அமைதி காக்கிறது இந்தியா!

தேர்தல் முடிவுகளை நிராகரிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துபார்க்க முற்பட்டிருக்கிறார் மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன்.

தேர்தல் முடிவுகளை நிராகரிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துபார்க்க முற்பட்டிருக்கிறார் மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன். செப்டம்பர் 23-ஆம் தேதி மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட முகமது சோலி 58% வாக்குகள் பெற்று மாலத்தீவின் ஏழாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 17-ஆம் தேதி அதிபர் அப்துல்லா யாமீனின் பதவிக்காலம் முடியும்போது, முகமது சோலி பதவியேற்க இருக்கிறார்.
 தேர்தல் தோல்வியைப் பெருந்தன்மையுடன் அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்றுக்கொண்டபோது, அனைவருக்குமே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. தனக்கு எதிராக மக்களால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை அணுகினார் அதிபர் அப்துல்லா யாமீன். செப்டம்பர் 23-இல் நடந்த அதிபர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அதிபர் தேர்தலில் வாக்குச்சீட்டில் மை பயன்படுத்தப்பட்டதில் சதி இருக்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு. மாலத்தீவின் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறது.
 தனக்கு நெருக்கமானவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தும் கூட, தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அதிபர் யாமீன் கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி, தேர்தல் ஆணையர்கள் ஐவரில் நான்கு பேர் மாலத்தீவிலிருந்து வெளியேறி, இலங்கையில் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்திலும் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
 அதிபர் அப்துல்லா யாமீனின் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் விசித்திரமான வாதம் ஒன்றை முன்வைத்தனர். வாக்குப்பதிவில் நடந்த முறைகேடு குறித்து "பெயர் குறிப்பிட முடியாத மூன்று சாட்சிகள்' ரகசியமாக என்ன நடந்தது என்று கூறத் தயாராக இருப்பதாக அவர்கள் முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் தங்கள் விரல்களில் ஒரு வகையான மோதிரங்களை அணிந்துகொண்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக வாக்குப்பதிவு செய்திருப்பதாக அதிபர் யாமீன் தரப்பு முன்வைத்த வாதத்தையும் நீதிபதிகள் ஆதாரமற்றது என்று ஒதுக்கியிருக்கிறார்கள்.
 அதிபர் யாமீனின் மாற்றாந்தாய் மகனான மம்மூஸ் அப்துல் கயூம் என்பவர்தான் 1978 முதல் 2008 வரை 30 ஆண்டுகள் மாலத்தீவின் சர்வாதிகாரியாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். 2008-இல் மாலத்தீவில் தேர்தல் அறிவித்தபோது, அவரை முன்னாள் அதிபர் முஹமது நஷீத் தோற்கடித்து அதிபரானார். 2013-இல் நடந்த அதிபர் தேர்தலில் முதல் சுற்றில் நஷீத் 45.45% வாக்குகளும், அப்துல்லா யாமீன் 25.35% வாக்குகளும்தான் பெற்றனர். குறைந்தது 50%- க்கும் அதிகமாக வாக்குகள் பெற்றவர்தான் அதிபராக வேண்டும் என்பது மாலத்தீவில் விதிமுறை என்பதால், இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் நஷீத் 48.61% -ம், அப்துல்லா யாமீன் 51.39 % -ம் பெற்றதும், அப்துல்லா யாமீன் அதிபரானதும் தேர்தல் முறைகேடுகளால்தான் என்கிற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. அதிபராகப் பதவியேற்ற அப்துல்லா யாமீன் முன்னாள் அதிபர் முஹமது நஷீத் மீது ஆதாரமில்லாத பல வழக்குகளைத் தொடுத்ததால், அவர் மாலத்தீவை விட்டு வெளியேறி இலங்கையில் தஞ்சமடைந்தார் என்பது வரலாறு.
 செப்டம்பர் 23 அன்று நடந்த தேர்தல் முடிவை எப்படியாவது முடக்கி, அதிபராக தானே தொடர்வதற்கான எல்லா முயற்சிகளையும் அதிபர் அப்துல்லா யாமீன் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு எதிராகப் போட்டியிட்டு 58% வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் முகம்மது சோலிக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன. மக்கள் மன்றமும், நீதிமன்றமும் கூட, அதிபர் அப்துல்லா யாமீன் பெருந்தன்மையுடன் தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
 அப்துல்லா யாமீன், ஆரம்பம் முதலே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தவர் என்பதால், மாலத்தீவில் அரசியல் மாற்றம் ஏற்படுவதை இந்தியா விரும்புவதில் வியப்பில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு மாலத்தீவு மிகமிக முக்கியம். இந்தியாவுக்கு வரும் எல்லா சரக்குக் கப்பல்களும் மாலத்தீவு வழியாகத்தான் வந்தாக வேண்டும். லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடற்படை தளம், மாலத்தீவின் வட எல்லையில் அமைந்திருக்கும் துராக்குனு தீவிலிருந்து வெறும் 100 கி.மீ. தொலைவில்தான் அமைந்திருக்கிறது.
 இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் மாலத்தீவில் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும் செயல்படும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கு மிக அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்களை அனுப்பும் நாடாக மாலத்தீவு இருப்பதுதான் அதற்குக் காரணம்.
 அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தபோதும், எதிர்க்கட்சியினரும், நீதிபதிகளும் சிறையில் அடைக்கப்பட்ட போதும், மாலத்தீவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமல் இந்திய அரசும், நமது ராணுவமும் பொறுமை காத்தன. 1988-இல் மாலத்தீவில் நடந்த ராணுவப் புரட்சியை அடக்குவதற்கு அன்றைய அதிபரின் அழைப்பை ஏற்று இந்திய ராணுவம் உதவியது. இப்போது ஜனநாயக முறையிலான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் இந்தியா தலையிடாமல் வேடிக்கை பார்க்கிறது. தலையிடுவதற்கான அவசியத்தை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்படுத்த மாட்டார் என்று நம்புவோமாக!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com