவிலிருந்து உலகத்தை நாம் காப்பாற்ற முடியும். 2030-க்குள் கரியமில வாயு வெளியேற்றம் கணிசமாகக் குறைக்கப்பட்டாக வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாயு மண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு பெருமளவு அகற்றப்பட வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்த முயற்சியில் வெற்றிபெற வேண்டுமானால், மிகப்பெரிய அளவில் மரங்கள் நடப்பட்டும், வாயு மண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு அகற்றப்பட்டும் அந்த இலக்கை எட்டியாக வேண்டும்.
 இப்போதிருக்கும் நிலை தொடருமானால், 2100-க்குள் உலக வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கக்கூடும். அதன் விளைவாக கடற்கரைப் பகுதிகள் மிக அதிகமான பாதிப்பை அடையும். கடல் நீர் மட்டம் அதிகரித்து, பூமியில் நில அரிப்பு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். உலக வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் மாலத் தீவு போன்ற பல தீவுகள் கடலில் மூழ்கிவிடும். உலகிலுள்ள பல பூச்சியினங்களும் தாவரங்களும் காணாமல் போகக்கூடும்.
 இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் சீனா, வங்கதேசம், எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பின்ஸ், அமெரிக்கா, வியத்நாம் ஆகிய நாடுகளில் உள்ள 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் இன்னொரு விளைவாக ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் மலேரியா காய்ச்சல் அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். வெப்பமய அதிகரிப்பின் பாதிப்புகள் ஆப்பிரிக்க, மேற்கு - கிழக்கு ஆசிய நாடுகளைக் கடுமையாகத் தாக்க இருக்கின்றன.
 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் வாயு மண்டலத்தில் அதிகமான கரியமில வாயுவை ஏற்படுத்தும் நாடுகளை மட்டுமல்லாமல், உலகிலுள்ள எல்லா நாடுகளையும், அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. வளர்ச்சியடையும் நாடுகள் தங்களது அனல் மின் நிலையங்களையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் அகற்றி மாற்று எரிசக்தியை உருவாக்கும் முயற்சிக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் உதவினாலொழிய வாயு மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது சாத்தியமல்ல.
 வளர்ச்சியடைந்த நாடுகள், 2020 வரை இதற்காக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் ஒதுக்குவதாக 2017-இல் அளித்த வாக்குறுதியில் 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. அமெரிக்கா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலக முற்பட்டிருக்கின்றன.
 2016 முதல் 2035 வரை ஆண்டுதோறும் 2.4 டிரில்லியன் டாலர் எரிசக்தித் துறையில் மாற்றம் ஏற்படுத்த வளர்ச்சி அடையும் நாடுகள் ஒதுக்கினால் மட்டுமே, அதிகரித்து வரும் வெப்பமயமாதலைத் தடுக்க முடியும். ஏற்கெனவே காலம் கடந்துவிட்டிருக்கிறது. இனியும் மெத்தனமாக இருந்தால், நாடு, மதம், இனம், மொழி, உயிரின வேறுபாடு என்பதையெல்லாம் கடந்து, பேரழிவை நோக்கிய உலகின் நகர்வை யாராலும் தடுக்க முடியாத பேராபத்து காத்திருக்கிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT